என்னை ஆட்கொண்டது பூவின் மனம்

மென்மையென சொன்னாலே, ஞாபகம் வருகிறது பூக்களைப் பற்றிய நினைவுகளே...

பூந்தோட்டக்காரனாக இருந்துவிட ஆசைதான் பூக்கள் சூழ்ந்து வாழ்வதாலே...

ஆஹா! என்ன அழகு!!..
ரோஜா பூக்களின் கூட்டம்...
அருகில் நெருங்கினேன் ஆச்சரியத்தோடு...
காற்றில் ஏதோ ஒரு இனிமையான வாசம் என்னை சூழ்ந்து வசமாக்க மெய்மறந்தவன்,
பூக்களின் அருகில் அமர்ந்தேன் நானே...

அதிலே ஒரு பூ என்னைக் கவர்ந்திழுக்க அருகிலே சென்றவன் எட்டிப் பறிக்க கைகளை நீட்டினேன் அனிச்சை செயலாய்...

ஹெய்! நில்..
என்னை பறிக்காதே...

நான் கேட்டது நனவா? கனவா?
யாருடைய குரல் அது!?...

ஹெய்! பேசியது நான்...

பூவிலிருந்து வந்தது...

ஓ! நீ பேசிவாயா?
ஆச்சரியமாக உள்ளதே!

ஏன்? நான் பேசக் கூடாதா?
அழகைப் பறிக்க நினைக்கும் நீயே பேசும் போது நான் பேசக்கூடாதா?

பூ எந்த காலத்தில் பேசியது?!

அடேய்! முட்டாள் மானிடா!
பேசாமல் அமைதியாக இருப்பவர்களெல்லாம் ஊமைகளென்று எண்ணிவிட்டாயா?

அது தானே உண்மை..
இது நாள் வரை நீ ஒரு ஊமை...

ஆமாடா...
ஆனால், உன்னிடம் ஏனோ தெரியவில்லை?! பேசிவிட்டேன்...
என் மனம் உன்னிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறது...
அதை உன் மனதால் மட்டுமே கேட்க முடியும்...
அது என்னவென்று கண்டுபிடி??

ஐயையோ! என் மனதை காணவில்லையே!?
எப்படி கண்டுபிடிப்பேன்?...

ஹாஹா...
இதோ என்னிடம் இருக்கிறதே!..

ஹெய்! மந்திரம் செய்தது போதும்..
என் மனதை திருப்பிக் கொடுத்துவிடு...

ஹிஹிஹி!... தரமாட்டேன்...

சற்று மௌனம்...

உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது...
சரி. போனால் போகிறது..
இந்தா! இது என்னுடைய மனம்...
பத்திரமாக பார்த்துக் கொள்.. காயப்படுத்திவிடாதே...

சரி. நீயும் என் மனதைப் பத்திரமாக பார்த்துக் கொள்...

ம்ம். சரி...

மனதின் பரிமாற்றம் முடிந்தது இனிதே...

உடலால் மனிதன் நான்...
மனதால் பூ நான்...
மிகவும் மென்மையாகிவிட்டேன்...

புயல் காற்றைக் கண்டு பயந்தேன் உதிர்ந்து விடுவேனோ என்று...
மனித கூட்டம் விட்டு விலகி சென்றேன் என்னை கசக்கி விடுவார்களோ என்று...

மென்மையென்றால் பலவீனமா?
இல்லை...
முற்றிலும் இல்லை...

மென்மையே வாழ்க்கையை அனுபவிக்கக் காரணக் கருத்தாவாகிறது...

மழையில் நனைந்தேன்...
மழைத்துளியின் ஸ்பரிசம் உணர்ந்தேன்...
தென்றல் காற்றில் தியானம் செய்தேன்...

கண்ணீர் சிந்துவோரைக் கண்டால் கண்கள் கடலாகின...
பூ மனதிற்குள் புயலுண்டு என்பதை சூழல்கள் நிரூபித்துக் காட்டின...

மனிதனை படித்தேன்...
புனிதனை படித்தேன்...
செந்தமிழைப் படித்தேன்...
தேனமுதம் குடித்தேன்...
குழந்தையாய் இருந்த நான் கவிஞனாய் பிரசவித்தேன்...
காரணம் யாரு?
அந்தப் பூ...
அது செய்த தியாகம்...

நன்றி சொல்ல மீண்டும் அந்தப் பூவைக் காண அங்கு சென்றேன்...
பூ அங்கு இல்லை...
பூந்தோட்டமும் அங்கு இல்லை...

துர்நாற்றம் வீசும் குப்பைக் கிடங்காய் மாறி இருந்தது அந்த இடமே...

சோகம் தாளாமல் அழுதேன்...

ஹெய்! அழாதே!...

அதே குரல்...
ஆனால், என்னில் இருந்து கேட்கிறதே...

நான் உன் கூடவே தான் இருக்கிறேன்,
உன் மனமும், என் மனமும் ஒன்றுபட்டதாலே...

உடலுக்குத் தானே அழிவு...
மனம் இருக்கிறது இரண்டற கலந்து...
புரியாது அழுத நானொரு மூடன்...

எனக்கு உன்கிட்ட பிடிச்சதே அந்த மூடத்தனம் தான்...

அப்படியா?
அது உண்மை தான்...
சரி, வா...
ஒரு கூண்டில் இரு கிளிகளாய் வாழலாம் வா....

சரிடா, மூடா...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-Nov-17, 9:29 am)
பார்வை : 734

மேலே