குரங்கு - கலி விருத்தம்

நுண்பொரு ளானை நுகர்ந்திட்டு வான்பொருள்
நன்குடை யானை நயந்தனர் கோடலின்
வம்பிள மென்முலை வாள்நெடுங் கண்ணவர்
கொம்பிடை வாழுங் குரங்கும் புரைப. 61 வளையாபதி

பொருளுரை:

கச்சணிந்த இளமையும், மென்மையான முலையினையும் வாள்போன்ற நெடிய கண்களையும் உடைய கணிகை மகளிர், நிறைந்த அரும்பெரும் பொருளை உடையவனை அவன் செல்வந் தேயுந்துணையும் அவனோடு கூடி இன்புற்றிருந்து அப்பொருள் அழிந்த பின்னர், வானளவு மிகுந்த பொருள் உடைய மற்றொருவனை விரும்பிப் போதலாகிய செய்கையைச் சொல்லப் போனால், மரக் கொம்புகளிலே வாழ்ந்து அவற்றுள் ஒன்றிலுள்ள மலர் காய் கனி முதலியவற்றைத் தின்று தீர்த்தபின் மற்றொரு கிளையில் தாவிச் செல்லுகின்ற குரங்கையும் ஒப்பர் எனப்பட்டது.

விளக்கம்:

நுண்பொருள் - தேய்ந்து நுண்ணியதாகிய பொருள், அழிந்து குறைவுற்ற சிறுபொருள்.

கணிகையர் ஒருவனிடமுலுள்ள பொருளைச் கவர்ந்த பின்னர் அவன் வறியனாக, மற்றொரு பொருளுடையானைச் சேர்வதனால் ஒரு கொம்பிலுள்ள இரை தீர்ந்த பின்னர் மற்றொரு கிளைக்குத் தாவுகின்ற குரங்கையும் ஒப்பர் எனப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Nov-17, 8:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே