இலங்கை இன்னல்!
(இந்தக் கவிதை ஈழ்ப் போர் உச்சத்தில் இருந்தபோது எழுதப்பட்டது)
இந்தியத்தாயின்
கழன்று விழுந்த சலங்கை
உலக வரைபடத்தில்
அதுவே இலங்கை!
ராவணன் முதல்
ராஜபக்சே வரை அங்கு
அரக்கர் கையில்தான்
ஆட்சிப்பொறுப்பு!
தமிழனின் மரண ஓலமே
அங்கு தேசிய கீதம்!
அழிந்து வரும் உயிரின
வரிசையில் அங்கு
தமிழினமே முதலிடம்!
போர் என்ற
பெயரில் அங்கு
தூர் வாரப்படுகிறது தமிழினம்!
அங்கு தமிழன் வாழ்வு
பதுங்கு குழியில் தொடங்கி,
சவக்குழியில் முடிகிறது!
விமானத்தாக்குதலால் விதவையானோர் பாதி
கொத்தெரி குண்டுகளால்
குத்துயிரானோர் மீதி!
பீரங்கிகளுக்கு இரையாய் பிஞ்சுகளையும்,
இயந்திர துப்பாக்கிகளுக்கு
இரையாய் இளைஞர்களையும்,
பறிகொடுத்து பறிகொடுத்தே
பறிதவிக்கிறது நம்மினம்!
ஈழத்தமிழனின் மரணச்செய்தி ஒவ்வொன்றும்
உலகத்தமிழனின் காதுகளில்
கன்னி வெடிகளாய் ஒலிக்கிறது!
அதுவே சிங்கள காதுகளில்
மங்கள இசையாய் இனிக்கிறது!
இலங்கைத்தீவுப் பிரச்சனை
கன்னித்தீவாய் தொடர்கிறது!
இதைக்கண்டு எங்கள் நெஞ்சில்
கவலை ரேகை படர்கிரது!
வெட்டிபோட்ட விரகாய் அங்கு
தமிழர் கூட்டம் மடிகிறது
கட்டிக்கொண்ட கைகளை நீட்ட
இந்திய அரசு மறுக்கிறது!
இரக்கம் மறந்த
இந்திய அரசே
உறக்கம் கலைந்து
உடனே உதவு!
ஈழத்தமிழர் வாழும் பொருட்டு
ஆயுத உதவி
அனைத்தும் நிறுத்து!
போலிச் சாக்கு
கூறல் தவிர்த்து
போரை நிறுத்த
குரலை உயர்த்து!
தட்டிக் கேட்கத்
தமிழகம் உண்டு
தட்டிக் கழிக்கும்
தவறை நிறுத்து!
- நிலவை.பார்த்திபன்
.