உனக்கான சில உளறல்கள்

உன்
அரும்பு பல்வரிசையின்
ஒளிச்சிதறலில்
சிதைந்த நொடி
எனக்குள்
படைக்கப்பட்டதே
உனக்கான
என் உலகங்கள்!
**********

நீ
சிந்திவிட்டு போன
புன்னகையை எல்லாம்
சிறுக சிறுக
சேமித்ததால்
பெரும் கடன்காரனாகி
நிற்கிறேன்
காதலில்!
**********

"நீ பொய் பேசும்
கவிதைக்காரன்
என்பதால் உன்னை
பிடிக்கவில்லை" என்ற
உன் கண்கள்
சொல்லி சென்றது
நீதான்
என்னை விட
பெரிய பொய்க்காரி!
**********

பக்கம் பக்கமாய்
எனை படித்து
முடித்த பின்பும்
"ம்...உங்களபத்தி
சொல்லுங்க" என்று
கேட்க
எப்படித்தான்
மனசு வருகிறது
உனக்கு?
**********

மலர்த்தேகம் தீண்டி
யுகத்தாகம்
தீர்க்கத் துடிக்கும்
மழைக்கு குடையென
நீ ஏன்
கறுப்புக்கொடி
காட்டுகிறாய்?
ஆதங்கத்தில்
மேலும் வான்
அழுதுப் புரள்வதை
பார்!
**********

நீ
உறங்கும் போதும்
கால்க்கொலுசை
கழட்டி வைக்க
மாட்டாயா?
உன்
சிறு பாத அசைவில்
பொழுது புலர்ந்ததாய்
பூபாளிக்க
துவங்கிவிட்டன
புள்ளினங்கள்!
**********

நீ
சாப்பிட்ட
மிட்டாய்த்தாளை
கசக்கி எறிந்தபடி
"இதோட எட்டு" என்றாய்
நான்
நினைத்துக் கொண்டேன்
உன்னழகை பாடுவதில்
எனக்கு போட்டியாய்
எட்டு கவிகளை
ஏற்பாடு
செய்திருக்கிறாயென!
**********

நீ
சிக்கெடுத்த
முடி சுருட்டி
வாசலில் எறிந்தாய்
பட்டாபிஷேகத்தில்
பூரித்தது
முள்வேலி!
**********

இயற்கையின்
ஒட்டு மொத்த
வனப்பையும்
வரமென
வாய்க்கப் பெற்றும்
என்னைத் தவிர
யார் முன்பும்
கடைப் போட
விரும்பாத
பேரழகி நீ!
**********

கோடையிடை
தீண்டிப் போகும்
நிறை மாத
தென்றல் போல
அரவமற்ற நிமிடங்களில்
சில சமயம்
உன் ஸ்பரிசம்!
**********

ஆண்டாண்டு காலமாய்
ஆதவன் உதித்தாலும்
ஒவ்வொரு விதையின்
விழிப்பு நிலையையும்
உசுப்பி போகிற
ஏதோவொரு
விடியலின்
கீற்றை போலத்தான்
எனக்கான
உன் பார்வையும்!
**********

அமைதியின்
ஆழம் போல்
நீளும் என்
நேசத்தை
வீண் வார்த்தைகள்
ஒரு போதும்
விளக்கிவிட முடியாது
விளங்கிக் கொள்!
**********

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (21-Nov-17, 10:31 am)
பார்வை : 445

மேலே