பண்புடைமை - நிலைமண்டில ஆசிரியப்பா
மக்கள் பயந்து மனையறம் ஆற்றுதல்
தக்க(து) அறிந்தார் தலைமைக் குணமென்ப
பைத்தர(வு) அல்குல் படிற்றுரை யாரொடு
துய்த்துக் கழிப்பது தோற்றமொன்(று) இன்றே. 63 வளையாபதி
பொருளுரை:
மக்கட் பிறப்பிற்குரிய உறுதிப் பொருளையறிந்த சான்றோர்,
நச்சுப் பையையுடைய பாம்பினது படம் போன்ற அல்குலையும், பொய்ம்மொழியையும் உடைய கணிகை மகளிரோடு இன்பம் நுகர்ந்து வாழ்நாளைக் கழிக்குஞ் செயல் சிறிதும் மாண்புடையது ஒன்றன்று என்றும்,
கற்புடை மகளிரோடு கூடி இன்பம் நுகர்ந்து நன்மக்களையும் பெற்று விருந்தோம்பல் முதலிய இல்லறங்களைச் செய்தலே மக்கட்குத் தலைசிறந்த குணமென்றும் கூறுவர்.
விளக்கம்:
கணிகையர் கூட்டுறவாலே இன்பம் பெறுதலின் அது தீங்காகாது என்பார்க்கு விடையாக வந்தது இச்செய்யுள்.
இன்பம் நுகர்தல் மட்டுமே மக்கட் பண்பிற்குச் சிறப்பாகாது. அறஞ்செய்தலே மக்கட் பிறப்பின் பயனை நல்குவதாம்.
ஆகவே, பொதுமகளிர் கூட்டுறவால் இன்பமுண்டாயினும் அதனாற் புகழுமில்லை, பயனுமில்லை.
இன்பந்தானும் கற்புடைய மனைவியோடு கூடி நுகர்தல் வேண்டும். மேலும் நன்மக்களையும் பெற்று விருந்தோம்பல் முதலிய இல்லறங்களைச் செய்தலே மக்கட்கு உறுதி பயக்கும் எனப்படுகிறது.