வாழ்வதே மகத்துவமானது
வாழ்வதே மகத்துவமானது
இள.சிவபாலன்
இறந்து போவதற்கான
காரணங்களை போன்றதல்ல
வாழ்வதற்கான காரணங்கள்
வாழ்வதை தவிர
வாழ்வதற்கான எந்த நியாயமான
காரணங்களும் நம்மிடம் இல்லை
அர்த்தமுள்ள வாழ்க்கை
என்பதே போலியானது
வாழ்க்கை அர்த்தங்கள் அற்றது
காரணங்கள் அற்றது
வாழ்வது மட்டுமே
ஒரு வாழ்க்கையின் இலக்கு
நாம் வாழ்கிறோம்
என்பதே மகத்துவமானது
அதை தவிர
எந்த மகத்துவமான வாழ்க்கையும்
இங்கு இல்லை
துரோகங்களை கடந்து
வாதைகளை கடந்து
பிரிவுகளை கடந்து
நம்பிக்கையின்மையை கடந்து
நிராதரவுகளை கடந்து
அவமானங்களை கடந்து
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
வாழ்வதை தவிர
வாழ்வதற்கான எந்த நியாயமான
காரணங்களும் நம்மிடம் இல்லை
ஒரு சொட்டு விஷமும்
ஒரு பற்றிய தீக்குச்சியும்
ஒரு நம்பிக்கையிழந்த கணமும்
ஒரு அடைக்கப்பட்ட கதவும்
நமக்கு முன்னால்
எப்போதும் காத்திருக்கிறது
வாழ்க்கை அத்தனை
பலவீனமானது
இந்த வாழ்க்கையை
வெல்வது என்பது
வாழ்தலால் மட்டுமே சாத்தியம்
ஏனென்றால்
மரணத்தை போல
வாழ்க்கையும் எல்லோருக்கும்
பொதுவானது…