பாசத்தில் விஞ்சி நிற்பவர் -- கவியரங்கம் நூறு
கவியரங்கம் -- நிலாமுற்றம் நூறு
இறை வாழ்த்து :-
இறைமையினை வணங்குகின்றேன் இடைவிடாது போற்றுகின்றேன்
திறமையுடன் கவியரங்கைத் திக்கெட்டும் பரப்பிடவே
உறைகின்ற தெய்வத்தை உளமார வணங்குவிட்டு
பறைசாற்ற வருகின்றேன் பாவலரே கேட்டிடுவீர் !
ஆசான் வணக்கம் :-
ஆசானை வணங்குகின்றேன் அகமகிழ்ந்து ஆசிகளைக்
கூசாமல் தந்திடுவார் குவலயமும் ஆசானே !
பாசத்தாள் வழங்குகின்ற பரவசமாம் அன்பினாலே
வாசமுடன் மணம்வீசும் மண்ணுலகில் கவியரங்கம்
தமிழ் வணக்கம் :-
தாய்மொழியாம் தமிழ்மொழியைத் தாள்பணிந்து வணங்குகின்றேன் .
வாய்மொழியாய்ப் பேசிடவும் வகையானத் தாய்மொழியே
சேய்போல எனைக்காக்கும் செந்தமிழாம் தாய்மொழியே !
தாய்போல எண்ணுகின்றேன் தமிழ்மொழியே நீவாழ்க !!!
அவையடக்கம் :-
நிலாமுற்றம் முகநூலில் நிறைவான கவியரங்கம்
உலாவரவும் செய்கின்றோம் உவப்பில்லா உவகையினால்
பலாக்கனியைப் போன்றதொரு பல்சுவையைத் தருகின்ற
நிலாமுற்றம் கவியரங்கம் நீடுழியும் சிறந்திடவே !!!!
கவியரங்கம் நிலாமுற்றம் நடத்து கின்றார்
--------கவிஞர்கள் வந்துள்ளீர் திருச்சி நோக்கி !
புவிதனிலே மாபெரிய நகரம் தன்னில்
-------- புதுமையாக எண்ணிக்கை நூறாய் நிற்க
செவிதனிலே செந்தமிழும் ஒலிக்கும் பாரீர் !
-------- செம்மையான நிகழ்வுதனைக் காண வாரீர் !
கவிதைகளின் சங்கமமாம் நிலவின் முற்றம்
-------- கருத்தோங்கும் செயல்பாட்டை காண்பீ ரிங்கே !
புனிதத்தின் வளமான கல்விச் சாலை
--------புகழ்பெற்ற சான்றோரை தந்த சாலை
தனித்துவமாய் நிற்கின்ற அழகைப் பாரீர் !
-------- தரமான கல்லூரி அரங்கம் தன்னில்
நனிமிக்க கவியரங்கம் நடத்து கின்றோம்
------- நவின்றிட்டேன் இப்போதே அனைவர் முன்னே !
இனிதான வாய்ப்பாக ஏற்று நீங்கள்
-------- இன்பமாக சுவைத்திடவே காத்து நிற்பீர் !!!
மலைக்கோட்டை திருச்சிக்கு மகத்துவத்தைத் தந்திடுமே வணங்கி வாழத்
தலைக்கோட்டை மக்களுக்குத் தரிசனமும் கிடைத்திடுமே தரணி மீதில்
சிலைக்கோட்டை சிற்பத்தின் சின்னத்தைச் செப்பிடுமே சிறப்பைச் சொல்லிக்
கலைக்கோட்டை மாநகரின் களஞ்சியமும் இதுவன்றோ காண்போம் நாமே .
மாறனவர் அழைத்துள்ளார் மன்றம் காண
------- மன்னவரும் இவரன்றோ முற்றம் தன்னில்
ஆறறிவும் படைத்திட்ட ஆதி யாக
-------- அனைவரையும் போற்றுகின்றார் அரங்கி லேற்றி .
வீறுகொண்டு கவிஞர்கள் மேடை ஏறி
-------- விந்தைஎனச் செப்பிடுவார் உறவின் மேன்மை
மீறாத நெறியோடு நேரம் காப்பீர்
-------- மிளரட்டும் உவகையோடு உறவும் சேர்ந்தே !
பாசத்தில் விஞ்சி நிற்பவர் -- தாய் , தந்தை , மகள் , மகன் ,உடன்பிறப்பு .
பாசம்
பாசத்தில் விஞ்சுவராம் வாழ்க்கை தன்னில்
------- பண்பாடும் காப்பாராம் குடும்பம் தன்னில் .
நேசத்தால் பழகுகின்ற உறவின் வீடு
------- நேயமிக்க மக்களின அன்பின் கூடு .
வாசத்தால் வசமாக்கும் உள்ள மொன்றி
-------- வளமிக்க பொழுதுகளும் மாற்ற மின்றி
மாசற்ற உறவுகளால் அடங்கும் வாழ்க்கை .
-------- மண்மீதில் ஒளியாகும் தீப மாகி !!
உறவுகளின் ஒற்றுமையால் வந்த பந்தம்
------- உருவாக்கும் குடும்பத்தில் அன்பின் சொந்தம்
அறமாக ஆற்றலாக அமைதி வாழ்வில்
-------- ஆண்டிடுமே எந்நாளும் ஒன்றாய்ச் சேர்ந்து .
இறங்குதலும் தாழ்வில்லை பாசத் தாலே
-------- இன்பமுடன் ஏற்றமுமே நேசத் தாலே .
பிறக்கின்ற மண்ணுலகில் பெரிதாய்ப் போற்ற
------- பிறழாமல் உறவுகளும் நம்மைக் காப்பர் !
இறுதியாக தலைமை கவிதை :-
தாய்தந்த பாசத்தால் தரணி ஆளும்
------- தக்கதொரு குடும்பத்தை நாமும் காண்போம் .
காய்க்கின்ற மரம்கூட மறத்தல் உண்டு .
------- கனிவான தாய்க்குநிகர் எவரும் உண்டோ .
சேய்களையும் செம்மையாகக் காக்கும் போக்கில்
-------- செங்குருதி சிந்திடவும் தயக்க மின்றி
வாய்நிறைய தன்பெண்டு பெருமை யாவும்
-------- வாழ்வினிலே சொல்லிடவே ஆசை கொள்வாள் !
தந்தையரின் பாசத்தில் மூழ்கிப் போவோம்
-------- தன்னலமும் இல்லாது பிள்ளை தன்னை
விந்தைபல செய்திடுவார் உலகம் தன்னில்
------- வித்தகராய் வளர்த்திடவே பாடு பட்டு
முந்துகின்ற வாழ்வுநெறி முழுதும் போற்ற
-------- முத்தாக பிள்ளைகளைப் பேணு கின்ற
அந்தமிலா வாழ்வினிலே ஆண்மை யோடே
-------- அரவணைக்கும் தந்தையரை எங்கும் காண்போம் !
மகனுடைய பாசத்தால் மலரும் வாழ்வு
-------- மங்காத குடும்பத்தின் மகிழ்ச்சி வெள்ளம் .
அகவையிலே சிறியோனாய் இருந்தும் கூட
------- அகத்தினிலே அன்பினிலே ஆள்வான் வீட்டை .
நிகழ்கின்ற இன்பதுன்பம் அனைத்தும் சீராய்
------- நிறைகின்ற வாழ்வியலை கற்றும் தந்தே
முகவரியை குடும்பத்தில் பதித்தே நிற்பான்
-------- முகிலாகி வான்மழையை பாசம் தன்னில் !
விஞ்சுகின்ற மகளினுடை பாசம் கண்டு
--------- வியன்பொருளாய் பெற்றோரும் பெருமை கொள்வார் .
பஞ்சுமனம் நிகர்த்ததொரு மென்மை உள்ளம்
------- பரிதவிக்கும் பாசத்தால் கள்ள மின்றி
கொஞ்சுகின்ற மொழியாவும் நலத்தை நோக்கி
-------- கோமகளும் சொல்லிடுவாள் உறவை நோக்கி .
தஞ்சமென வாழ்வினிலே தரத்தைப் பார்க்கும்
-------- தாய்தந்தை மகனோடு மகளின் பாசம் !!
உடன்பிறப்பு வழங்குகின்ற பாசத் தாலே
------- உருவாகும் உணர்வான மனத்தின் நேசம் .
கடல்கடந்து வாழ்ந்தாலும் பாசம் தன்னை
------- கரைசேர்க்கும் உடன்பிறப்பும் உலகில் உண்டு .
மடல்களுமே வனைந்திடுவான் நலத்தை நாடி
-------- மலர்ந்திடுமே அன்பும்தான் மறுத்த லுண்டோ !
தடங்கல்கள் வந்தாலும் தாவி யோடி
-------- தடுக்கின்ற அணையாக நிற்பா னன்றோ !
கூட்டாக பாசத்தால் வெல்வார் தம்மைக்
-------- குடும்பத்தின் உறவாக பார்ப்போம் நாமும்
தோட்டத்தில் மலர்களுமே பலவும் உண்டு .
-------- தோற்றுவிக்கும் நறுமணத்தில் மாற்ற முண்டோ .
நாட்டத்தால் நல்லறமும் நடப்ப துண்டு .
-------- நன்மைகளும் அதனாலே என்றும் உண்டு .
காட்டுகின்ற பாசத்தில் குறைவு மில்லை .
-------- காலத்தால் பிரிவினைகள் ஏது மில்லை . !
நன்றி மடல் :-
நன்றிசொல்ல வார்த்தையில்லை நல்வாய்ப்பு தந்தமைக்கு
என்றனையும் மதித்திங்கே ஏற்றதொரு தலைமையினை
இன்றிங்கே வழங்கிட்ட இன்முகத்தோர் நிலாமுற்றம்
நின்றிங்கே சொல்லுகின்றேன் நிறைவான கவியரங்கம் .!!!
நன்றி ! வணக்கம் .
படைப்பாக்கம் :-
பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
திருச்சி , தமிழ்நாடு