நதிக்கரை மீன்

==============
புத்தகங்கள் மூலம் புவிவெல்லும் கூர்மை
=புத்திதனைப் பெற்று புகழடைந்து, நேராய்
சத்தியத்தின் பாதை சறுக்காமல் சென்று
=சந்ததமும் மண்ணில் சமத்துவத்தை நாடி
உத்தமமாய் வாழ்வோர் உருப்படியாய் வாழ்வில்
=உயர்ந்ததுவாய் இல்லை உலகத்தில் இன்று
கத்திதனைக் காட்டி கழுத்தறுத்துச் செல்வான்
=கவலையற்று வாழ்வைக் கடத்துகிறான் நன்று.

ஏர்பிடித்து மண்ணை இலகுவென மாற்றி
=இயற்கைக்கு ஏற்ப இளங்கன்று நாற்றி
ஊர்முழுதும் உண்ண உணவளிக்கும் கல்வி
=உரியவகைக் கற்று உழைக்கின்ற வர்க்கம்
சீர்மிகுந்த வாழ்வை சிதைந்ததுவாய் கொள்ள
=சிலைபோல நிற்கும் சிருங்கார வர்க்கம்
பார்முழுதும் எந்தப் படிப்பதுவும் இன்றி
=பலகோடி சொத்தின் பதியாகின் றாரே!

உயர்கல்வி கற்று ஒருவருக்குக் கீழே
=உழைப்பவர்கள் வாழ்வில் உயர்வதுவோ இல்லை..
சுயமாக ஏதும் செயல்புரியா தோரோ
=சுகபோகத் தோடே சுகித்திருக்க சற்றும்
பயமின்றி தீயப் பழக்கங்க லாலே
=பலபேரும் போற்ற பணம்தேடிக் கொண்டு
நயமாக வாழ நலிவடைந்த நாமோ
=நாளாந்தம் துன்ப நதிக்கரைமேல் மீனாய்!
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (13-Dec-17, 1:46 am)
பார்வை : 64

மேலே