என்னவள்

இரட்டைமணிமாலை
********************************
( சிற்றிலக்கிய வகை )

காப்பு
******
முன்னவனே யானை முகத்தவனே வேண்டுகிறேன்
நின்னருளை அன்புடன் நெஞ்சுருகி ! - என்னவளின்
நற்பண்பைப் பாடலாய் நான்வடிக்க நின்பொற்றாள்
பற்றினேன் கண்திறந்து பார் .

நூல்
******
வெண்பா
*************
அதிகாலைக் கண்விழிப்பாள்! அன்பில் மணந்து
புதியவளாய்ப் பூரித்துப் பூப்பாள்! - மதித்து
நடந்திடுவாள்! மூத்தோர் நலம்விழைந்து காப்பாள்!
அடக்கிடுவாள்; அன்பா லவள். 1.

கட்டளைக் கலித்துறை
*******************************
அவளால் குடும்பம் அழகாய் விளங்கும் அமைதியுடன்
துவண்ட மனத்தில் துயரது நீங்கிச் சுகம்பெருகும்
இவள்போ லொருவரு மில்லை யெனும்படி இன்செயலால்
உவகை யளித்தே உணர்வில் கலந்த உயிருறவே ! 2.

வெண்பா
*************
உறவுகள் பேணியே உச்சி குளிர்வாள்!
சிறந்த துணையாய்த் திகழ்வாள்! - மறந்தும்
எவருக்கும் தீங்கினை எண்ணாக் குணத்தாள்!
இவளுக்கிங் கில்லை இணை . 3.

கட்டளைக் கலித்துறை
*******************************
இணைந்தாள் இனிமையாய் இல்லற வாழ்வினில் என்னுடனே
அணைப்பில் மிதந்தேன்! அமுத மொழியால் அகங்குளிர்ந்தேன் !
துணையா யிருந்தே சுகத்தினைத் தந்தாள் துயரறுத்து
வணைந்து கொடுக்கும் வனிதை யவளும் வரமெனக்கே ! 4.

வெண்பா
*************
எனக்குக் கிடைத்த இணையாள்! இமைபோல்
இனவழி காக்கும் இனியாள் ! - சினத்தையும்
வெல்வாள்! பொறுமையால் மேன்மை யடைந்திடுவாள்!
மல்லிகைப் பூப்போல் மணந்து . 5.

கட்டளைக் கலித்துறை
*******************************
மணந்திடும் வாழ்க்கையை வண்ணமாய் மாற்றும் மழலையரை
அணங்கவள் கண்போல் அகமகிழ் வோடே அணைத்திடுவாள்
கணக்கினைப் போட்டே கருத்துடன் செய்வாள் கடமையினைக்
குணவதி யாலே குலத்தின் பெருமையுங் கூடியதே! 6.

வெண்பா
*************
கூடிய இன்பம் குளிர்ந்திடச் செய்திட
ஓடின நாட்களும் ஒவ்வொன்றாய்!- வாடிய
போழ்தினிலும் பாவையவள் புன்னகையால் மாற்றிடுவாள்!
காழ்ப்பின்றிக் காப்பாள் கனிந்து . 7.

கட்டளைக் கலித்துறை
*******************************
கனிமுகம் கண்டால் கவலை பறந்திடும் காற்றினிலே
பனித்திடும் கண்களில் பாசம் பெருகிப் பரிவளிக்கத்
தனித்துவ மான தகைமையில் மிக்க தவத்தினளால்
மனிதமும் பூக்க மனத்தினில் துக்கம் மறைந்திடுமே ! 8.

வெண்பா
*************
மறைந்திடும் துன்பம் மடந்தை யிவளால்
நிறைந்திடும் இன்பமும் நெஞ்சில் ! - இறையருள்
நாடித் தொழுவாள்! நலம்வாழ வேண்டியே
பாடிப் பணிவாள் பதம். 9.

கட்டளைக் கலித்துறை
*******************************
பதமலர் போற்றிப் பரமனை வாழ்த்திப் பரவசமாய்
இதயமும் பொங்கி இனிமைக் குரலால் இசையுடனே
கதறிடும் சேயாய்க் கழலடி பற்றிக் கசிந்துருகி
நிதமவள் உள்ளம் நிறைந்து துதிப்பாள் நெகிழ்வுடனே ! 10.

வெண்பா
*************
நெகிழ்ந்திட வைத்திடுவாள் நேசத்தி னாலே
அகிலத்தி லீடிணை யற்றாள் ! - முகிலாடும்
வான்போல் பரந்த மனத்தினின்றும் பொங்கிவரும்
தேன்மொழி யாளின் சிரிப்பு. 11.

கட்டளைக் கலித்துறை
*******************************
சிரிப்பால் கவரும் சிலைபோல் அழகில் சிலிர்க்கவைப்பாள்
கரிய குழலில் கதம்பமும் சூடிக் களித்திடுவாள்
விரிந்த விழிகளில் மின்னும் ஒளியால் வியக்கவைப்பாள்
புரித லுடனே பொறுமையாய் அன்பைப் பொழிந்தனளே ! 12.

வெண்பா
*************
பொழியும் மழைத்துளியாய்ப் புத்துணர் வூட்டி
எழில்கொஞ்சும் பார்வையா லீர்ப்பாள்! - வழிபட
ஆலயம் சென்றே அபிராம வல்லியின்
கோலமுகம் காண்பாள் குளிர்ந்து. 13.

கட்டளைக் கலித்துறை
*******************************
குளிர்ந்திட வைக்கும் குழலிசை தோற்கும் குரலுடையாள்
மிளிர்ந்திடும் வெண்கொடி மின்னலைப் போலவே மெல்லிடையாள்
பளிங்கினை யொத்தப் பளிச்சிடும் கோலப் பதுமையவள்
அளித்திடு மின்பம் அகமலர் விக்கும் அனுதினமே ! 14.

வெண்பா
*************
தினமும் பணிகளைத் தேக்கமின்றிச் செய்வாள்
மனநிறை வோடு மகிழ்ந்தே! - அனற்பொறியாய்த்
தீது பொசுக்கிச் சிறப்பிப்பாள் இல்வாழ்வைச்
சூதுவா தின்றிச் சுழன்று. 15 .

கட்டளைக் கலித்துறை
*******************************
சுழலு முலகில் சுகப்பட வைத்த சுடர்க்கொடியாள்
நிழலாய்த் தொடர்ந்து நிலைமை யுணர்த்திடும் நேரிழையாள்
பழகும் விதத்தில் பரிவுடன் பேசிடும் பைங்கிளியாள்
அழகி யெனினும் அகந்தை யிலையே அவளுளத்தே ! 16.

வெண்பா
*************
உளம்பூக்கச் செய்திடுவாள்! உய்யவழி காட்டி
வளம்பல கூட்டிடுவாள் வாழ்வில் !- இளகிய
நெஞ்சினள்! நீதி நெறிகளைக் கற்பிக்கும்
பஞ்சனைய மென்குணத்தாள் பார். 17.

கட்டளைக் கலித்துறை
*******************************
பார்வைக் கெளியாள் பகட்டை யறிந்திடாப் பாவையவள்
ஈர்ப்பாள் எளிதில் எவரையும் ஒப்பிலா இன்குணத்தால்
மார்பி லணிந்த மணிச்சர மாட வளையிசையில்
சோர்வு மகன்று சுறுசுறுப் பாயவள் சுற்றுவளே ! 18.

வெண்பா
*************
சுற்றி வருவாள்! சுவையாய்ச் சமைத்திடுவாள்!
கற்றதை யாவர்க்கும் கற்பிப்பாள்! - முற்றத்தில்
புள்ளிவைத்துக் கோலமிட்டுப் பூவைத்(து) அலங்கரிப்பாள்!
தெள்ளுதமிழ்ப் பாடலிசைத் தே ! 19.

கட்டளைக் கலித்துறை
*******************************
தேவதை யாகச் சிரிக்கு மவளின் சிறப்புரைக்கும்
ஆவலால் யானும் அழகுறத் தீட்டினேன் அன்புடனே
சேவகம் செய்வதே சீரிய பண்பாய்த் திகழ்ந்தவளைப்
பாவினி லேற்றிப் பரிசா யளித்தேன் பரிவுடனே! 20.

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (16-Dec-17, 10:26 am)
பார்வை : 183

மேலே