கல்யாண வைபோகமே
ஒரு வாழ்வின் ஆரம்பம்
தன் வாழ்வை முடித்து நின்றது
வாழை மரம்
மந்திரங்கள் ஓதப்பட்டது
உரிமைகள் பறிக்கப்பட்டது
அழுதபடி மாப்பிள்ளை
மாங்கல்யம் கட்டப்பட்டது
சாவிக்கொத்து மாற்றப்பட்டது
சிரித்தபடி மணப்பெண்
இலை நிறைய பதார்த்தங்கள்
உண்ண வழியின்றி
வாழை இலை
பத்திரிக்கை அழைப்பு இல்லை
உணவுப்பந்தியில்
லட்டு தின்றபடி எறும்புகள்
பந்தி முடிய முடிய
வயிறு நிறைந்திருந்தது
குப்பைத் தொட்டி
நன்றாக இயக்கினார்
பொண்ணையும் மாப்பிள்ளையையும்
புகைப்படக் கலைஞர்
மறைக்கப்பட்ட தாளுக்குள்
மடிக்கப்பட்ட தாள்களில்
அன்பு அளக்கப்பட்டது
கல்யாணம் முடிந்தது
உறவுகள் பிரிந்தது
வெறுமையாய் மண்டபம்