இறை விற்பவன்
நெஞ்சு பொறுக்குதிலையே நஞ்சு நெஞ்சவராம்
பிஞ்சுப்பிணை மான்களின் நெஞ்சை துஞ்சவைத்து
கெஞ்சும் ஈன்றோரின் நெஞ்சும் கிழிந்திடவே
வஞ்சம் செய்தனரே கொஞ்சமமும் இரக்கமின்றி...
முற்றும் துறந்தவராம் பற்றும் அறுத்தவராம்
பெற்றதம் பெண்ணவளும் பூச்சூட பார்த்தவராம்
மற்றவரின் மகளவரை மடத்தினில் சேர்த்தவராம்
பெற்றவரின் உயிர்பிரித்து பிறைசூடியில் கலப்பவராம்
இறை விற்று இரை தேடும்
அரைகுறை ஆன்மிக ரிடத்து - பொருள்
இறைத்திறைத்து அருள் இரந்து நிற்கும்
குறைமிகு கூட்டமாய் நரையெய்தல் தகுமோ..?
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து - உயர்கருத்து
நற்பாட்டி லுரைத்தாரெம் பாட்டன் வள்ளுவர்
அதைவீட்டி லொழுகி நற்வீட்டை யடைவோமே..