வேல்சொலிக்க வாரும் வேலவா

வேல்சொலிக்க வேல்சொலிக்க வாரும் வேலவா
வேண்டும்வரம் தான்கொடுக்க வாரும் வேலவா

வேலெடுத்து நிற்பதனால் வேடனென்பதா
கோல்பிடித்து நடந்ததனால் கிழவனென்பதா
சேல்விழியர் மனம்பிடித்த செல்வனென்பதா
மால்மருகன் தமிழருந்தும் மழலையென்பதா

ஆதிசிவன் பார்வையிலே அவதரித்தவா
சோதிவடி வாகஎம்மைச் சூழ்ந்திருக்கவா
பாதிஉமைத் தாய்வயிற்றுப் பாலவேலவா
மாதமெல்லாம் மாரியாகி மகிழ்வளிக்கவா

சம்பங்கி மாலையிலே சாய்ந்துஆடிவா
செம்பட்டு அங்கியிலே சிரித்துஓடிவா
கும்பிட்டு நடந்தவரின் குறைதீர்க்கவா
நம்பியவர் கைப்பிடித்து நலமளிக்கவா

பாட்டிக்குச் சுட்டப்பழம் பாடமாக்கினாய்
போட்டியிட்டுச் சூரனுக்கோ புத்திநல்கினாய்
கூட்டிவந்து நான்முகற்கு குருவுமாகினாய்
நாட்டுமக்கள் எமக்குமெப்போ நீதிசொல்லுவாய்

கைப்பிடித்த தெய்வானைக் கண்ணசைப்பதோ
பூப்பிடித்து அவள்பின்னே பாய்ந்துசெல்வதோ
எப்பொழுது நீயருள்வாய் என்றிருப்பதோ
இப்படியோர் காத்திருப்பும் எமக்களிப்பதோ

தேவர்துயர் தீர்த்தபின்னும் தாமதமேனோ
தேவியுமைப் பரிந்துரைத்துச் சொல்லவேணுமோ
பூவமரும் கோதையரின் பிடியிருக்கமோ
சேவலோடு மயிலிருக்க சுணங்கவேணுமோ

மாங்கனிக்காய்க் கொண்டகோபம் மனதிலின்னுமா
தூங்காமல் உலகளந்த சோர்வுஇன்னுமா
ஏங்கிவந்து பழனிமலை இருந்தசோகமா
நாங்களிங்கே காத்திருக்க நன்மைகூடுமா

காம்புதந்தால் பசுவருகே கன்றுகதறுமா
வீம்பெதற்கு வேலவரே வரம்சுரக்குமா
தேம்புவதே அடியவர்க்கு தீர்வுஆகுமா
நோம்பிருந்தார் மலரவிது நொடியுமாகுமா

கூறிவிட்டோம் யாமறிந்த குழந்தைமொழியிலே
மாறவில்லை பக்தியுமே மாற்றுவழியிலே
ஏறிவிட்டாய் எங்களுக்காய் அகவுமயிலிலே
ஆறிவிடும் இனித்துயரும் அரைநொடியிலே

வந்துவிட்டாய் வேல்முருகா வரமளிக்கவே
சொந்தமென்று கரம்பிடித்து சுகமளிக்கவே
தந்துவிட்டாய் கோடிநலம் தந்தையாகியே
இந்தமானு டப்பிறவி இனிதுஉய்யவே


மீ.மணிகண்டன்
08/27/2017

எழுதியவர் : மீ.மணிகண்டன் (1-Jan-18, 5:24 am)
சேர்த்தது : மீ மணிகண்டன்
பார்வை : 4680

மேலே