முதலிரவு
முதலிரவு
இனியும் வராது
இன்னுமொரு இரவு
இதுபோல் வராது
தும்புக்கயிற்றில்
தூங்குகிறது என்
தூசு படிந்த சாரன்
உதறிவிட்டு
உடுத்துக் கொள்கிறேன்
முழுத்தாரகைகளும்
என்
முதலிரவிற்காய்
முக்காட்டைத் திறந்து
மூச்சு விடுகிறது
தாரகையின்
மூச்சுக்காற்றில்
தடுமாரித்திரிகிறது
மேகம்
தாரகையோடு
தோல்வி கண்டதில்
வான்மண்டளத்திலிருந்து
வந்து விழுகிறது
வின்மீன்களின் விழிநீர்
இருளும்
வெளியேறாதவாறு
இழுத்து மூடினேன்
ஜன்னலை
வெளிச்சமும்
உட்புகாதவாறு
வெறித்துப் பார்த்தேன்
வெண்ணிலவை
புழுதி படிந்த மணல்
புத்துணர்ச்சி பெற்றதில்
பூகோலத்திற்கே புரியாத
புதுப் புது வாசம்
ஒட்டடை பிடித்த
ஓட்டைக்கூரையில்
ஒட்டிக்கட்டிய
ஒன்றரை வயதாகும்
ஒன்பதடி நுளம்பு வலை
இசைக்குயில்
இளையராஜாவிற்குப்
போட்டியாய்
தெருவோர நாய்களின்
தாலாட்டு
சிறகு முளைக்காத
சில்லூருகளின்
சில்மிச நாட்டியங்கள்
வாகன நெரிசலில்
விளக்கு அணைந்த நேரம்
வீதி விபத்தைத் தடுக்க
பச்சை விளக்கேந்தி வந்த
மின்மினிப் பூச்சிகளின்
மின்சார நடனம்
முதலிரவின்
முன்னேற்பாடுகளை
மூலையிலிருந்து
முணகிக் கொண்டே
பார்க்கும்
மூட்டைப்பூச்சி
போர்வை கழுவியதன்
அடையாளம்
கம்மியாய் அடிக்கிறது
COMFORT வாசனை
பதற்றத்தில்
முள்ளந்தண்டு வழியே
தலைக்குப்பற
தவழ்ந்து செல்லும்
நிறமில்லாக் குருதி
அன்னார்ந்து படுத்தேன்
அடுத்த பக்கம்
திரும்பிப் படுத்தேன்
இன்னும் வரவில்லை
என் விம்பமும்
வியர்ந்துபோன இரவு
என் நிழலும்
நிறமற்றுப்போன இரவு
சாத்தியிருந்த கதவு
சடாரெனத் திறக்கிறது
பூவுக்கு வலிக்காமல்
பிரசவம் பார்க்கும்
பூச்சிகளைப் போல்
சப்தமில்லாமல்.....
சப்தமில்லாமல்
சர்க்கரை திருடும்
எலியைப் பிடிக்க
என்னறைக்கு வந்த
எங்கள் வீட்டுப்பூனை
எவ்வளவு நேரம்
எண்ணிக் கணிப்பது
கடிகார முள்
காணாமல்
போய்விட்டதோ...?
அயர்ந்த வேளை
காதுக்கு வலிக்காமல்
செல்லமாய் கடித்து
ஏதோ ஒரு முனகல்...
..................................
தையல் பிரிந்த துளையால்
நுழைந்து
தன்பாட்டுக்குக் கடித்த
பருவமடைந்த
பெண் நுளம்பு அது...!
பெண் நுளம்பு கடித்ததில்
பெருமிதம்தான் எனக்கு...!
விடுமுறையில்
விடுதி மறந்து
வீடு திரும்பிய நாள்
பனிரெண்டு மணி வரை
விழிகள் தூக்கத்தைத்
துண்டித்து
துக்கதினம் அணுஷ்டித்த
என் முதலிரவு பற்றி
என்னில் உதித்தவை இவை...!
11/05/2016