ஆன்மீக அரசியல்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆன்மீக அரசியல்...
ஆன்மீகம் என்பது தேடலை அடிப்படையாகக் கொண்டது. அவரவர் குறித்தும் அவரவருக்குப் புலப்படாதது குறித்தும் தேடுவது. இதற்கு விடை கிடைக்கிற போது மனிதர்கள் விடை பெறுகிறார்கள். அதாவது அவரவருக்கான பதில்கள் அவரவருக்கு மட்டும் கிடைத்ததாக நம்பப்படுகிறது. மனிதர்களின் ஒரு நிலைக்குப் பிறகே ஆன்மீகம் போன்ற சொல்லாடல்கள் இடம் பெறுகின்றன. குறிப்பாக புகழின் உச்சியில் நிற்கிற பொழுதுகளில் கவனம் பெறுகின்றன. கடந்த வந்த பாதைகள் கடினமானவை என்றாலும் அதிலிருந்து பெற்ற பாடங்கள் வாழ்வியல் குறித்தவற்றை கற்பித்ததாகத் தெரிவதில்லை. இல்லாவிட்டால் ஆன்மீகம் தொடர்பான பயணங்கள் ஏன் தொடர்கின்றன. முற்றுப் பெறாத பயணத்தில் இன்னொரு பயணமே ஆன்மீக அரசியல் என்றால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும்?
ஆனால் ஏழைப் பங்காளர்கள் எந்த உச்சிக்கும் செல்லாமல் வாழ்வின் உன்னதங்களைப் புரிந்து கொள்கிறார்கள். தனது தோழன் மறைகிறபோது அவனது இல்லத்தில் அடுப்புகள் எரிவதே இல்லை. பிறர் எரிகிறபோது தானும் எரிகிறான். குடல்கள் வற்றினாலும் வாடவே விடுகிறான். இதைவிட ஆன்மூகம் எதை கற்றுத் தந்து விடப்போகிறது?
அரசியல் என்பது ஒரு போராட்டக் களம். மக்களிடம் அதிகாரம் செலுத்திட ஒரு சேவகனாகப் பணி தொடங்கி அவர்கள் மூலம் பெற்ற சிறிய முத்திரையை அவர்களுக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ அவர்கள் மீதே பலமான முத்திரை பதிப்பதே அரசியல். அதிகாரம் பெறுவதற்கான ஒரு முயற்சியே அரசியல்.
ஆன்மீகத்தின் தேடல் தனிமனிதர்களுக்கு ஆனது. அரசியலில் தேடல் என்பது தொடக்கத்தில் பிறருக்காகவும் அதிகாரம் குவிய குவிய தனக்காகவும் தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் இருந்து வந்துள்ளது என்பதும் இருந்து வருகிறது என்பதும் வரலாறு. ஒருசிலர் மட்டுமே விதிவிலக்கு. பிறருக்காக மட்டும் வாழ்ந்தவர்கள் இன்னமும் பேசப்படுகிறார்கள்.
ஆன்மீக அரசியல் என்பது தனிமனிதம் மற்றும் மனிதர்கள் சார்ந்தது என்பதால் இதன் வரையறை, விளக்கம், செயல்முறை, செயல்பாடு மற்றும் முடிவுகள் எல்லாம் கேள்வியில் தொடங்கி கேள்வியில் மட்டும் முடியும். அதாவது மனிதனுக்கும் கிட்டாது. மனிதர்களுக்கும் கிட்டாது. ஏனெனில் ஒன்று அறம் சார்ந்தது. மற்றொன்று அறிவியல் சார்ந்தது.
அறத்துடன் கூடிய அரசியல் எதிர்பார்ப்புக்குரியது. ஏதோ ஒருநாளில் வந்துவிடாது இது. சிறுவிதையானாலும் கருவறையானாலும் அறம் எனும் உரம் முளளக்கத் தொடங்கிய அந்த நொடி முதல் தொடங்கி விடுகிறது. சீற்றங்களைப் பார்க்காமல் மரங்கள் உருவாவதில்லை. ரணங்கள் இல்லாமல் மனிதர்கள் உதிப்பதுமில்லை.
திடீர் உணவுப் பண்டங்கள் சாத்தியம். திடீர் அரசியல் பயணங்கள் நம்பிக்கையைத் தருவதில்லை. குழந்தை அழுகிற அந்த நொடியில் அணைத்து அமுதூட்டி ஆசுவாசப்படுத்துபவள் அன்னை. அறுபது ஆண்டுகள் கழித்து ஆசுவாசப் படுத்துவதை எப்படி நம்புவது?. இந்த பூமியில் விழுந்த ஒவ்வொரு இரத்தத் துளிகளின் போதும் பிடில் வாசித்துக் கொண்டு இருந்தவர்களை எவ்வாறு நம்புவது? இரசனைகளை ஓட்டுகளாக மாற்ற முயல்வதா ஆன்மீகம்?
திராவிடம் நீர்த்துப் போனதாகப் பேசுவது ஆரியம் மீண்டும் தழைக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டது. வேதம் உயிர் பெற வேண்டும்; வேதமொழி உயிர்த்தெழ வேண்டும் என்பதற்கானது. எந்தவொரு மனிதனையும் கைதூக்கி விடுவதற்கானது இல்லை இவை. பேதங்கள் பல கூறி மீண்டும் மனிதர்களை கைவிடுவதே நோக்கம். திராவிடம் வீழ்ந்தால் வீழ்வர் திராவிடர் எனில் எழுபவர் எவர்? இதில் கருத்தா சிலர். கருவிகள் பலர்.
தியாகங்கள் எதுவுமின்றி இன்றி தியாக எண்ணங்களால் மட்டும் ஒருவர் முடி சூடிட இயலாது. இழப்புகள் எதுவுமின்றி இன்றி எதையும் பெற்று விட இயலாது.
ஆட்சியாளர்களை ஆள்வது எளிதல்ல. ஒரு திரைப்படம் உருவாவதற்கு ஆயிரம் பேரின் உழைப்பும் முயற்சியும்
தேவை என்றால் ஒரு நாடு உருவாவதற்கான உழைப்பும் முயற்சியும் அதற்கான காலமும் தலைமையும் எளிதானதல்ல. ஒருவர் இயக்கத்தில் நடிப்பது எளிது. தானே எழுதி நடித்து இயக்குவது என்பது முடியாதது என்பதில்லை. பழக வேண்டும் என்பது இயல்பு.
அறத்தோடு வாழ்வு நடத்துபவர்களை பின்பற்றி வாழவே உலகம் விழைகிறது. அரசியலிலும் ஆன்மீகம் கலக்காத அறத்துடன் கூடிய ஆட்சியாளர்களை வரவேற்கவே நாடு காத்திருக்கிறது... அது யாராக இருந்தாலும்.
- எழில்
03 01 2018