கண்ட நாள் முதலாய்-பகுதி-38
....கண்ட நாள் முதலாய்....
பகுதி : 38
வெயில் தன்னை மறைத்து ஒளிந்து கொள்ள மழையின் துளிகள் வான வேடிக்கை காட்டிக் கொண்டிருந்த கார்த்திகை மாதமது.... அன்றும் அதே போல்தான் மேகம் மழைத்துளிகளால் விண்ணையும் மண்ணையும் அலங்கரித்துக் கொண்டிருந்தது...அன்று வழமையை விடவும் மழை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது என்று சொல்லலாம்...
தனது விரிவுரைகளை முடித்துக் கொண்டு வழமையாக அவனுக்காய் காத்திருக்கும் இடத்தில் போய் நின்று கொண்டவள்,இதற்கு மேல் நனைவதற்கு இடமேயில்லையென்ற அளவிற்கு முழுதாகவே மழையினில் குளித்திருந்தாள்....மற்றவர்கள் மழையிலிருந்து தப்பித்து ஒவ்வொரு இடங்களிலும் ஒதுங்கிக் கொள்ள துளசியோ இரு கைகளையும் விரித்து மழையை இரசித்துக் கொண்டிருந்தாள்...
கவிதைகளாய் கொட்டும் மழைத்துளிகளை இரசிக்க யாருக்குத்தான் மனம் வராது..??அவள் இந்த உலகத்திலேயே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்...சுற்றியிருப்பவர்களை மறந்து மழைத்துளிகளில் விளையாடிக் கொண்டிருந்தாள்...
துளசி சிறுவயதிலிருந்தே இப்படித்தான்...வெயிலுக்கு குடை பிடித்துச் செல்பவள்...மழைக்காலமென்றால் போதும் குடையினை எடுத்து தூரப் போட்டு விடுவாள்...வகுப்புகளிற்குச் சென்று வரும் போது நன்றாக நனைந்து கொண்டு வருபவள்,கலைவாணியிடம் இதற்காக இலவசத் திட்டுகளையும் பரிசாக வாங்கிக் கொள்ளத் தவறுவதுமில்லை...
அவள் தன் போக்கிலேயே மழையை இரசித்துக் கொண்டிருக்க அரவிந்தனும் வந்து சேர்ந்தான்...காரில் வந்து ஏறிக் கொண்டவள்,அதன் ஐன்னலைத் திறந்து மறுபடியும் மழையுடனான அவளது விளையாட்டினைத் தொடர்ந்தாள்...அருகில் அரவிந்தன் என்ற ஒருத்தன் இருப்பதையே கண்டு கொள்ளவில்லை அவள்...
அதில் சற்று அரவிந்தனின் மனம் சிணுங்கினாலும்,மழையில் முழுதாய் நனைந்துவிட்டிருந்த அவள் அழகில் கொஞ்சம் தடுமாறித்தான் போனான்...அவளோ மழையை இரசிக்க இவனோ அவளை இரசனையோடு நோக்கிக் கொண்டிருந்தான்...அவளையே கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவன்,கிளம்ப வேண்டும் என்பதையே மறந்து போனான்...
கார் நீண்ட நேரமாக அதே இடத்தில் நிற்பதை தாமதமாகவே உணர்ந்து கொண்டவள்,அவனைத் திரும்பிப் பார்த்தாள்...பார்த்தவள் அவனது கிறக்கமான பார்வையில் அவன் பக்கமாய் கவர்ந்திழுக்கப்பட்டாள்...விழிகளோடு விழிகள் கலந்து காதல் மொழிகளைப் பரிமாறிக் கொண்டிருந்தவர்கள்,எதிரில் கேட்ட ஹார்ன் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்துக் கொண்டார்கள்...
இருவருக்குமே ஓர் நொடி என்ன செய்வதென்றே புரியவில்லை...முதலில் தன்னைச் சுதாரித்துக் கொண்ட அரவிந்தன் காரினைச் ஸ்டாட் செய்ய...வீடு வந்து சேரும் வரை வெளியிலேயே பார்வையைச் சுழல விட்டவாறு வந்தாள் துளசி...
வீட்டை வந்தடைந்ததுமே உள்ளே செல்லத் தயாரான துளசியை கையைப் பிடித்து தடுத்து நிறுத்தியவன்,கண்களில் காதல் ரசம் வழிய அவளின் விழிகளோடு தன் விழிகளை கலந்திடச் செய்தவாறே அவளைத் தன் பக்கமாய் இழுத்துக் கொண்டான்...
அவன் இழுத்த வேகத்தில் அவன் மேலே அவள் தடுமாறி விழ...அவளை இன்னும் நெருக்கமாய் தன்னருகே இழுத்துக் கொண்டவன்,அவள் தன்னைச் சமநிலைப்படுத்தி நிமிரும் முன்னரே அவளது இதழ்களில் அவனது உதடுகளால் முத்தக் கவிதையினை ஆழமாக எழுதி முடித்திருந்தான்...
இதைச் சிறிதும் எதிர் பார்க்காத துளசி நிலை தடுமாறிப் போனாள்...ஆழமான அவனின் முதல் முத்தத்தில் அடித்துச் செல்லப்பட்டவளுக்கு அந்த மயக்கம் தெளியவே சிறிது நேரம் தேவைப்பட்டது...உள்ளமெங்கும் உணர்வலைகள் ஓங்கியெழுந்ததில் அவன் மார்பில் கையை வைத்து அவனைத் தள்ளி விட்டவள்,அவனை நிமிர்ந்து பார்க்காமலேயே உள்ளே ஓடி விட்டாள்...
அவள் தள்ளிவிட்டதும்தான் மயக்கத்தில் இருந்து விடுபட்டு சுயநினைவிற்கு வந்தவனுக்கு,அவன் மேலேயே அவனிற்கு கோபம் கோபமாய் வந்தது...எப்படி இனி அவள் முகத்தில் விழிக்கப் போகிறோம் என்று யோசித்தவனுக்கு தலையே வெடித்து விடும் போலிருந்தது...அன்று பெரிய கண்ணியவான் போலப் பேசிவிட்டு இன்று இப்படி நடந்து கொண்டோமே என்று நினைக்கையில் அவனுக்கே அவன் மேல் வெறுப்பாக இருந்தது..
அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிக் கொண்ட துளசிக்கோ இதயத்தின் படபடப்பு அடங்கவே நீண்ட நேரம் பிடித்தது...அவள் ஏன் அவனை அப்படித் தள்ளிவிட்டு வந்தாள் என்பதைப் புரிந்து கொள்ள அவளுக்கு நீண்ட நேரம் தேவைப்படவில்லை...அவனது முதல் ஸ்பரிசம் அவளை என்னென்னவோ எல்லாம் செய்யத் தொடங்க குளியலறைக்குள் புகுந்து கொண்டவள்,பொங்கியெழுந்த உணர்வுகள் அடங்கும் வரை நீராடிவிட்டே வந்தாள்...
தலையைத் துவட்டியவாறே கண்ணாடி முன் வந்து நின்று கொண்டவள்,விரலால் இதழ்களை வருடிப் பார்த்துக் கொண்டாள்...அவனின் முதல் முத்தம் அவளுக்கு உரைத்த சேதியில் அவள் மேனியெங்கிலும் புதிதான ஓர் மாற்றம் உருவாக ஆரம்பித்தது...
அப்படியே தலையைத் துவட்டியவாறே திரும்பிப் பார்த்தவள்,அறையின் வாசலில் நின்று கொண்டு தலையை நிமிர்த்திப் பார்க்கவே சங்கடப்பட்டுக் கொண்டிருந்த அரவிந்தனை அப்போதுதான் கண்டு கொண்டாள்...அவனது தவிப்பினை அவளாலும் புரிந்து கொள்ள முடிந்தது...
அவனருகே சென்றவள்,அவன் பேச வாய் திறக்கும் முன்னே..
"முதல்ல போய் குளிச்சிட்டு டிரெஸ் மாத்திட்டு வாங்க...அப்புறமா பேசிக்கலாம்..."என்று அவள் சொல்லவும் மறு பேச்சின்றியே உடை மாற்றிவிட்டு வந்தவன்,தலையைத் துவட்டிக் கொள்ளும் எண்ணமேயில்லாமல்,அறையில் இல்லாத அவளைத் தேடி கீழே சென்றான்...
சமையலறையிலிருந்து இரண்டு தேநீர்க் கோப்பைகளோடு வெளிவந்தவள்,தன் முன்னே வந்து நின்றவனிடமும் ஒன்றை நீட்டி விட்டு,தானும் ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டு அவனை அமரச் சொன்னவாறே அவனெதிரேயே அவளும் அமர்ந்து கொண்டாள்...
அவனைப் பார்க்கவே ஒரு மாதிரியாக இருந்தது துளசிக்கு,எப்போதும் புன்னகையோடே வலம் வருபவன்...அவளது முகத்திலும் அதை எதிரொலிக்கச் செய்து விடுவான்...ஆனால் இன்று ஏதோ குற்றவாளிக் கூண்டில் நிற்பவனைப் போன்று தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருந்தவனைப் பார்க்க அவளிற்கு மனம் தாங்கவில்லை...
அவனையே ஆராய்ந்து கொண்டிருந்தவள்,அப்போதுதான் அவனது தலையிலிருந்து வழிந்து கொண்டிருந்த நீர்த்திவலைகளைக் கண்டாள்...
"தலையைத் துவட்டிக்கலையா அரவிந்தன்...??.."
அவள் கேட்டதும்தான் அதைப்பற்றிய நினைவு வந்தவனாக தலையினைத் தொட்டுப் பார்த்தவன்...மீண்டும் அதைத் துடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து அவளைத் தயக்கத்தோடு நோக்கினான்...
ஆனால் அவளால் அதைப்பற்றிய கவலையில்லாமல் இருக்க முடியவில்லை...இருக்கையிலிருந்து எழுந்தவள்,தன் சேலையின் முந்தானையால் அவன் தலையினைத் துவட்டி விட ஆரம்பித்தாள்...அவள் அப்படிச் செய்வாளென்று கொஞ்சமும் எதிர்பார்க்காதவன் அவளது செய்கையில் அவளையே விழிகளில் தோன்றிய திகைப்பு கொஞ்சமும் குறையாமல் நோக்கிக் கொண்டிருந்தான்...
அவனது பார்வையைக் கண்டு மெல்லச் சிரித்தவள்,புருவத்தினை உயர்த்தி கண்களாலேயே "என்ன.."வென்று கேட்டாள்...
அவளது விழியின் கேள்விக்கு தலையை இடம் வலமாக அசைத்து "ஒன்றுமில்லை.."யென்று சைகையாலேயே பதிலுரைத்தவன்..அவளது கண்களை ஊன்றிப் பார்த்தவாறே அவளிடம் மன்னிப்பை வேண்ட வாயினைத் திறந்தான்...ஆனால் அவனிடமிருந்து வார்த்தைகள் வெளிவரும் முன்னே அவனது இதழ்களின் மேலே அவளது விரல்கள் படிந்து அதைத் தடுத்து நிறுத்தியிருந்தது...
"மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை அரவிந்தன்...உங்க உணர்வுகளை என்னால புரிஞ்சிக்க முடியுது...இதைப் போட்டு குழப்பிக்காதீங்க...சரியா...??.."என்று அவள் அவனது உணர்வுகளைப் புரிந்து கொண்டு பேசியதில் அவன் உள்ளம் இன்னும் உடைந்தது..
"என் மேல கோபம் வரலையா துளசி...??.."
"ஏன் வரனும்...??.."
"துளசி.."
"இங்க பாருங்க அரவிந்தன்,நீங்க என்னோட ஹஸ்பென்ட்...ஆனாலும் என்னோட உணர்வுகளுக்கு மதிப்பளிச்சு விலகி நின்டீங்க...இன்னைக்கு வரைக்கும் விலகித்தான் நிற்குறீங்க...இப்போ நடந்தது உங்களை மீறி நடந்த ஒரு விசயம்....இதைக்கூட நான் புரிஞ்சுக்கலைன்னா அப்புறம் உங்களுக்கு மனைவியா இருக்கிறதில எந்த அர்த்தமுமே இல்லை..."
அந்த நொடியில் அரவிந்தனுக்கு துளசியின் மேல் காதல் மேலும் அதிகரித்தது...அதே காதலோடு அவளை நோக்கியவன்,அவளது கைகளில் முகத்தினைப் புதைத்துக் கொண்டான்...அவளும் அப்படியே அவளோடு சேர்த்து அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்..
அவர்களிருவருமே இதுவரையில் ஒருவருக்கொருவர் காதலைச் சொல்லிக் கொண்டதில்லை...ஆனாலும் மனதிற்குள் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தார்கள்...இருவரும் காதலோடு ஒருவருக்குள் ஒருவர் அடைக்கலமாகிக் கொள்ள நகர்ந்து கொண்டிருந்த மணித்துளிகள் ஒவ்வொன்றும் அவர்களின் காதல் சங்கமத்தை மௌனமாய் வேடிக்கை பார்க்கத் தொடங்கியது...
தொடரும்...