தேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி7

" உனக்கு சிவா அண்ணனைப் பிடிக்குமா? அல்லது அசோக் அண்ணனைப் பிடிக்குமா? "

சித்ராவிடம் அவள் தோழி கீதா வினாவினாள்.

" சிவா அண்ணன் சூரியன் மாதிரி. அசோக் அண்ணன் சந்திரன் மாதிரி. சூரியன் வெப்பக் கதிரொளியால் இருளைப் போக்குவான். சந்திரன் குளிர்ந்த கதிரொளியால் இருளிலும் வழிகாட்டுவான்.
ஆதலால் இருவரையும் ரொம்பப் பிடிக்கும். "

சித்ரா தன் அண்ணன்மார்கள் இருவரையும் விட்டுக் கொடுக்காமல் பதிலளித்தாள்.

" அம்மா தாயே! போதும் உங்க அண்ணன்களோட புராணத்தை ஆரம்பிச்சுடாத! "

சலித்துக் கொண்டாள் சித்ராவின் தோழி நந்தினி.

நந்தினி கூறியதைக் கேட்ட சித்ரா கோபமாக எழுந்து போனாள்.

" ஏன்டீ! எப்போ பார்த்தாலும் அவள் அவளோட அண்ணன்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம் இப்படி பேசி அவள கோபப்படுத்துற? "

நந்தினியின் மீது கீதா கேள்வி கணை தொடுத்தாள்.

" ஆமா! இவளுக்கு மட்டும் தான் பெரிய சீமையில இல்லாத அண்ணன்ங்க இருக்காங்க பாரு!
அடி போடீ! ஒருத்தன் சுத்த முரடன். இன்னொருத்தன் சரியான கோழை!
இதுல சூரிய, சந்திரனாம். "

நந்தினியின் குத்தல் பதில் வெளிப்பட்டது.

" நீ சொல்றது தான்டி சரி. ",என்று ஜிங்க் ஜக் அடித்தாள் கல்பனா.

" போதும்டியம்மா! உங்கள திருத்தவே முடியாது. நேரமாச்சு. நான் கிளம்புறேன். ",என்றவாறு எழுந்து சென்றாள் கீதா.

அசோக்கும், சிவாவும் வீட்டில் அமர்ந்து இருந்தார்கள்.
சிவா பகவத் கீதையில் ஒன்றியிருக்க, அசோக் காந்தியின் சத்தியாக்கிரகம் புத்தகத்தை வாசித்துக் கொண்டு இருந்தான்.

கோபமாக வந்த சித்ரா கையிலிருந்த புத்தகத்தைத் தொப்பென்று கீழே போட்டாள்.

சப்தம் கேட்டுத் திரும்பிய அசோக்கும், சிவாவும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள்.

" ஏன்டீ சித்ரா புத்தகத்தை கொஞ்சம் மெதுவாகத் தான் கீழே வைச்சா என்ன? இப்படியா எறியுறது?. ",என்றவாறே சமையலறையில் இருந்து வந்தார் கஸ்தூரி அம்மா.

பதில் பேசாது கண்கள் சிவந்து நின்ற தங்கையிடம், " ஏன்மா கோபமா வந்துருக்க? யாரு என்ன சொன்ன? ".என்று அன்பாகக் கேட்டான் அசோக்.

" வேறென்னவா இருக்கப் போகுது!? அவளோட தோழி நந்தினி எதாவது சொல்லியிருப்ப! ",என்றான் சிவா யூகமாக.

" ஆமா அண்ணா! எப்போ பார்த்தாலும் உங்க ரெண்டு பேரையும் அவ மதிக்காமலே பேசுறா. ",என்று நடந்ததைக் கூறினாள் சித்ரா.
மேலும், " இனி நந்தினி கிட்ட பேசவே மாட்டேன். ",என்று சபதம் பூண்டாள் சித்ரா.

" சித்ரா! கோபத்தில் உணர்ச்சி வேகத்தில் எந்த முடிவையோ எடுக்காதே. எதையும் பேசாதேஎன்று சொல்லி இருக்கேன்ல. மீண்டும் அப்படியே செய்யுற. ",என்று அசோக் கண்டித்தான்.

" நந்தினி ஏதாவது விளையாட்டுக்குப் பேசி இருப்பா மா. அதெல்லாம் பெரிசா எடுத்துக் கொள்ளாத. ", என்றாங்க கஸ்தூரி அம்மா.

" ஆமா! நீங்க இன்னைக்கு சண்டை போடுவீங்க. நாளைக்குப் பேசிப்பீங்க. இதெல்லாம் ப்ரண்ட்ஷ்க்குள்ள சகஜம். பெரிசா எடுத்துக்காத. ",என்றான் சிவா.

" நாளையிலிருந்து உன் தோழிகளிடம் எங்களைப் பற்றி பேசுவதை விட்டு விடு.
சரியா? ",என்றான் அசோக் அறிவோடு.

" சரிங்க அண்ணா. ",என்று சித்ரா கூறிவிட்டு தன் புத்தகங்களைப் பொறுப்போடு எடுத்து வைத்தாள்.

மறுநாள் காலை விடுமுறை என்பதால் சித்ரா வீட்டு வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

" சித்ரா! சித்ரா! ஏடி சித்ரா! "

வாசலில் நந்தினியின் குரல் தான் கேட்கிறது.
சித்ரா ஏதும் பேசிக்கவில்லை.

" ஹேய் மச்சி சித்ரா! நான் கூப்பிடுறது உன் காதில் விழுதா? இல்லையா? ",என்று கேட்டபடியே வீட்டுக்குள் வந்தாள் நந்தினி.

" என்ன விடயமா வந்திருக்க? "

சித்ராவின் கேள்வி வெறுமையாக இருந்தது.

" நீ இன்னும் கோபமா தான் இருக்கியானு பார்க்க வந்தேன். கோபமா தான் இருக்க. நான் அப்புறம் வாரேன். ",என்று கூறி புறப்பட்டாள் நந்தினி.

" ஹேய்! நில்லுடி. நான் கோபமா இருக்கேன்னு, உனக்கு யார் சொன்னா? "
புன்னகையோடு கேட்டாள் சித்ரா.

" அப்போ நீ நடிச்சியா? "

" இல்ல. கோபமாதான் இருந்தேன். ஆனால், இப்போ இல்ல. "

" ஏன் கோபம் இல்ல? "

" கோபம் இல்லனா விடேன். "

" ஏன் கோபம் இல்லனு சொல்லு? ", என்று நந்தினி துருவிதுருவிக் கேட்டாள்.

" அசோக்கும், சிவாவும் தான் மா உன் மேல கோபப்பட வேண்டாம்னு சொன்னாங்க. அதோட, இனி அவங்களைப் பற்றி அவ ப்ரண்ட்ஷ் கிட்ட பேச மாட்டேன்னு அவங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கா. ",என்று கூறிவிட்டு பக்கத்து அறைக்குச் சென்றார் கஸ்தூரி அம்மா.

சற்று மௌனம் நிலவியது.

" ஹேய் நந்து! நோட்ஸ் எழுதிட்டியாடி? ",என்றாள் சித்ரா.

" ம்ம். எழுதிட்டேன். அதைக் கொடுக்கத் தான் வந்தேன். மேஜை மேல வைத்திருக்கேன். ",என்று கூறினாள் நந்தினி.

சிவா மாடி அறையிலிருந்து இறங்கி வந்தான் கையில் டைரியோடு.

மேஜை மீது டைரியை வைத்துவிட்டு சட்டை அணிந்து கொண்டு வெளியே சென்றான்.

சித்ரா வேலையை கவனமாகச் செய்து கொண்டிருக்க, நந்தினி மெதுவாக வந்து சிவாவின் டைரியை விரித்துப் பார்த்தாள்.

அதில் எழுதப்பட்டு இருந்தவையெல்லாமே பகவத் கீதை கருத்துகள் மட்டுமே.

அதை வாசிக்க நந்தினிக்கு தலைவலியே வந்துவிட்டது.

" அடப்பாவி! காதல் கவிதை எழுத வேண்டிய வயசுல இப்படி பகவத் கீதையைப் படிச்சு டைரியில் நோட் பண்ணிக்கொண்டு இருக்கிறானே. ", என்று நினைத்துக் கொண்டு டைரியை வைத்து விட்டு திரும்பினாள் நந்தினி.

பின்னாடி நின்று கொண்டிருந்தாள் சித்ரா.

" அய்யோ கேடி! பார்த்துட்டாளே! ", என்று நினைத்தவள், " சும்மா போரடிச்சது, அதான் திருப்பிப் பார்த்தேன். ",என்று உளறினாள் நந்தினி.

" நான் இப்போ உன்கிட்ட எதுவுமே கேட்கலையே! ",என்று
சித்ரா வெள்ளந்தியாய்ச் சொன்னாள்.

" கேட்ட மாதிரி இருந்துச்சு. அதான் சொன்னேன். ", என்றாள் நந்தினி அசடுவழிய.

சித்ரா புன்னகைத்தாள்.
நந்தினி பல்லிளித்தாள்.

" ஹேய் சித்ரா! உன் ப்ரண்ட்டைச் சாப்பிடச் சொல்லு. ",என்று பக்கத்து அறையிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது.

வெளியே சென்றிருந்த சுப்புராஜ் வீட்டினுள்ளே வந்தார்.
அவரும் அமர, மதிய உணவைப் புசித்தார்கள்.
பிறகு, நந்தினி அவளுடைய வீட்டிற்குச் சென்றாள்.
சித்ரா நோட்ஸ் எழுதத் தொடங்கினாள்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (10-Jan-18, 9:20 am)
பார்வை : 150
மேலே