இணைய வருவாயா

என் மூச்சு காற்று
உன் மூச்சு காற்றோடு
வெகு அருகில்
கலந்திட துடிக்கின்றது

என் கனவுகள்
என் நினைவுகளோடு
போட்டியிட்டு முன்சென்று
உன்னை இழுத்து வந்து
என் நெஞ்சத்தோடு
இறுக்கி சேர்த்துக்கொள்கிறது

என் முகம்
என் அகத்தோடு
போட்டியிட்டு முன்வந்து
உன் தோள்களில்
வந்து விழுந்து
அப்படியே அதற்குள்ளாகவே
புதைந்து போக
முந்தி அடிக்கிறது

என் எண்ணங்கள்
எல்லாம் வண்ணங்கள்
பூசிய சிறகுகளை
கட்டிக்கொண்டு உன்னைத்
தேடியே எப்போதும்
பறந்து கொண்டிருக்கிறது

என் இதயம்
ஒவ்வொரு நொடியும்
உன்னைக் காண
உன்முகம் காண
உன்னகம் சாய்ந்திட
உனக்குள் கரைந்திட
தன்னை கட்டுப்படுத்த
முடியாமல் தோற்றுப்போய்
அழுதுகொண்டே துடிக்கிறது

என் ஏக்கங்கள்
எல்லாம் என்னை
தாக்கி தாக்கி
நான் ஒன்றுமில்லாமல் ஆகி
நீ மட்டும் நானாகி
உருமாறிப்போன எனக்கு
உன்னை நினைப்பதை
தவிர வேறல்லாம்
மறந்து போனதே
மருகிப் போகிறேன்

மறதி நோய்
தான் என் காதல்
எனக்கு தந்த பரிசோ
என்னை மறந்து போனேனே

கனவுகளையும் கொஞ்சம்
கவிதைகளையும் சுமந்துகொண்டு
நிழலையும் கொஞ்சம்
நினைவுகளையும் சுமந்துகொண்டு
இப்படியே நான்
இறந்து போகும் வரை
என்னை இழந்து இழந்து
உன்னைத் தேடி தேடி
இரவல் வாழ்க்கை வாழ்வதா
இறுக்கம் கொள்ளாமல்
இணைய வருவாயா
இதயம் இதமாக
என் இனியவளே ...

இருக்கும் நாள் வரை
காத்திருப்பேன் கண்மணி
உயிர் இருக்கும் நாள் வரை
காத்திருப்பேன் கண்மணி

எழுதியவர் : யாழினி வளன் (11-Jan-18, 3:57 am)
சேர்த்தது : யாழினி வளன்
Tanglish : yinai varuvaayaa
பார்வை : 177

மேலே