பொங்கல் வாழ்த்து அல்லது சூரியனைக் காணோம்

பொங்கல் வாழ்த்து (அல்லது) சூரியனைக் காணோம் !

திங்கள் தையின் மங்கள முதல்நாள்
பொங்கல் பானை பொங்கிய பின்னே
பொங்கல் சோற்றை ஞாயிறுக் களிக்க
எங்கள் வீட்டு மாடிக்குச் சென்றால் -------

நேற்றுக் கொளுத்திய குப்பையில் எழுந்து
காற்றில் கலையா போகிப் புகையோ
எங்கும் சூழ்ந்து பார்வையைத் திரையிட
மங்கிய வானம் மெலிதாய்த் தெரிய

கங்குல் மறைந்தால் கங்கென உதித்து
செங்கதி ரொளியை பரப்பும் ஞாயிறைக்
எங்கு தேடியும் காண வில்லையே !
பொங்கலை அவனுக் கெங்கனம் படைப்பேன்?

எனினும் இந்நாள் உங்கட் கெல்லாம்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உரைப்பேன்.
மனிதர், மாடுகள், நெற்கதிர் வயல்கள்
இனிதே இவைகள் நலம்பெற வாழ்த்து.

கருநாடகத்தில் கனமழை பொழிந்து
காவிரி நிரம்பி ஓடிட வாழ்த்து.
திராவிட மக்கள் தடியடி இன்றி
நீரைப் பகிர்ந்து வாழ்ந்திட வாழ்த்து.

ஏரைப் பிடிக்கும் உழவர் எல்லாம்
டிராக்டர்* களுக்கு மாறிட வாழ்த்து * Tractor
"ஸ்மார்ட்போன்* ஆப்"பால் சந்தையில் நெல்லை * smartphone app
தாமே நேராய் விற்றிட வாழ்த்து.

கடைசியாக

"வாழ்த்துக்கள் " என்றுசொல்லி வாயார வாழ்த்திடாமல்
"வால்த்துக்கல் " என்றுசொல்லி வார்த்தையைக் கொல்லும்பலரும்
நாக்கினை நன்குவளைத்து மேலண்ணம்* தன்னைத்தொட்டு
வாக்குசுத்த மாகப்பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லிடவாழ்த்து.

பொங்குக பொங்கல் ! பொங்குக பொங்கல் !
தங்குக எங்கும் பொங்கும் மங்களம்!

எழுதியவர் : கனித்தோட்டம் ரமேஷ் (13-Jan-18, 12:36 pm)
பார்வை : 79

மேலே