எனைத் தின்னும் காதல்

இந்த இரவு எனைத் தின்று கொண்டிருக்கிறது.

உறக்கத்தில் ஊடுருவிய
அந்த ஏதோ ஒன்று
உன் உளவாளியாக தான் இருக்க வேண்டும்.

இடைவிடாது பெய்யும் மழையின்
ஒவ்வொரு துளியிலும்
தீ மூட்டி
எனை எரிக்கிறாய்.

இமைகளுக்கிடையில் நின்று கொண்டு
என் காதலை
எட்டிப் பார்க்கிறாய்.

எப்படித் திசை மாற்றினாலும்
நீ பயணிக்கும் தண்டவாளத்தில் தான்
ஓடிக் கொண்டிருக்கிறது மனம்.

இப்போது கேட்ட முதல்
குயில் பாட்டில்
கூடு கட்டத் தொடங்கி விட்டன
சில வரிகள்.

என் தூக்கம் கெடுத்த
உன் நினைவுகளில்
உருண்டு திரண்டு
ஒரு சூரியன் செய்திருக்கிறேன்.

முதல் ஒளியில் அது
உன் பெயரெழுதி
கையில் தந்து விட்டிருந்தது
கவிதையாய்.

வெண்பனி போர்த்திய
உன் தரிசனம் வேண்டியே
கிளைகள் விரித்து
பூத்துக் குலுங்குகின்றன
ஆசை மரங்கள்.

உன்னில் வேர் பிடித்த
இந்தக் காதலை
எப்படிப் பிடுங்கி எறியப் போகிறாய்?

அப்போதும்
சருகாகி மீண்டும்
உனையே சேர
எப்போதோ வரங்கள்
வாங்கி விட்டேன்.

உனைக் காதலித்து
தீர்ந்து போவதை விட
வேறேதும் இன்பமில்லை
எனக்கு.

ஒரு பட்டாம்பூச்சியின் வண்ணமாய்
உன்னோடே ஒட்டிக் கொண்டிருப்பேன்
காலந்தோறும்.

எழுதியவர் : மேனகா மீனு (13-Jan-18, 4:40 pm)
சேர்த்தது : மேனகா மீனு
பார்வை : 61

மேலே