நாற்காலியின் ஏக்கம்

🪑🪑🪑🪑🪑🪑🪑🪑🪑🪑🪑

*நாற்காலியின்*
*ஏக்கம்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🪑🪑🪑🪑🪑🪑🪑🪑🪑🪑🪑

எத்தனையோ வகை
நாற்காலிகள்
நாட்டில் இருக்கலாம்....
அவைகளுக்கு
இடையில்
'நான்கு கால்களில்
ஒற்றுமை' இருந்தாலும்
அவற்றின் நடைமுறையில்
'வேறுபாடு
இருக்கத்தான் ' செய்கிறது ....

அன்று
அரசியல்வாதி
நாற்காலிகளுக்கு
'ஆயிரம் கைகள்' இருந்தது
நாட்டு மக்களுக்கு
கொடுப்பதற்கு....'
இன்றும் இருக்கிறது
'எடுப்பதற்கு...... !'

அலுவலக நாற்காலிகளுக்கு
அன்று
'சேவை மனப்பான்மை' இருந்தது
இன்று
'தேவை மனப்பான்மை' மட்டுமே
இருக்கின்றது.....

பள்ளியில் உள்ள நாற்காலி
எதிரில் இருக்கும்
மாணவர்களை
'விழிக்க ' வைத்தது....
இன்று
ஆசிரியர்களையே !
'தூங்க' வைக்கிறது

வீட்டு நாற்காலி
விருந்தினர் வருகைக்காக
'ஏங்கிக்' கொண்டிருக்கிறது....
வந்தவர்கள்
'அமருவதற்கு நேரம் இல்லாமல் '
நின்று கொண்டே!
பேசிவிட்டு போய்விடுவதால்....

'உட்காருவதற்காக'
கண்டுபிடிக்கப்பட்டது
ஆனால்
'சிலர் உட்காரும்போது
பலர் எழுந்து நிற்பதற்கே
பயன்படுத்தப்படுகிறது.....!!!

இது மரத்தால்
நெகிழியால்
இரும்பால்
செய்யப்பட்டிருந்தாலும்
பெரும்பாலும்
'அதிகாரம் '
'அடிமைத்தனத்தால்' தான்
அதிகம் செய்யப்பட்டிருக்கிறது..

பதவி நாற்காலி
அதில் அமர்கின்றவரை
சட்டென்று
'ஒரு தலை ராமரை'
'பத்து தலை ராவணனாக'
மாற்றி விடுகிறது...
ஒரு நாக்கு உடையவரையும்
"ஓராயிரம் நாக்குகள்
உடையவராய்"
அவதாரம் எடுக்க வைக்கிறது...

இதில் உட்காருவதற்கு
போட்டி பொறாமை
அடிதடி வெட்டு
குத்து கொலை
வன்முறை
செய்கிறார்கள்....
அதில் அமர்வதற்கான
தகுதியை வளரத்துக்
கொள்மட்டும்
எதுவும் செய்வதில்லை...

நாற்காலியின் மீது
அமர்வதற்கு
மனிதர்கள் மட்டுமல்ல
அந்த நாற்காலியும்
ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறது...
"ஒரு நாள்
நம் மீது
ஒரு நல்ல மனிதர்
அமர மாட்டாரா ? " என்று....

*கவிதை ரசிகன்*

🪑🪑🪑🪑🪑🪑🪑🪑🪑🪑🪑

எழுதியவர் : கவிதை ரசிகன் (30-Jun-24, 7:44 pm)
பார்வை : 45

மேலே