அம்மா மகன் பாசம்
"அம்மா , அம்மா கால் வலிக்குதும்மா! தூக்கிக்கம்மா!" அந்த சிறுவனின் வயது எட்டு. அம்மாவுக்கு பையனை தூக்க ஆசைதான். முயற்சித்தாள்.
"முடியலடா? இன்னும் கொஞ்ச தூரந்தான் ஊரு வந்துரும்பா" என்றாள்.
எப்போதும் தன் அப்பா ஊரிலிருந்து அம்மா ஊருக்கு , அந்த ஒத்தையடிப்பாதையில் தான் செல்வான். இயற்கை, தன் அழகை வழியெல்லாம், பச்சைப்பசேல் என்று வயல் வெளியாய் பறப்பிநிற்கும். தென்னை மரங்கள் கம்பீரமாய் , தலையசைத்து வரவேற்கும்.
அந்த அழகான சிறிய வாய்க்கால் வரப்பு ஓரம் , நடக்கும்போது அம்மா நிலக்கடலைச் செடியை , கொத்தாகப் பிடித்து , அதன் வேரில் உள்ள கடலையோடு , மண்ணைத்தட்டி , நிலக் கடலையை ஒவ்வொன்றாக ஊட்டும்போது , கால்வலி காணாமல் போகும்.
"அம்மா , அம்மா ! அங்க பாரேன் ஆட்டுக்குட்டி! " குறுக்கே வந்த ஆட்டுக்கூட்டத்திலுள்ள , துள்ளிக்குதிக்கும் ஆட்டுக்குட்டியை பார்த்ததும் , கால்வலி பஞ்சாய்ப் பறந்து போகும்.
"கால் வலிக்குதும்மா !" சிறு கற்கள் ரப்பர் செருப்புக்கும் காலுக்கும் இடையில் புகுந்து உறுத்தும்போது, அம்மா அதை அழகாகத் தட்டும்வரை ,அந்த ஒத்தயடிப்பாதையின் சுடுமண் காலைச்சுடும் . கால் நாட்டியமாடும்.
அதோ அங்கே புளிய மரம்!பார்க்கும்போதே அவனுக்கு நாக்கில் எச்சில் ஊறும்.
"அம்மா! எனக்கு புளியங்காய் வேணும்," என்பான் . என்றுமே யாருக்குமே எதையும் இல்லை என்று சொல்லாத அம்மா, தனக்கு பிடிக்காத, புளியங்காயை தன் மகனுக்கு தன் உயரத்தையும் , கால் வலியையும் பொருட்படுத்தாமல் ,குதித்து எட்டிப்பறித்துக் கொடுப்பாள் . அவன் அந்த பிஞ்சுப் புளியங்காயை ஒடித்து சுவைக்கும்போது, ஒத்தயடிப்பாதையில் அவனோடு வந்த கால்வலி மறைந்து , புளிச்சுவை நாக்கைச்சுளற்ற வைக்கும்.
"இன்னும் கொஞ்ச தூரந்தான். நம்ம பெரியம்மா வீடு வந்துரும்! "என்று கூறிய அம்மா ,தன் கைப்பயை எடுத்து, பொரி உருண்டையைக் கொடுத்தாள் . பொரி உருண்டையைக்
கொறிக்கும்போது அதன் சுவையும், கண்கவர் வயல்வெளியின் காட்சியும், அவனை பல நிமிடங்கள் கால் வலியை மறக்கச்செய்யும்.
பெரியம்மா வீடு வந்தாகி விட்டது. அவர்கள் வீட்டுத்திண்னையில் ஆட்டுக்குட்டியை பார்க்க ஒரு பரவசம். இது அவனின் அடுத்த இரண்டு நாள் விளையாட்டுத்தோழன் .
புட்டிப்பாலை குழந்தைக்கு ஊட்டித்தான் அவன் இதுவரை பார்த்திருக்கிறான். ஆனால் ,
தாய் ஆடு காட்டில் மேய்வதால், ஆட்டுக்குட்டிக்குக்கு பெரியம்மா புட்டியில் , தாயின் வாஞ்சையோடு பாலூட்டுவது , அவனின் மனத்தில் ,இரக்கத்தையம் அன்பையும் ஊட்டியது.
இரண்டு நாளும் , இரண்டே நிமிடத்தில் கழிந்ததில் அவனுக்கு வருத்தம்.
"அம்மா போலாமாப்பா? "என்று பெரியம்மா கொடுத்த கனமான பலகாரப் பையுடன், அழைத்தபோது, அவனின் மனம் கனத்தது.
கனத்த இதயத்தோடு பெரியம்மாவையும் , ஆட்டுக்குட்டியையும் விட்டுவிட்டு, மீண்டும் அந்த ஒத்தயடிப்பாதையின் விளிம்பில் , அம்மாவின் கையைப் பிடித்து நடக்க ஆரம்பித்தான், திரும்பித்திரும்பிப் பார்த்துக்கொண்டே!
அவனுக்கு இப்போது நாற்பது வயதுக்கு மேல். சென்ற முறை ஊருக்குச் சென்றபோது
அம்மா இல்லை. அந்த ஒத்தயடிப்பாதையாவது இருக்குமா என்று , தேடினான்.
கண்ணில் தட்டுப்பட்டதென்னவோ, வறண்ட பிளாட்டுபோட்ட நிலங்களும் , ஒரு டீக்கடையுந்தான்.
கனத்த இதயத்தோடு , டீக்கடையின் பெஞ்சில் , அண்ணே, ஒரு ....டீ..என்றவாறு அமர்ந்தான்....!!!