முத்தலாக் தடை மசோதா இப்படியே நிறைவேறலாமா

நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பிய ‘முஸ்லிம் மகளிர் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா’ மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன்படி, முத்தலாக் முறை கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்படவிருக்கிறது. எனினும், மாநிலங்களவையில் பலமாக இருக்கும் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கும் நிலையில், இம்மசோதா நிறைவேற்றப்படுவது என்பது சவாலான விஷயம். எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கருத்துகள் நியாயமானவை. இவற்றை ஏற்று நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி, கருத்தொற்றுமை அடிப்படையில் எடுக்கும் முடிவுகளுக்கேற்ப மசோதாவைத் திருத்துவதுதான் முஸ்லிம் மகளிருக்கு நன்மை செய்யும்.

இச்சட்டத்தின்படி, மூன்று முறை தொடர்ந்து தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும். ஜாமீன் தரப்பட மாட்டாது. இத்துடன், விவாகரத்து பெறும் பெண்களுக்கு முறையான ஜீவனாம்சம் அளிக்கவும், அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பு, வளர்ப்புக்குப் பொறுப்பேற்கவும் வசதி செய்யப்பட வேண்டும். திருமண ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள கணவன் விரும்புவது, சிவில் சட்டத்தின் கீழ் வரும் செயலாக இருக்கும்பட்சத்தில், அவருக்கு கிரிமினல் சட்டப்படி சிறைத் தண்டனை விதிப்பது சரியா என்பது முதல் கேள்வி. மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் என்று கூறிவிட்டு, மூன்று ஆண்டுகளுக்குச் சிறையிலும் தள்ளினால், அவரால் எப்படி அதைத் தர முடியும் என்பது இரண்டாவது கேள்வி. மேலும், தலாக் செய்யும் கணவர் மீது மனைவி புகார்செய்தால், ஜாமீன் பெற முடியாத பிரிவுகளின் கீழ் கைதுசெய்யலாம் என்பது இச்சட்டத்தைச் சிலர் தவறாகப் பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

இந்தச் சட்ட வடிவமைப்பிலேயே உள் முரண்பாடு இருப்பதை யும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். அடுத்தடுத்து மூன்று முறை தலாக் சொன்னால் அது செல்லாது என்கிறது மசோதா. அப்படியானால், அந்தத் திருமண உறவு முடியவில்லை, தொடர்கிறது என்றே பொருள். அதே சமயம், குழந்தைகள் யார் பொறுப்பில் வளர வேண்டும், பராமரிப்புச் செலவு ஆகியவை குறித்தும் பேசுகிறது. மணவிலக்கு தந்த பிறகல்லவா இந்தப் பிரச்சினைகள் எழும் என்று அவர்கள் கேட்கின்றனர். மசோதாவை முறியடிப்பதற்கான வாதங்கள் என்று இவற்றைப் புறந்தள்ளிவிட முடியாது.

பாஜகவுக்கு ஆதரவான நிலையில் இருக்கும் அஇஅதிமுக, தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் இந்தக் குற்றவியல் சட்டப் பிரிவை ஆதரிக்கவில்லை. மக்களவையில் இந்த மசோதா நிறைவேறும்போது மெளனம் காத்த காங்கிரஸ், மாநிலங்களவையில் இதை நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவதால் மசோதாவில் உள்ள குறைபாடுகளை நீக்க முடியும் என்கிறது. முதலில் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. மும்முறை தலாக் கூறிய கணவர் கைது செய்யப்பட்டுவிட்டால் அவருடைய மனைவி, குழந்தைகளின் வாழ்க்கைச் செலவுக்கு அரசே பொறுப்பேற்குமா என்றும் தற்போது கேள்வி எழுப்பியிருக்கிறது. வலுவான வகையில் இயற்றாமல் இப்படி அவசர கதியிலும் அரைகுறையாகவும் சட்டங்களை இயற்றுவது யாருக்கும் பலன் தராது. எனவே, அரசு இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்து குறைகளைக் களைய வேண்டும்!

தி இந்து தமிழ்

எழுதியவர் : (18-Jan-18, 8:42 am)
பார்வை : 58

மேலே