கவலையின் கவலை

=====================
இரவைப் பகலாக்கி
விழி மூடாமல் படித்து
எதிர்பார்த்தப் பெறுபேறு கனவுகளில்
ஏமாற்றம் இருளை பூசியதென்று
கவலை பூணும் மாணவ மனம்.

இதய சுவர்தனில்
காதலை வரைந்துவிடும் தூரிகையாய்
கண்ணுக்குள் நுழைய காரிகை
வாய்க்கவில்லை என்றே
கவலை கொள்ளும் விடலை மனம்.

கனவுகளை வண்ணமாக்கிய
காதல் வானவில் மறைந்துவிட்டதில்
வாழ்க்கையை இருளாக்கிக்கொண்டு
கவலைக்குள் மூழ்கும் வாலிப மனம்.

தேய்ந்த செருப்புகளுக்கு ஓய்வு
வழங்கி உதறிவிட்டு
புதிதொன்றை அணிந்து
பணி செல்ல கற்பனைகள் வளர்த்து
வேலை தேடும் வேலையில்
விரக்தியாய் சூழும் வேலையில்லாப்
பட்டதாரிகளின் கவலை.

மரம்போல் வளர்ந்திருந்தும்
மாட்டைப்போல் கவலை இல்லாமல்
இருக்கிறாயே என்று எதற்கும்
கவலைப்படாத பிள்ளைகளைப்பற்றிக்
கவலை கொள்ளும் பெற்றோர் கவலை.

வாய்த்தது சரியில்லை
வாழ்க்கையை வாழ்வதெப்படியோ
என்று வாழப்போவதை எண்ணி
வாழாதோர் வாழ்வின் கவலை.

மக்களைப்பற்றிக் கவலைப்படாதவர்கள்
மந்திரியாகவும் தலைவராகவும்
மாமனிதர்களாகவும் மகிழ்ச்சியோடு வாழ,
மக்களாகிய நமக்கு நாம்
அவர்களை உருவாகிக்யதை
எண்ணிக் கவலை.

அந்தக் கவலை இந்தக் கவலையென
கடைசியில் கவலையே இல்லையென
கவலை கொள்ளும் கவலை.

கவலைக் கறையான் இதயம் அரித்து
உடல் சிதைத்து ,உயிர்க்குடித்து
ஒய்யாரப் பாடையில் ஏற்றும் என்று
சற்றும் கவலைப்படாமல்
கவலை கொண்டுவிடுகிறோம.

உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு
உறவுகளை கொன்றுவிடுகின்ற
உள்ளங்களில் வேர்விடாத கவலையை
உணராமல் கவலை வைத்து
வாழ்க்கைப் பூந்தோப்பில்
மகிழ்ச்சிப் பூக்கும் காம்புகளில்
முற்களை வளரவிடுகிறோம்.

கவலைகள் ஒருபோதும்
கவலை கொள்வதில்லை என்பதை
கவலை மறந்து ஏற்றுகொள்ள
கவலைகள் மகிழ்ச்சியின் விதைகளை
மனதுக்குள் விதைக்கின்றன

மகிழ்ச்சி விளைந்த மனதில்,
தங்குதற்கு இடமின்றி
வெளியேறும் கவலையைப்
போக்கிடமற்றுத் தவிக்கும்
கவலைக்குள்ளாக்கு.

ஒரு அகதியைபோல் அது தன்
சொந்தக் கவலைக்குள் மூழ்கட்டும்,

.*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (25-Jan-18, 2:49 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : kavalaiyin kavalai
பார்வை : 222

மேலே