கொடி ஏற்று

ஆண்டாண்டு காலமாய்
அரசாண்ட ஆதிக்கம்! - இங்கே
இன்னும் அது இருந்தால்
இந்தியாவைப் பாதிக்கும்! - எனப்

பாதிக்கப் பட்ட குடி -இனிப்
பாராள ஏற்று கொடி -என்று
சாதிக்குச் சவுக்கு அடி -கொடுத்துச்
சாதித்த ஆதி குடி!

ஆதி குடிக்கெல்லாம் ஆதவனாய் -ஒரு
மாதவன் முளைத்தெழுந்தான் -இருட்டில்
நாதியற்றோர் கொடுமைகண்டு -அறிவு
நெருப்பாகிக் கொதித்தெழுந்தான்

பட்டம்சூடி ஆண்ட நாட்டை -இனிச்
சட்டங்களே ஆளவேண்டும் -எனத் திட்டம்புது தீட்டிவைத்தான் -அந்தப்
பட்டம்பெற்ற சட்டமேதை!

மேதைகளால் நிறைந்த தேசம்
மேட்டிமைகள் கொண்ட தேசம்
பேதைமையால் பின்வாங்க -அந்தப்
பேரறிவாளன் முன்வந்தான்

முன்வந்தவன் முன்வைத்த -முன்பிங்கு
பின்தள்ளப்பட்டவன் கைவைத்த
பன்முகத்து அறச்சட்டம்
பரதகண்டம் ஆளுதடா!

ஆளவேபிறந்தார் ஆருமில்லை!
அடிமையெனத் தொடர்ந்தாரும் இனியில்லை!
மாளவே போகுதடா மனுநீதி -இனியிங்கு
மாமேதை சொன்னதுதான் மனிதநீதி!

நீதி உயர்ந்திட கொடியேற்று!
நின் சாதி மறைந்திடவும் கொடியேற்று!
வீதி முழுவதும் கொடியேற்று!
விடுதலை நமக்கென்று கொடியேற்று!

கொடிகாத்த குமரன்கள் மத்தியில்
குடிகாத்த அமரன் அம்பேத்கர் -அவர்
அடிவைத்த பாதையில் நடைபோட்டு -இனி
அதிகாரம் சமமென்று கொடியேற்று!

இது இனிப்புக்குக் கொடியேற்றும் தினமல்ல!
அவர்பட்ட கசப்புக்கு மருந்திடும் தினம்! -எனவே
கோடி வணக்கங்கள் செலுத்தி -நீ
கொண்டாடு குடியரசு தினம்!


- நவீன் இளையா

எழுதியவர் : நவீன் இளையா (26-Jan-18, 11:18 am)
பார்வை : 84

மேலே