கற்பனைக் காதலி விற்பனைக்கு அல்ல

சேவல்கொடி உச்சியேறி காற்றசைவில் காதல்சொல்ல
ஆவல்கொண்ட பிச்சிப்பூவே ஆற்றங்கரை கண்டபிறையே...!
விரிமலர் பசியாறும் வினைவண்டு நானல்ல
கரிக்கோலின் வசிப்பிடத்தே எனைக்கண்ட பொன்மானே...!
விசைகொண்ட விழியழகே அசைபோடும் மொழியழகே
திசைகண்ட வழியெங்கும் இசைக்கின்ற ஆழிமுத்தே...!
இதமான நகையோடு மிதமான சொல்லாடல்
உதட்டோரம் சிகையாட மதம்கொள்ளச் சொல்லுதடி...!
கற்கண்டு சொல்லழகி கவிபாடி அழைத்ததினால்
சொற்பதங்கள் மெல்லநழுவி செவிச்சிறை நிறைத்தனவே...!
தாரகைநீயும் வசியம்செய்ய வண்ணக்கனவில் வருவாயனால்
தூரிகைகொண்டே கசிந்துருகி திண்ணமாக தருவிடுவேன்...