நினைவுப் பெட்டகம்-2017

நினைவுப் பெட்டகம்-2017
==========================

அனைத்துலக நிகழ்ச்சிகளும் ஆடி அமருமிடமாம்..
..........அருமைப் பெட்டகமதுவே நம்மரிய நினைவாகும்.!
அனைவரிடமும் இருக்குமிந்த அரும் பொக்கிஷம்..
..........அதி லமிழ்ந்திருக்கும் ஆயிரமாயிரம் இன்பதுன்பம்.!
எனையது உறக்கத்தில் தட்டியெழுப்பும் அதுநாம்..
..........ஈட்டிய சாதனைகளும் கூடவேசில சோதனையும்.!
சுனையாய் மனதிலென்றும் மகிழ்வுடனே சுழலுவது..
..........சீறிப்பாய்ந்த செயற்கைக் கோளதற்கே முதலிடம்.!


தினைவிளையும் புலமதில் வினைவிதைத்த செயல்..
..........தனைப்போல் துயரமுமப் பெட்டகத்துள் உண்டு.!
பனைமரம் வேரொடு சாய்வதைப்போல்...சாய்த்து..
..........படுகுழி பறிக்கும்வரியும் வட்டியும்.!...குருதியில்
நனைந்து நாடுகாக்கும் வீரரின் உயிர்த்தியாகமும்..
..........நாற்புரமும் நாளும் நடந்தேறிய சோகக்கதைகள்.!
நினைவகலா மல்லுக்கட்டிய சல்லிக்கட்டு சடுத்தம்..
..........நினைவில் கடலலைபோல தினமும் புதைந்தெழும்.!


கருங்குயிலின் முட்டையோ காக்கை கூட்டிலதுபோல..
..........கருப்புப்பணம் ஒளிந்து கொண்டது அயல்நாட்டில்.!
கருடப் பார்வையால் கண்விழித்துப் பார்த்தாலும்..
..........கடந்துவிடு மெல்லை தாண்டிய தீவிரவாதச்செயல்.!
பெருவினை புரிந்தபுயலும் இயற்கைப் பேரிடரும்..
..........திரும்பிநமைப் பார்க்கச் சொல்லும் விரும்பாமல்.!
வருங்காலத்தில் கடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும்..
..........வரிசையாய் இடம்பெறும் நினைவுப் பெட்டகத்தில்.!


பதவியிலே அமர்வதற்குப் பலவித போட்டிகளாம்..
..........பந்தாடும் அரசியலில் அரங்கேறும் சூழ்ச்சிகளாம்.!
உதவிடும் மனப்பான்மை இல்லாத உள்மாநிலத்துள்..
..........உப்புக்கடலில் வீணேசேரும் நீருக்கு அடிதடியாம்.!
எதற்கிந்த ஏவுகணை என்பதைநாம் அறியுமுன்னே..
..........ஏனிந்த உலகையழிக்கும் அணுவாயுத அச்சுறுத்தல்.!
பதற்றமே நிறைந்தயிந்தப் பாருலகு வாழ்க்கையில்..
..........பதியுமாம் பல்நிகழ்வுகள் நினைவில்....பெட்டகமாக.!
====================================================

நன்றி:: தினமணி வெளியீடு:: 30-12-17
நன்றி:: கூகிள் இமேஜ்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (9-Feb-18, 8:56 pm)
பார்வை : 79

மேலே