துணிந்து வாழ்

நம்மை ஒதுக்கியவர்களுக்கும், ஒதுக்குபவர்களுக்கும் முதலில் நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
அவர்கள் ஒதுக்கியதால் தான் நாம் தனித்துவம் விளங்குகிறோம்.
இன்று அஸ்தமித்த சூரியன் நாளை உதிக்கும் என்பதை மறவாதே!

கடந்து கொண்டே இரு.
யார் வென்றாலும் தோற்றாலும் பூமி நிற்காது என்பதை புரிந்து கொள்.
உன்னுடைய தனித்துவ பாதையில் நடைபோடு.

விதியென்று நொந்து கொள்ள எதுமில்லை.
மதி கொண்டு வெளியே வா.
மயக்கம் தவிர்த்து நல்மதி கொண்டு போராடு.
உன் வாழ்க்கை என்றும் உன்னோடு.
அதோடு எதற்கு தகராறு?

பழி உணர்வை அழித்திடு.
பசியைப் போக்க உணவை அளித்திடு.
ஒவ்வொரு நொடியும் கொண்டாடு.
நட்சத்திரங்களைப் போல் இருந்தாலும் வானத்தின் அங்கமாய் ஒளிர்ந்திடு.
மனதின் அளவை விரித்திடு.

புன்னகை சிந்த தயங்காதே.
புத்தொளி பிறக்கும் மறவாதே.
ஞமிறுகளின் சொற்களை காதில் வாங்காதே.
சூரியனை உன் வழிகாட்டியாக்கிடு.
குளிர் சந்திரனும் துணைவருவான்.
இருளெங்கும் நீங்கும் ஒளி உன்னிலிருந்து பரவட்டும்.
புது உலகத்தில் நாளைய தலைமுறை ஆனந்தமாய் வாழட்டும்.

நீ கவனம் கொண்டால் முடியாது எதுவுமில்லை.
துணிவை தாரக மந்திரமாக்கு.
உன் துணிவை தாரக மந்திரமாக்கு.
வெற்றி பெற இறைவன் அருள் செய்வானாக...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-Feb-18, 8:22 am)
Tanglish : thuninthu vaal
பார்வை : 6108

மேலே