கண்ட நாள் முதலாய்-பகுதி-46

....கண்ட நாள் முதலாய்....

பகுதி : 46

"என்னடா அப்படிப் பார்க்குற...??..."என்றவாறே அவன் முன்னால் வந்து நின்றான் அர்ஜீன்...அவனைத் தொடர்ந்து பவியும் அர்ஜீனின் அருகில் வந்து நின்று கொண்டாள்...அவர்களிருவரும் புன்னகை மாறாத முகத்தோடு அரவிந்தனைப் பார்க்க...அரவிந்தன்தான் அவர்களிருவரையும் ஒன்றாகப் பார்த்ததில் குழம்பிப் போய் நின்றான்...

"ரொம்ப யோசிக்காதடா...நானே எல்லாத்தையும் சொல்லிடுறன்..."

"நானும் உன் வழியிலேயே சரண்டர் ஆகிடலாம்னு முடிவு பண்ணிட்டேன் டா..."என்று அவன் சொல்லி முடித்துப் பவியைப் பார்க்கவும்...அவள் அர்ஜீனை கோபமாய் ஒரு பார்வை பார்த்து வைத்தாள்...

"அடிப்பாவி...உன்கிட்ட சரண்டர் ஆகிட்டேன்னுதானே சொன்னேன்...அதுக்கு ஏன்டி இப்படி முறைக்கிற...??.."அவன் அதை அரவிந்தனின் முன்னால் சத்தமாகவே கேட்டு வைத்ததில் அவன் கையினைக் கிள்ளி வைத்தாள் பவி...

"ஆஆஆ....டேய் இதுக்கு மேல உனக்கு புரிய வைக்க முடியாதுடா...அதுக்குள்ள இவ என் உடம்பில இருக்கிற மொத்த சதையையும் பிச்சு எடுத்திடுவா போல..."என்று அவன் பவியை மேலும் வம்புக்கிழுக்கவும்...

"உங்களை..."என்றவாறு அவள் அரவிந்தன் இருப்பதையும் மறந்து அர்ஜீனின் காதைப் பிடித்து திருகத் தொடங்கிவிட்டாள்...

"ஆஆ...ஆஆ...வலிக்குது விடுடி..."என்று அவன் அலறத் தொடங்கவும்...அவர்களின் விளையாட்டைப் பார்த்து வாய்விட்டு நன்றாகவே சிரித்தான் அரவிந்தன்...அவர்களுக்கிடையே இருந்த காதலைக் கண்ட பின்னர்தான் அரவிந்தனின் மனம் முழுமையாகவே அமைதியடைந்தது என்று சொல்ல வேண்டும்...

துளசி அர்ஜீனைக் காதலிக்கவில்லையென்றாலும் அர்ஜீன் துளசியைக் காதலித்திருக்கிறான் என்பது அவன் மனதை கொஞ்சம் உறுத்திக் கொண்டுதானிருந்தது...அதுவும் இப்போது சரியானதில் அரவிந்தன் மிகுந்த சந்தோசத்தில் இருந்தான்...இனி அர்ஜீனைப்பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை என்று நினைத்தவன்,மனதில் ஏற்பட்ட அதே மகிழ்ச்சியோடே அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான்...

"ரொம்பவே சந்தோசமா இருக்குடா...வீட்ல சொல்லிட்டியா...??..."

"இப்போதான் எல்லார்கிட்டையும் சம்மதம் வாங்கிட்டு வாறோம்...இரண்டு வீட்லையுமே எந்த மறுப்புமில்லாம உடனேயே ஓகே சொல்லிட்டாங்க..."

"அப்புறம் என்னடா...அடுத்து உன் கல்யாணம்தான்னு சொல்லு..."

"எங்க எனக்கும் உடனே பண்ணிக்க ஆசையாத்தான் இருக்கு...இவதான் இப்போ வேண்டாம்...இன்னும் இரண்டு வருசம் கழிச்சு பண்ணிக்கலாம்னு என் தலையில பெரிய குண்டையே தூக்கிப் போட்டுட்டாளே...??.."என்று அவன் சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொல்லவும்...அரவிந்தனும் பவியும் சிரிப்பை அடக்க முடியாமல் மாறி மாறிச் சிரிக்கத் தொடங்கிவிட்டனர்...

"என் நிலைமையைப் பார்த்தா உங்க இரண்டு பேருக்கும் சிரிப்பா இருக்கா...வீட்லதான் எல்லாரும் அவளுக்கு சப்போர்ட்னா...நீயுமாடா அரவிந்..??.."

"என்ன பண்றதுடா...உன் ஆளுதான் என் ஆளோட பெஸ்ட்டு ப்ரண்ட் ஆச்சே...அப்போ நான் பவிக்குத்தானே சப்போர்ட் பண்ணி ஆகனும்...இல்லைன்னா மேலிடத்தில நான் காலியாக வேண்டியதுதான்..."

"அடப்பாவி...உன்னையெல்லாம் அண்ணன்னு நம்பி வந்தன் பாரு...என்னைச் சொல்லனும்..."

"அவர விடுங்கண்ணா...அவரு இப்படித்தான் ஏதாச்சும் சொல்லிட்டே இருப்பாரு..."என்றவள் அர்ஜீனது முறைப்பைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்தாள்...

"துளசி இன்னும் கம்பஸ்ஸால வரலையா..எப்போ வருவாள்...??அவகிட்டயும் இன்னும் ஒன்னும் சொல்லல..."

"இப்போ அவளைத்தான் கூப்பிட போயிட்டிருக்கேன்...நீங்க உள்ள வெயிட் பண்ணுங்க...ஒரு வைப் மினிட்ஸ்ல வந்திடுறோம்..."என்றவன் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான்...

"பார்த்துப் பத்திரம் மா...ஏதாச்சும் சேட்டை பண்ணான்னா சொல்லு...வந்து அவனைக் கவனிச்சுக்கிறேன்..."

"இதை நீ என்கிட்டதான்டா சொல்லியிருக்கனும்..."என்று வாயைத் திறந்தவன்...அவளது கிள்ளலில் வாயை இறுக்கமாய் மூடிக் கொண்டான்...இருவரும் அடித்துக் கொள்வதைப் பார்த்துப் புன்னகைத்தவாறே துளசியை அழைத்து வருவதற்காய் கிளம்பினான் அரவிந்தன்...

அரவிந்தன் கிளம்பும் வரையிலும் நல்ல பிள்ளை போல் சோபாவில் தள்ளியிருந்தவன்,அரவிந்தன் அந்தப் பக்கம் செல்லவும் அவளிற்கு நெருக்கமாய் வந்து அமர்ந்து கொண்டான்...அவனின் அந்த செய்கையை உள்ளூர ரசித்தாலும் வெளியில் கோபமாகவே காட்டிக் கொண்டாள் பவி...

"இப்போ எதுக்குடா என்னை இடிச்சுகிட்டு உட்காருற...அதான் இவ்வளவு இடம் இருக்கு ல...தள்ளி உட்காருடா..."

"அப்போ நான் உன் பக்கத்தில வந்து உட்கார்ந்தது உனக்குப் பிடிக்கல..."

"ஆமா பிடிக்கல..."

அவள் அப்படிச் சொன்னதுமே சோபாவின் மறு மூலைக்குச் சென்று அமர்ந்து கொண்டான் அவன்...அவனது அந்த விளையாட்டுத்தனமான கோபத்தைக் கண்டு லேசாகப் புன்னகைத்தவள்,அவனைக் கண்டும் காணாதது போல் முன்னே இருந்த பத்திரிகையை எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள்...

அவள் வந்து சமாதானம் செய்வாள் என்று எதிர்பார்த்தவன்...அவள் தன் பாட்டில் பத்திரிகையில் மும்முரமாக இருக்கவும்,முதலில் அவளை மனதிற்குள்ளேயே திட்டித் தீர்த்துக் கொண்டான்...பின் அவனை மறந்தே அவளைக் கொஞ்சம் கொஞ்சமாய் ரசிக்கத் தொடங்கிவிட்டான்...

பழகிய கொஞ்ச நாட்களிலேயே அவள் காதலால் அவனைத் தலைகீழாகப் புரட்டி போட்டிருந்தாள்...இன்னொருத்தியை காதலித்தவன் என்று தெரிந்தும்...அவள் அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அவனிடத்தில் காதல் சொன்னது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது...

அன்று கடற்கரையில் அவனைக் கண்ட நாளிலிருந்தே காதலித்துக் கொண்டிருந்திருக்கிறாள் என்பதை அவன் அறிந்த போது அவளின் மேலான அவனது காதல் இன்னும் அதிகரித்தது...இனி அவளில்லாத ஒரு வாழ்க்கையை அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை...தானா இப்படியெல்லாம் மாறிப்போனோம் என்று அவனுக்கே அது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தாலும் அவளது காதலில் அவனை அவனே முழுதாய் தொலைத்துவிட்டான் என்பதுதான் உண்மை...

"என்னடா...என்னையே சைட் அடிச்சிட்டிருக்க...??..."என்று பத்திரிகையில் பார்வையைப் பதித்தவாறே கேட்டாள் பவி...

அவளின் தீடீர் கேள்வியில் முழித்துக் கொண்டவனின் உதடுகள் அவளது கேள்வியை நினைத்து புன்னகையில் விரிந்து கொண்டது...அவளும் அதே நேரத்தில் சரியாக அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டவள்,புருவத்தை லேசாக உயர்த்தி அவனைப் பார்த்து குறும்போடு சிரித்துக் கொண்டாள்....

அவளைக் கண்களாலேயே தன்னருகே அழைத்துக் கொண்டவன்,அவள் அவனிற்கு அருகாய் வந்ததுமே அவளது இரண்டு கரங்களையும் எடுத்து தன் கரங்களுக்குள் பத்திரப்படுத்திக் கொண்டான்...அவளது விழிகளுக்குள் தன் விழிகள் கொண்டு ஊடுருவல் செய்தவாறே அவளிடம் கேட்க நினைத்ததனைத்தையும் கேட்க ஆரம்பித்தான்....

"என்னை ஏன்டி இவ்வளவு காதலிக்குற...??.."

"தெரியல அர்ஜீன்..."இதை அவனிடத்தில் அவள் சொல்லும் போதே அவளது குரல் கலங்கியிருந்தது...

"பவி.."என்று விளித்தவனின் குரலிலும் அதே கலக்கம்..

"உண்மையிலேயே எனக்கு உங்களை எதனால இவ்வளவு பிடிச்சிருக்குன்னு தெரியல அர்ஜீன்....அன்னைக்கு உங்களை முதல் முறையா பார்த்தப்போ...நீங்க யாரு...எப்படிப்பட்டவர்னு எனக்கு எதுவுமே தெரியாது...ஏன் எனக்கு உங்க பெயர் கூடத் தெரியாது....ஆனால் அந்த நிமிசம் எனக்கு தோனிச்சு அர்ஜீன்.. எனக்கானவர் நீங்கதான்னு..."

"அது ஏன் எதனாலன்னு எனக்கு இப்போவரைக்கும் சத்தியமாத் தெரியல...அதுக்கப்புறம் உங்களைப் பார்ப்பனா மாட்டானா என்று ஒவ்வொரு நாளும் ஏங்கியிருக்கேன்...ஆனால் இப்போ என்னோட மொத்தக் காதலுக்குமே பதிலாய் நீங்க எனக்கு மொத்தமாவே கிடைச்சிருக்கீங்கன்னு நினைக்கும் போது...ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு அர்ஜீன்..."

அவள் ஒவ்வொன்றாய் சொல்லச் சொல்ல அவளது கண்கள் கலங்கியதை விடவும் அவனது கண்கள்தான் கண்ணீரில் நனைந்து கொண்டிருந்தன...அவன் இதற்கு முன்னும் ஒருத்தியைக் காதலித்திருக்கிறான்தான்...ஆனால் அவன் ஒருத்தியால் காதலிக்கப்படுவது இதுவே முதல் தடவை....அவளது அந்த அதீதமான காதல்தான் அவனை மேலும் மேலும் அவளிடமே சரணடையச் செய்து கொண்டிருந்தது...

இரு கரங்களாலும் அவளது முகத்தினைப் பிடித்துக்கொண்டவன்...அவளது கன்னங்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டான்...

"இப்போ நான் உன்கிட்ட சொல்லப்போற இந்த வார்த்தைகளை இதுவரைக்கும் நான் யார்கிட்டயுமே சொன்னதில்லை...இனியும் நான் யார்கிட்டயும் சொல்லப் போறதுமில்லை...இந்த வார்த்தைகள் இனி என்னைக்குமே உனக்கு மட்டுமே சொந்தமானது பவி...."

அவள் அவன் சொல்லப் போகும் அந்த வார்த்தைகளுக்காய் ஏக்கத்தை விழிகளில் ஏந்திக் காத்திருக்க...அவளின் இதழருகே குனிந்தவன்..அவனின் காதல் வார்த்தைகள் மொத்தத்தையும் இணைத்து கவிதையாய் அவளது இதழ்களில் வரையத் தொடங்கினான்...

அவனின் முதல் தீண்டலில் திக்குமுக்காடிப் போனவள்...மெது மெதுவாய் அவளது விழிகளை மூடி அவன் வரையும் கவிதைகளிற்கு காகிதமாய் தன் இதழ்ககளை அவன் இதழ்களிடம் ஒப்படைத்துக் கொண்டாள்...

முத்தக் கவிதையினை அவள் உதடுகளில் எழுதிமுடித்து நிமிர்ந்தவன்..மூடியிருந்த அவள் விழிகள் மீதும் இதழ்களைப் பதித்துக் கொண்டான்...அவன் தந்த முதல் முத்தத்தில் அடித்துச் செல்லப்பட்டவள்...விழி மேல் பதிந்த அவன் இதழ்களின் ஸ்பரிசத்தில் கண்களை மெதுவாகத் திறந்து கொண்டாள்...அவள் நெற்றியோடு தன் நெற்றியை வைத்து அவளை இன்னும் நெருக்கமாய் இழுத்துக் கொண்டவன்,வரைந்த காதலை மொழிகளிலும் சொன்னான்....

"ஐ லவ் யூ பவி....ஐ ரியலி ரியலி லவ் யூ...யெஸ்...நான் உன்னைக் காதலிக்குறேன் பவி...உன்னை உனக்காக மட்டுமே காதலிக்குறேன்.."

அவனது காதல் கிடைக்குமா??கிடைக்காதா??என்ற தவிப்புடனேயே அவனைக் கண்ட நாள் முதலிலிருந்து மனதிற்குள்ளேயே அவன் மேலான காதலை வளர்த்து வந்தவள்...இன்று அவளின் காதல் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் வாயடைத்துப் போய் நின்றாள்...அப்படியே அவனது மார்பில் சாய்ந்து அவனைத் தழுவிக் கொண்டவளின் மனது அவன் மனதோடு ஐக்கியமாகிக் கொண்டது...ஒருவரிடத்தில் ஒருவரைத் தொலைத்துக் கொண்டவர்கள்...ஒருவர் அணைப்பில் ஒருவர் அடைக்கலமாகிக் கொண்டார்கள்...

பல்கலைக்கழகத்தின் முன்னே காரை நிறுத்தியவன்...துளசி வழமையாக நிற்கும் இடத்தில் இல்லாததைக் கண்டு அவளிற்கு அழைப்பினை மேற்கொண்டான்...ஆனால் அவளது போன் சுவிட்ச் ஆப்பில் உள்ளது என்ற பதில்தான் அவனிற்கு கிடைத்தது...உள்ளேயே சென்று பார்க்கலாம் என்று காரை விட்டு இறங்கியவன்...எதிரில் துளசியோடு பணிபுரியும் தோழியொருத்தி வரவும் அவரிடமே துளசி எங்கேயென்று கேட்டுக் கொண்டான்...

"அவ காலையிலேயே உடம்பு சரியில்லைன்னு லீவு போட்டிட்டு கிளம்பிட்டாளே சேர்..."

அவள் காலையிலேயே கிளம்பிவிட்டாள் என்பதைக் கேட்டு உள்ளே அதிர்ந்தவன்...வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டான்...

"ம்ம்...சரிங்க...நான் ஆபிஸ்ஸில இருந்து நேராவே இங்க வந்திட்டேன்...நான் பார்த்துக்கிறேன்...ரொம்ப தேங்ஸ்ங்க.."என்றவன் உடனேயே காரினில் ஏறிக் கொண்டான்...காரில் ஏறிக் கொண்டவனுக்கு துளசி எங்கே போயிருப்பாள் என்ற பயம் தொற்றிக் கொண்டது...

"வீட்டுக்கும் வரல...எங்க வீட்டுக்குப் போயிருந்தா அர்ஜீனும் பவியுமே சொல்லியிருப்பாங்க...அப்போ அங்கேயும் போகல...ஒருவேளை அவளோட வீட்டுக்குப் போயிருப்பாளோ...??.."என்று தோன்றிய மறுநொடியே அவளது வீட்டு இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டுவிட்டான்...ஆனால் அங்கிருந்து வந்த முதல் கேள்வியே அவள் அங்கு இல்லை என்பதை உறுதிப்படுத்த...அவனுக்கிருந்த அனைத்து வழிகளும் அடைத்துக் கொண்டதில் அவள் எங்கு சென்றிருப்பாள் என்று புரியாமல் குழம்பி நின்றான்....


தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (13-Feb-18, 9:05 am)
பார்வை : 543

மேலே