சட்டென்று முடிந்திடும் சாலை

பக்கத்துக்கு அறையில் தூங்கிக்கொண்டிருக்கும் நண்பனின் குறட்டை சத்தம் காதுகளில் எதையோ சொல்லிச் சென்றது. கவிதையா, கர்ஜனையா? என்னால் பிரித்தறிய இயலவில்லை. கண்விழித்து பார்த்தேன். இது எந்த இடம்? எதிரில் இருந்த இருட்டு கண்களுக்கு பழகிட சில நிமிடங்கள் பிடித்தது.

சாலைகள் முடிவதில்லை என யார் சொன்னது? விழித்து பார்க்கையில், இங்கே நான் ஒரு சாலையின் முடிவில் நின்றுகொண்டிருக்கிறேன். பின்னே, இரண்டடி தொலைவில் நிற்கும் தெருவிளக்கின் வெளிச்சம், நான் நிற்கும் இந்த கோட்டுடன் முடிந்துபோகின்றது. இதுவரை என்னை துரத்தி வந்த நாய்குட்டி, பாதை முடிந்தபடியினால் திரும்பி போக எத்தனிக்கின்றது. எதிரே வான், பூமி வேறுபாடு ஏதும் இல்லை. எங்கும் முழுதாய் பூத்த பெருமிருட்டு. நாய்குட்டியின் கண்களில் இருள் மீதான சிறிய பயம் பார்க்கையில் என் உதட்டோரம் சிறு புன்னகை மலர்ந்தது. "உனக்கு நேரம் இருக்கின்றது".

என் முதுகின் பின்னே நீளும் கடந்து வந்த பாதையை ஒரு தரம் திரும்பி பார்த்திடலாமா என ஆழ்மனதுடன் சிறிய ஆலோசனை செய்கையில், இருளினுள் தூரத்தில் நட்சத்திரம் ஒன்று நூலறுந்த பட்டமாக ஊசலாடியது என் கண்களில் விழுந்தது. இருள் தான் எத்துணை அழகு? இருளில் யாவுமே அழகு தான்; நிற, உருவ வேறுபாடுகள் இருளினுள் இல்லை. வண்ண மயிலும், கருநிற களிறும் இருள் சூழ்ந்த நிலையில் ஒரே விதமான அழகு தான். மொட்டுகளும் முட்களும் ஒன்று தான். குப்பம்மாளுக்கும், கேத்ரீனாவுக்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை*. (*இருவரும் குளித்திடும் பட்சத்தில்)

ஆதிகால மனிதன், கற்களை உரசிடாமல், உலகெங்கும் இருள் மட்டுமே நீடித்து இருந்திருக்குமாயின், இனவெறி என்ற ஒன்று இல்லாமல் போயிருக்கக்கூடும் என்று தோன்றிகிறது. காமமும், காதலும் மறைவிடம் தேடி ஓடியிருக்காது. காமத்தை குறிவைக்கும் கெட்ட வார்த்தைகள் என்னவாகியிருக்கும் என்று என்னால் யூகிக்க முடியவில்லை.

எண்ண ஓட்டங்களை கலைக்கும் வண்ணம் நாய் குரைத்தது. பயம் கலந்த ஒரு சிணுங்கல். திரும்பி பார்த்தேன். கடந்து வந்த பாதை, வெளிச்சம் கொண்டு மாருதியின் வாலாய் நீண்டு உறங்கிக்கொண்டிருந்தது. முன்னாள் மனிதன் உலகம் தட்டை என்று நம்பியதின் பின்னர் சிறிது சிறிது அர்த்தம் இருப்பதை இப்பாதை உணர்த்தியது. வேறு ஒரு உலகத்தில், தட்டையான நிழற்பரப்பில் முடிவிலியற்ற பாதைகள் இருந்திருக்கக்கூடும்.

வானிழல் ஒன்று என் பெயர் சொல்லி, ஆங்காங்கே எதிரொலி எழுப்பியது. காரிருள் வசீகரம், என்னை கவர்ந்திழுத்தது. கண்களை மூடி, இருகரம் எதிரில் நீட்டி, வெற்றிடத்தை அணைத்து நான் மெதுவாய் இருளினில் கரையத் தொடங்கினேன். களிறும், மயிலும் என் கரம் பட்டு விலகிச் சென்றன. மொட்டொன்று கன்னம் தடவி, இதழின் மென்மையை உரைத்துப்போனது. வலது புயம் அருகே ரோஜாவின் முள் சிறு கோடிட்டுச் சென்றது. குப்பம்மாளோ, கத்ரீனாவோ இருப்பதன் அடையாளம் இதுவரை தென்படவில்லை. பக்கத்துக்கு அறையில் இருந்து வந்த நண்பனின் குறட்டை சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.

எழுதியவர் : (13-Feb-18, 9:48 am)
பார்வை : 191

மேலே