முதியோர் இல்லத்திலிருந்து ஒரு வரவேற்பு
![](https://eluthu.com/images/loading.gif)
முதியோர் இல்லத்திலிருந்து
ஒரு வரவேற்பு
குழிந்த கன்னங்களில் கோடிழுக்கும்
கண்ணீர்த் துளியால் உனக்கு
எழுதப்படும் கடைசிக் கடிதம் இது
என்றோ இறந்துபோன உன் பாசத்திற்காக
இன்றுவரை காத்திருந்த தாயின்
மரணத்திற்காக உன்னை அழைக்கும்
மரண அழைப்பிதழ் இது
நான் உன்னைக் காண விரும்பியதால்
நீ காப்பகம் வருவதாய்ச் சொல்லி
மாதமும் இரண்டானது இன்றும் வரவில்லை
இறக்கும்முன் உன்னைப் பார்க்க நினைத்த
இறுதி ஆசையும் நிராசையானது
கருவறையில் உன்னைச் சுமந்த
கடன் தீர்க்கவா என்னைக்
காப்பகத்தில் விட்டுவிட்டாய் ?
மாதம் ஒருமுறை வரும்
காப்பகத்தின் கட்டணக் கடிதமாவது
என்னை உனக்கு நினைவுபடுத்துகிறதா ?
இனிமேல் அதுவும் வராது
அன்பில் ஏதும் குறைவைத்தேனா
அறியவில்லை பேதை நெஞ்சம்
இந்த அன்னையைவிடப் பெரிதுதானா
அவள் கொடுத்த கட்டில் மஞ்சம் ?
தொப்புள்கொடி உறவும் கூட
தோற்றுத்தான் போகிறது
தலையணை மந்திரத்தின் முன்
தாரமாக ஒருத்தி வந்து
தாய் என்னைப் பகைத்ததற்கு
தனித்து இங்கு விட்டுவிட்டாய்
தலைமகனே புத்தி கேட்டுவிட்டாய்
வாழும்போது தள்ளிவைத்தாய்
வளமாக நீ வாழ்க வாழ்க !!
செத்த பின்பு கொள்ளி வைக்கச்
செல்வமே வருக வருக !!