முடிவல்ல ஆரம்பம்

முடிவல்ல ஆரம்பம்

“கை ரேகை சொல்கிறது” அதை நான் உங்களிடம் சொல்கிறேன் என்றார் ஜோசியக்கார்ர். தனபாலுக்கு அப்படி ஒன்றும் ஜோசியத்தில் நம்பிக்கையில்லை, நண்பன் பாலுவின் வற்புறுத்தலுக்காக வந்துள்ளான். வந்த இடத்தில் பாலுவின் கையை மட்டும் பார்த்து விட்டு கிளம்பியிருந்தால் பரவாயில்லை.பாலுதான் இவர் கையையும் பார்த்து சொல்லுங்கள் என்று இவன் கையை பிடித்து நீட்டினான். இவனும் நம்பிக்கையில்லாமல் ஜோசியரிடம் கையை நீட்டினான். உங்களுடைய வாழ்க்கை தனிக்கட்டையாகத்தான் இரூக்கும் என்று ஜோசியக்கார்ர் சொன்னவுடன் பார்த்தாயா எவ்வளவு கரெக்டாக சொல்லுகிறார் என்று கண்களாலேயே ஜாடை காண்பித்தான் பாலு, ஆனால் அதற்கு பின் ஜோசியர் சொன்னது அவனையும் குழப்பி தனபாலையும் குழப்பி விட்ட்து. “நீங்கள் உங்கள் மைந்தனால் அவமானத்துக்கு உள்ளாவீர்கள் என்று சொன்னதும் பாலு குழப்பத்துடன் ஜோசியக்கார்ரை பார்த்து இவன் தனிக்கட்டை என்று சரியாக சொல்லி விட்டு மகனால் அவமானம் என்று சொன்னால் எப்படி? கேட்ட பாலுவுக்கு ஜோசியக்கார்ர் சொன்ன பதில்தான் “கைரேகை சொல்கிறது” அதை நான் உங்களுக்கு சொல்கிறேன்
இதை கேட்டபின் இருவரும் குழப்பத்துடன் அவரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டனர். தனபால் ஒரு பெரிய மனித தோரணையுடன் உலா வருபவன், வயது ஐம்பது இருக்கும். தன்னை கட்டை பிரம்மச்சாரி என்று சொல்லிக்கொள்பவன். ஆனால் இளமையில் இவன் ஆடிய ஆட்டங்களால் இவனுக்கு யாரும் பெண் தர முன் வரவில்லை என்பதுதான் உண்மை. பெற்றோர் விட்டு சென்ற சொத்தின் காரணமாக இந்த ஏரியாவில் பெரிய மனித தோரணையில் உலா வருபவன். இவன் இளமைக்காலங்கள் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இருந்ததில்லை. இப்பொழுது ஜோசியக்கார்ர் வேறு இவனை நன்கு குழப்பியிருக்கிறார். இப்படியே இதை நினைத்து பித்து பிடித்தவன் போல் அலைந்து பின் அதை மறந்து விட்டான்.
எப்பொழுதும் ஆட்டோ அல்லது கார் என்று செல்பவன் அனறு ஏதேச்சையாக பஸ்ஸில் ஏறி விட்டான். பஸ்ஸில் அன்று சரியான கூட்டம், இவன் எப்படியோ இடிபாடுகளுக்கிடையே புகுந்து தனக்கென நிற்பதற்கு ஒரு இடத்தை பிடித்து ஸ்..ஸ்..அப்பாடா என தன் பார்வையை சுழல விட்டான். அவன் நேரம் அவன் எதிரில் நீல கலர் சட்டை அணிந்த ஒருவரின் சட்டைப்பைக்குள் இளைஞன் ஒருவன் தன் கையை விட்டு பணம் எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். இதை பார்த்த தனபாலுவுக்கு என்ன செய்வது என புரியவில்லை. இருந்தாலும் சயோசிதமாக “கண்டக்டர்” என்று சத்தமாக கூப்பிட்டான். கண்டக்டர் திரும்பினாரோ இல்லையோ அந்த நீல சட்டைக்கார்ர் சடாரென திரும்ப அந்த இளைஞனும் ஏமாற்றத்துடன் சட்டென கையை எடுத்து விட்டு தனபாலை முறைக்க ஆரம்பித்தான். இவனும் அந்த இளைஞனின் பார்வையை தவிர்க்க வெளியே வேடிக்கை பார்ப்பது போல் பாவ்லா காட்டினான். அதற்குள் ஏதோ ஸ்டாப்பிங் வர கண்டக்டர் விசில் அடித்தார். அதற்காகவே காத்திருந்த அந்த இளைஞன் தனபாலின் முகத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்துவிட்டு வண்டி நிற்பதற்குள் இறங்கி ஓடி விட்டான்.
தனபால் பொறி கலங்கி போய் நின்றான். உடன் பயணித்தவர்கள் அவனை பரிதாபமாக பார்க்க விவரம் புரிந்த சிலர் அவன் பிக்பாக்கெட்காரன், பிக்பாக்கெட் அடிக்கறதை நீங்க கெடுத்திட்டீங்கன்னு உங்களை அறைஞ்சுட்டு போறான். நல்ல வேளை கையிலே பிளேடு, கிளேடு வச்சிருந்தானா இந்நேரம் என்னாவாயிருக்கும்? பயணிகளின் அனுதாபங்கள் இவனுக்கு எரிச்சலை வரவழைத்தன. தனபால் வாழ் நாளில் வாங்கியிராத அடி அது. திடீரென்று ஜோசியக்கார்ர் சொன்னது வேறு ஞாபகம் வந்து தொலைத்தது. தானும் ஒரு காலத்தில் இந்த மாதிரி இருந்து வந்தவன்தான்.மனதில் வன்மம் ஏறியது. அவனை பதிலுக்கு ஏதேனும் செய்ய அவன் மனம் துடித்தது. பஸ் ஏறிய “ஆட்டோ ஸ்டாண்ட்” பக்கம் தெரிந்த மறைமுக நண்பர் (வெளியே மிக நல்லவர், உள்ளே சாம பேத தான தண்டங்கள் அனைத்தும் செய்பவர்) மூலம் அந்த பையனை பற்றி விசாரிக்க செய்தான். பையன் அந்த ஏரியா பக்கம் உள்ள குடிசையில் உள்ளவன், பிக் பாக்கெட்,, வழிப்பறி, அடிதடி, என்று அவன் மீது பல கேஸ்கள் உண்டு. விவரம் தெரிவித்த அந்த நண்பர் என்ன சார் பையனை கூப்பிட்டு விசாரிக்கலாமா? என்று கேட்டார். இவன் மனம் குறு குறுக்க விட்டுப்பிடி என்றது.
இப்ப வேண்டாம் இவன் எப்படி இந்த ஏரியாவுக்குள்ள வந்தான்? இவனுக்கு யாராவது பின்னாடி இருக்காங்களா? விசாரிக்க சொன்னான். ஓரிரு நாட்களில் விவரங்கள் தெரிய வந்தன. இவன் மன நோயாளிப் பெண்ணுக்கு பிறந்தவன். அவள் இந்த குடிசைப்பகுதிக்கு எப்படியோ வந்து இவனை பெற்றெடுத்தவுடன் உயிரை விட்டு விட்டாள். அந்த குடிசை வாசிகள் இவனை எடுத்து வளர்த்துள்ளனர். இவன் முதலில் குடிசைப்பகுதிக்கு சென்று விசாரித்தான். அந்த மன நோயாளி பெண் எப்படியிருந்தாள்? அவள் சொன்ன அடையாளங்கள் இவன் செய்த பாவச்செயலை நினைவு படுத்தின. நல்ல மழையில் குடிபோதையில் வந்தவன் வழியில் படுத்திருந்த இந்த மன நோயாளிப் பெண்ணிடம் செய்த பாவத்தின் விளைவே இந்த இளைஞன் என்பதை முடிவு செய்தான். இவன் மனதில் அற்ப சந்தோசம் வந்தது. ஜோசியக்காரன் சொன்னது உண்மையாகிவிட்டதா? இந்த இளைஞன் என்னுடைய வாரிசா, அவன் வாரிசைக் காண அந்த குடிசைப்பகுதிக்கு விரைந்தான்.(தயவு செய்து கதை முடிந்து விட்ட்து என்று நினைத்து விடாதீர்கள், இது ஆரம்பம் என்று அடுத்த பாராவுக்குள் செல்லுங்கள்)
அந்த குடிசைப்பகுதியில் தனபாலை அறைந்து விட்டு ஓடி சென்ற இளைஞன் முன்பு நான்தான் உன் தகப்பன், உன் அம்மாவுக்கு நான் செய்த விளைவின் காரணமாக பிறந்தவன் நீ என்பதை கொஞ்சம் பெருமையுடன் அதே நேரத்தில் பெரிய மனிதன் தோரணையும் விட்டு விடாமல் இனிமேல் உன்னை நான் பார்த்து கொள்வதாக சொல்லிக்கொண்டிருந்தான் தனபால்.
சற்று நேரம் மவுனமாக இருந்தான் அந்த இளைஞன் குடித்திருப்பான் போல அவன் உடல் தள்ளாடிக்கொண்டிருந்தது. தூ..அருகில் இருந்த சாக்கடையில் துப்பினான். எச்சில் சாக்கடையில் விழுந்து சாக்கடை தண்ணீருடன் ஒரு சில துளிகள் தனபால் முகத்தில் தெறித்தன. நீ எல்லாம் மனுசனாயா? பார்த்தா வெள்ளையும் சொள்ளையுமா இருக்கே? யோவ் இரண்டு கல்யாணம் பண்னவன் கூட இரண்டு பொண்டாட்டிக கூட வாழறதை கெளரவமா சொல்லுவான்யா. அட இல்லீகலா பொண்ணுக கூட வாழறவனுங்க கூட அப்படி வாழறதை பெருமையா சொல்லுவான்.
ஆனா உன்னை மாதிரி ஆளுங்களாலேதான் எங்களை மாதிரி ஆளுங்க ரோட்டுல பொறக்குறோம். இங்க பாத்தியா? இந்த மாதிரி சாக்கடைக்குள்ளதான்யா எங்களை மாதிரி குழந்தைங்க பொறக்குது. நாங்க எல்லாம் கெட்டவங்கதான் இல்லைங்கல்ல, ஆனா உன்னை மாதிரி காரியம் பண்ணிட்டு பெரிய மனுசனாட்டம் வெளியில திரியறது கிடையாது.
. ஆனா ஓண்ணுய்யா உனக்கு கொள்ளி போடணும்னு நீ ஆசைப்படறியோ இல்லையோ நான் உன் பேரை நாறடிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்யா ! இனி என்னை போலீஸ் தேடுதோ இல்லையோ உன் பையன் நான்னு போலீசுல இருந்து எல்லார்கிட்டேயும் சொல்லி வச்சுடுவேன். நீ இனிமே பெரிய மனுசனா வெளியில ஆக்ட் கொடுக்க முடியாது, இதை என்னை பெத்து போட்டுட்டு செத்து போனாளே அவ கொடுக்கற தண்டனையா இருக்கட்டும். இனி மேல் உன் வாழ்க்கை என் கையால் சீரழிவு தான்யா..

தன்பால் தனக்கு தானே அவமானங்களை ஏற்படுத்திக்கொண்டோமோ? என கவலையுடன் நின்றான்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (22-Feb-18, 10:58 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 136

மேலே