அவளின்றி நானில்லை

....அவளின்றி நானில்லை....

"...நீ நானாக
நான் நீயாக
நாமிருவரும் இருதயம்
வரைந்து கொண்ட
காதலின் புது
மொழிகளானோம்..."

என் மனம் என்றுமில்லாதவாறு இன்று கொஞ்சம் அதிகமாகவே படபடத்துக் கொண்டிருந்தது...எப்பொழுதுமே அவள்தான் எனக்காக இன்ப அதிர்ச்சிகளைப் பரிசளித்து என்னைக் காதல் கடலில் தத்தளிக்கச் செய்வாள்...

ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக நான் அவளிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போகிறேன்...முதற் தடவை என்பதால் நான் நினைத்தபடியே அனைத்தும் சுமூகமாக நடந்துவிட வேண்டுமென்று மனம் வேண்டிக் கொண்டது...

ஆம்,நாளை எங்களின் திருமணநாள்...அதுவும் எங்களிருவர் வாழ்க்கையிலும் மிகவும் விசேசமான திருமணநாள்...அதை அவளுக்கு இன்னும் சிறப்பானதாக மாற்றவே இன்னும் சில மணி நேரங்களில் பிறக்கவிருக்கும் எங்களின் திருமண நாளிற்காய் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டுக் காத்துக் கொண்டிருக்கிறேன்...

நம் மனதிற்குப் பிடித்தமானவர்களுக்காய் நாம் கொடுக்கும் ஆனந்த ஆச்சரியங்கள் கூட எவ்வளவு சுகமானது என்பதை என்னால் இப்போது உணர்ந்து கொள்ள முடிந்தது...ஆனால் எப்போதும் விரைவாகச் சுழலும் என் மணிக்கடிகாரம் இன்று மட்டும் மெது மெதுவாய் நகர்ந்து என் பொறுமையை மிகவும் சோதித்துக் கொண்டிருந்தது...

பன்னிரெண்டு மணியாவதற்கு இடையில் இருந்த சில மணித்தியாலங்களில்..என் மனம் அவள் என்னிடம் காதல் சொல்லிய நாளின் நினைவுகளை புன்னகையோடு திரும்பிப் பார்க்கச் சென்றது...எப்பொழுதுமே என்னை முந்திக் கொள்பவள்,காதலைச் சொல்வதிலும் என்னை முந்திக் கொண்டாள்...

அப்போது இருவருமே கல்லூரியில் இறுதி வருடம் படித்துக் கொண்டிருந்தோம்...வேறு வேறு துறைகள் என்றாலும்...பள்ளிக் காலத்தில் இருந்தே இருவருக்குள்ளும் ஆழமான நட்பு வேரூன்றி இருந்ததால்,அவளும் நானும் வேறு வேறு என்ற நினைப்பு இருவருக்குள்ளேயுமே வந்ததில்லை...அதனால்தான் என்னவோ காதலும் எங்கள் அனுமதியின்றியே எங்கள் இருதயத்துக்குள் நுழைந்து கொண்டது போல...

அன்று ஓர் விடுமுறை நாள்...பத்து மணியாகியும் உறக்கத்திற்கு விடுதலையளிக்க மனமின்றி இழுத்துப் போர்த்துக் கொண்டு தூக்கத்தை அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தேன்...அப்பொழுதுதான் அவளிடமிருந்து அந்த தொலைபேசி அழைப்பு வந்தது...

"ஹலோ சொல்லுடி..."

"என்ன பண்ணிட்டிருக்க...??..."

"ஆழ்ந்த உறக்கத்தில் எப்படி படிக்காமலே பாஸ் பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்..."

"தூங்குமூஞ்சி..சீக்கிரமா உன் சிந்தனை எல்லாத்தையும் முடிச்சிட்டு,இன்னும் ஒரு மணித்தியாலத்தில அம்மன் கோவிலுக்கு வந்து சேரு..."

"ம்ம்...சரிங்க மேடம்...உங்கள் உத்தரவுப்படியே ஆகட்டும்..."

வெள்ளிக்கிழமைகளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இப்படி இருவருமே அம்மன் கோவிலுக்குச் செல்வதால்...அன்றும் அது போலொரு நாளாகத்தான் அதை எண்ணிக் கொண்டேன்...ஆனால் அது என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாளாக பதிவாகிக் கொள்ளுமென்று நான் நினைத்திருக்கவில்லை...

கோவில் வாசலை நான் சென்றடையவும்,அவளும் அதே நேரத்தில் அங்கே வந்து சேர்ந்தாள்...

"ஹாய் சிவா...என்ன இன்னைக்கு சரியா சொன்ன நேரத்திற்கே வந்திட்ட..??.."

"எல்லாம் சக்தி மேல இருக்கிற பக்திதான்..."

லேசாக முறைத்தவாறே புருவத்தை உயர்த்தியவள்,

"எந்த சக்தி மேல...??..."

"அம்மன் மேல இருக்கிற பக்தின்னு சொன்னேன்டி..."என்று அவளைச் சமாளித்தவாறே...கோயிலுக்குள் நுழைந்து கொண்டேன்...அவளும் உதட்டோரம் தோன்றிய கேலிப் புன்னகையோடே என்னைத் தொடர்ந்து உள்ளே வந்தாள்...

கோயில் பிரகாரத்திற்குள் நுழைந்ததுமே மனதில் ஓர் புதுவித அமைதி தோன்ற இருவருமே அம்மனைக் கைகூப்பி தரிசித்துக் கொண்டோம்...விபூதியை எடுத்து அவள் நெற்றியிலும் என் நெற்றியிலும் வைத்துக் கொண்டவள்,என் விழிகளோடு அவள் விழிகளை நேருக்கு நேராய் மோதவிட்டாறே என் கரத்தினை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்,

"உன்னோட கையை இப்படி இறுக்கிப் பிடிச்சுக்கிட்டே உன்கிட்ட சொல்லுறதுக்கு என் மனசு பூராவும் வார்த்தைகள் நிறைஞ்சு போய் கிடக்கு சிவா...ஆனால் அது எல்லாத்துக்குமே சேர்த்து இப்போ உன்கிட்ட நான் ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லுறன்..."

அவள் அப்படிச் சொல்லி நிறுத்தியதுமே என்னிதயம் தடக் தடக்கென்று என்னைத் தட்டத் தொடங்கிவிட்டது...என் மொத்த உணர்வுகளும் அவளிடம் சரணடையக் காத்திருந்த அந்த நேரத்தில்,என் உள்ளம் அவளிடமிருந்து கேட்க நினைத்த வார்த்தைகளை அப்போது என்னிடத்தில் சொன்னாள்...

"...ஐ லவ் யூ சிவா..."

அவளது அந்த வார்த்தைகளில்தான் எவ்வளவு காதல்...

"சக்தி.."

"..என்னோட வாழ்க்கை மொத்தமுமே இனி உனக்கு மட்டும்தான் சொந்தமாகனும்னு எந்த விநாடியில எனக்குத் தோனிச்சோ...அந்த விநாடியில இருந்து நான் உன்னைக் காதலிக்குறேன்டா...உன்னை உனக்காக மட்டுமே காதலிக்குறேன்..."

அவள் காதலைச் சொல்லிய அந்த ஒரு நிமிடத்தை என்னால் வார்த்தைகள் கொண்டு சொல்லிவிட முடியாது...அவள் சொல்லிய வார்த்தைகளை விடவும் அவளது விழிகள் என்னிடம் அவளின் ஆழமான காதலை அழகாய் சொல்லிக் கொண்டிருந்தன...

அந்த நிமிடம் அப்படியே உறைந்துவிடக்கூடாதா என்று என் மனம் ஏங்கித் தவித்தது...ஆழமான நேசம் நம்மை நமக்காகவே தேடி வருவது எப்பேற்பட்ட வரமென்பதை அந்த ஒரு விநாடியில் உணர்ந்து கொண்டேன்...

"உனக்கு சொல்றதுக்கு எதுவுமேயில்லையா சிவா....??..."

ஏன் இல்லை...அவளிடம் சொல்வதற்கா அவனிடம் வார்த்தைகளில்லை...வானமளவு வார்த்தைகள் அவன் உள்ளமெங்கும் பரவிக்கிடக்கின்றதே...ஆனால் அவள்தான் என்னை மட்டுமின்றி என் வார்த்தைகளையும் சேர்த்துக் களவாடி விட்டாளே...

சிலநேரங்களில் வார்த்தைகள் சொல்லாத காதலை விழிகள் சொல்லும்...விழிகள் சொல்லாத காதலை இரு மனங்களின் மௌனம் சொல்லும்...அன்றும் அங்கே அதுதான் நடந்தது...என் வார்த்தைகள் சொல்லாத காதலை என்னிரு விழிகளும்,என் மௌனமும் அவளிடம் சொல்லிக் கொண்டன...

என் கரத்தினைப் பிடித்திருந்த அவளது கரத்தினை இன்னும் அழுத்தமாய் பிடித்துக் கொண்ட நான்,என் நெற்றியில் இருந்த குங்குமத்தின் கீற்றினை அவளது நெற்றியில் பதித்து நிமிர்ந்தேன்...அப்போது என் விழிகளோடு இணைந்து என் இதழ்களும் அவளிடத்தில் சொல்லியது...

"சக்தி இல்லைன்னா சிவா இல்லைடி...என்னோட வாழ்க்கை மொத்தத்துக்கும் நீ எனக்கு வேணும் சக்தி...என்னோட வாழ்க்கை முழுவதுக்கும் என்னோட கையை இப்படிப் பிடிச்சுக்கிட்டே என்கூட வருவியா சக்தி..??.."

கண்கள் கலங்க என் கேள்விக்கு தலையை மேலும் கீழுமாய் ஆட்டிப் புன்னகைக்க நின்றவளின் முகம் இன்றும் என் கண்களுக்குள் அப்படியே வந்து நின்றது...அப்போது என் விழிகளோடு அவள் விழிகள் பேசிக் கொண்ட மொழிகள்தான் எங்களிருவர் காதலிலும் நாங்கள் வரைந்து கொண்ட முதல் நேச அத்தியாயம்...

அந்த நாளின் நினைவலைகளுக்குள் மீண்டும் ஒருமுறை சென்று வந்த எனக்கு அதிலிருந்து என்னை மீட்டுக் கொள்ளவே சிறிது நேரம் பிடித்தது...அதிலிருந்து என்னை நிகழ்காலத்திற்கு கடத்தி வந்த நான் நேரத்தை பார்த்துக் கொண்டேன்...

கடிகாரம் இன்னும் இருபது நிமிடங்களே இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்த,என் கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டவாறே அவளை எழுப்புவதற்காய் படிகளில் மெது மெதுவாய் ஏறத் தொடங்கினேன்...அறுபதாவது திருமணநாளை எதிர்நோக்கியிருந்த என் மனம் என்றும் போல் இன்றும் இளமையில் ஊஞ்சலாடத் துவங்கியது..

இன்னும் சில மணித்துளிகள்தான்...நிச்சயம் அவள் எனது திட்டத்தைப்பற்றி அறிந்திருக்க மாட்டாள்...அதனால் என் ஆச்சரியங்களைக் கண்டதும் அவள் எப்படி ரியாக்ட் செய்யப் போகிறாள் என்பதிலேயே என் மனம் சுழன்றடித்தது..

அறைக்கதவினைத் திறந்து மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்தேன்...அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்...அவளின் உறக்கத்தை சிறிது நேரத்திற்கு ரசித்துக் கொண்ட நான்..கட்டிலின் அருகே சென்று என் நரை பூசிய மீசையால் அவளின் கன்னங்களை உரசிக் கொண்டேன்...

அவளிடமிருந்து சிறு சிணுங்கலை எதிர்பார்த்த எனக்கு கிடைத்ததென்னவோ ஏமாற்றம்தான்...அதில் கொஞ்சமாய் என் மனம் சிணுங்கிக் கொண்டாலும் அவளின் கரத்தினுள் இருந்த கடதாசி என் கவனத்தை ஈர்க்க,அதை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்...

அந்த ஒரு பக்கத்தையும் கவிதையொன்று முழுதாய் ஆக்கிரமித்திருந்தது....ஆனால் அவள் அக் கவிதையினை முழுமைப்படுத்தியிருக்கவில்லை...கேள்விகளைத் தொடுத்திருந்தவள்,வெற்றிடங்களை பதில்களாய் விட்டிருந்தாள்..

அவளின் கவிதைகள் என்றுமே என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை...எங்களின் அறுபது வருட திருமண வாழ்க்கையில் என்னை அவள் கவிதைகள் கொண்டு நனைத்ததுதான் அதிகம்...

இப்போதும் அவளது எழுத்துக்களில் என்னைத் தொலைக்க ஆரம்பித்த நான்...அவளை எழுப்ப வேண்டுமென்பதையே மறந்து அவளின் கவிதைக்குள் என்னைத் தேட ஆரம்பித்தேன்...

"...நான் மழை என்றால்...??
......................................................

நான் வெயில் என்றால்...??
.............................................................

நான் மழலை என்றால்...??
..............................................................

நான் மலர்கள் என்றால்...??
...............................................................

நான் ஸ்வரங்கள் என்றால்...??
................................................................

நான் காகிதம் என்றால்...??
.................................................................

நான் வானவில் என்றால்...??
..................................................................

நான் புன்னகை என்றால்...??
..................................................................

நான் கண்ணீர் என்றால்...??
...................................................................

நான் தீ என்றால்...??
....................................................................

நான் கடல் என்றால்...??
....................................................................

நான் நிழல் என்றால்...??
.....................................................................

நான் காதல் என்றால்...??
.....................................................................

நான் நீ என்றால்...??
.......................................................................

நான் இவ்வுலகம் இல்லை என்றால்...??
........................................................................"

இவ்வாறாக அவள் கேள்விகளின் தலைவியாகி என்னை இடைவெளிகளுக்கான பதில்களாக்கியிருந்தாள்...அவள் எனக்காய் விட்டு வைத்த வெற்றிடங்களில் என்னிருதய வார்த்தைகளைக் கோர்க்கத் தொடங்கிய நான்...அவளுக்கான இன்னொரு ஆனந்தப்பரிசாகவும் அதை மாற்றிக் கொண்டேன்....

"...நான் மழை என்றால்...??
உன்னில் நனையும் குடையாகிறேன்....

நான் வெயில் என்றால்...??
உனக்காய் கரையும் பனியாகிறேன்...

நான் மழலை என்றால்...??
உன்னைத் தாலாட்டிடும் தாயாகிறேன்...

நான் மலர்கள் என்றால்...??
உன்னைக் காக்கும் முட்களாகிறேன்...

நான் ஸ்வரங்கள் என்றால்...??
உன்னை இசைக்கும் கலைஞனாகிறேன்...

நான் காகிதம் என்றால்...??
உன்னை எழுதும் கவிஞனாகிறேன்...

நான் வானவில் என்றால்...??
உன்னை வரையும் தூரிகையாகிறேன்...

நான் புன்னகை என்றால்...??
உன்னை முத்தமிடும் இதழ்களாகிறேன்...

நான் கண்ணீர் என்றால்...??
உன்னைத் தாங்கும் விழிகளாகிறேன்...

நான் தீ என்றால்...??
உன்னை அணைக்கும் நீராகிறேன்...

நான் கடல் என்றால்...??
உன்னைச் சேரும் அலையாகிறேன்...

நான் நிழல் என்றால்...??
உன்னைத் தொடரும் துணையாகிறேன்...

நான் காதல் என்றால்...??
உன்னைப் படிக்கும் மாணவனாகிறேன்...

நான் நீ என்றால்...??
உன்னைத் சுமக்கும் இதயமாகிறேன்...

நான் இவ்வுலகம் இல்லை என்றால்...??
என் மூச்சை நிறுத்தி உன்னுடனேயே வந்து விடுகிறேன்..."

அதைப் பூரணமாய் எழுதி முடித்த நான் அக் காகிதத்தையும் என்னுடனேயே பத்திரப்படுத்திக் கொண்டேன்...என் வாசத்தைக் கொண்டே என்னை சுவாசித்துக் கொள்பவள்,இதுவரையிலும் எந்த அசைவுமில்லாமல் படுத்திருந்ததைக் கண்டு உள்ளூர வியப்பாக இருந்தாலும்..அவள் நெற்றியில் என் முத்திரையைப் பதித்து அவளை அழைத்தேன்...

"..சக்தி...சக்தி.."

அப்போதும் அவளிடத்தில் அசைவில்லை...லேசாக என்னுள் பதற்றம் தொற்றிக் கொள்ள அவளின் சுவாசத்தை பரிசீலித்துப் பார்த்துக் கொண்டேன்...எப்போதும் என்னைச் சில்லிடச் செய்யும் அவளின் மூச்சுக்காற்று இப்போது என் மீது படரவில்லை...

என்னிதயத்தை பெரிதாய் ஓர் வலி தாக்க...அவள் மட்டும் பேச்சு மூச்சற்றுக் கிடக்கவில்லை...என் சுவாசமும் எனக்குள்ளேயே அடைத்துக் கொண்டது..."..சக்தி...சக்தி..."என்று என் உதடுகள் முணுமுணுத்துக் கொண்டன...

ஆனால் என் குரல் கேட்டும் அவள் உயிர்த்தெழவில்லை....எப்போதும் என்னை முந்திக் கொள்பவள் இறப்பிலும் என்னை முந்திவிட்டாள்...அவளிற்காய் நான் இன்ப அதிர்ச்சிகளோடு காத்திருக்க அவள் எனக்கு பேரதிர்ச்சியையே பரிசளித்துச் சென்றுவிட்டாள்...

அவள் கரத்தினை இறுக்கமாகப் பற்றிக் கொண்ட நான்..என்னிருதயம் அதன் துடிப்பினை கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துக் கொள்ள...என் இறுதி வார்த்தைகளை எனக்குள் உச்சரித்தவாறே அவளோடு நானும் இணைந்து கொண்டேன்....என் இன்றைய திட்டங்கள் பொய்த்துப் போயிருக்கலாம்...ஆனால் எங்களின் காதல் பொய்த்துப் போகவில்லை..."

"...அவளின்றி நானில்லை..."

உடல்கள் மரணித்தாலும் உள்ளங்கள் மரணிப்பதில்லை....மரணத்தைத்தாண்டியும் வாழும் காதல்களிற்கு இக்கதை சமர்ப்பணமாய்...


அன்புடன்,
...சகி...

எழுதியவர் : அன்புடன் சகி (24-Feb-18, 11:12 pm)
பார்வை : 987

மேலே