உறக்கத்தைக் கலைக்காதே
உறங்கும் உன்மகனின்
உறக்கத்தைக் கலைக்காதே
உறக்கம் கலையும்வரை
உறங்கட்டும் எழுப்பாதே
அல்லிவிழி அழகா லே
அமைதியாய் உறங்கட்டும்
சுமையில்லா உறக்கத்தால்
சொர்க்கத்தைக் காணட்டும்
சின்னஞ்சிறு மழலையவன்
சிறகில்லா பறவையவன்
சுமையறியும் காலம்வரை
இமைமூடித் தூங்கட்டும்
அறியாத வயதினிலே
அமைகின்ற உறக்கத்தை
அன்புள்ள கரத்தாலே
அணையிட்டுத் தடுக்காதே
பள்ளிசெலும் பருவத்திலே
பலபாடம் படிக்கையிலே
கண்ணுறங்க நினைத்தாலும்
கடமையதை தடுத்திடுமே
இப்போது விட்டுவிட்டால்
எப்போது உறங்குவது
வாலிபந்தான் வந்தபின்னே
வந்திடுமா இவ்வுறக்கம்
உறக்கம் கலைந்திந்த
உலகத்தைப் பார்க்கையிலே
இன்னல்கள் சூழ்ந்திடுமோ
இம்சைபல வந்திடுமோ
பட்டங்கள் முடித்திட்டு
பணிகிடைக்க வழியின்றி
லஞ்சப் பணம்கொடுத்து
கெஞ்சுகின்ற நிலைவருமோ
பருவப்பெண் ஒருத்தியினால்
பாதைதான் மாறிடுமோ
காதலினால் கட்டுண்டு
கடமைவிடும் நிலைவருமோ
பணிவில்லாப் பெண்ணொருத்தி
துணைவியென அமைவாளோ
சொற்களினால் கல்லெறிந்து
சோகம்தந்து நடப்பாளோ
போதைப்பொருள் விரும்பி
புதைகின்ற நிலைவருமோ
பொல்லாத மனிதர்களால்
பொல்லாங்கு ஏற்படுமோ
கைபேசி கவர்ச்சியினால்
கண்ணுறக்கம் தொலைப்பானோ
பழகிடும் நண்பர்களால்
பாதைமாறி போவானோ
இணையத்தில் மூழ்கியே
இதயம்தான் கெடுவானோ
வளைதளங்கள் அவனைையே
வசியம்தான் செய்திடுமோ
நவமணிகள் பலகுவிக்கும்
நல்வாழ்வு வந்தாலும்
மாளிகையில் வசிக்கின்ற
மாண்பயனே அடைந்தாலும்
வாகனங்கள் பலவாங்கும்
வசதிகளே வந்தாலும்
பஞ்சணையில் படுத்துதினம்
பால்பழமே உண்டாலும்
அடுக்கடுக்காய் பணம்குவித்து
அலமாரி நிறைத்தாலும்
அவதியில்லா வாழ்வுதனை
அவனும்தான் அடைவானோ
புரட்சிக்கு வித்திட்டு
புன்னகை இழப்பானோ
புறம்பேசும் மனிதர்களால்
புவிவாழ்வை வெறுப்பானோ
அரசியல் ஆற்றிலே
அடியெடுத்து வைப்பானோ
ஆட்சியை பிடிக்கவே
அல்லும்பகல் அலைவானோ
என்னதான் நடக்குமென
எப்படிதான் சொல்லுவது
இன்னும்சற்று உறங்கட்டும்
இப்போதே எழுப்பாதே
மல்லிகை மலர்போன்று
மனதாற உறங்கட்டும்
இதயத்தில் சுமையின்றி
இதமாக உறங்கட்டும்
காலை இளங்கதிரை
கால்முளைக்கா பொன்வண்டை
கரைசேர்க்கும் தோணியதை
கன்னம்தொட்டு எழுப்பாதே
தீமைகள் தீண்டுமுன்னே
திகட்டாமல் உறங்கட்டும்
பாவத்தின் சுவடெதுவும்
படும்முன்னே தூங்கட்டும்
இமைமூடும் பேரழகை
இதயம்தான் ரசிக்கட்டும்
இன்னும்சற்று உறங்கட்டும்
இப்போதே எழுப்பாதே.
பாவலர் . பாஸ்கரன்