கதை திரைக்கதை வசனம் புரட்சி
தோழ...நீ
தயாரெனில்
வருமோர் புரட்சி.
புவனம் நோக்கி
மேலும் கீழுமாய்
இடம் வலமாய்
தீயென சுழன்று கல்.
கற்றதை உணர்ந்து
அறிவது தெளி
தெளிவை ஞானமாக்கு.
ஆயுதம் தவிர்...
சிக்கினால் உனக்கு
வாய்தா வாங்கியே
வாழ்நாள் போகும்.
விரும்பியது நன்கும்
எதிர்ப்பதை ஆழமாகவும்
கற்று கற்றதில் கற்று...
புரட்சி செய்வோம் வா...
திட்டம் சொல்.
எங்கே இருக்கிறோம்?
தாழ்ந்தது எதில்?
எங்கே செல்வோம்?
அறிவியல் துணைகொண்டு
மக்கள் தாழ்வாரத்தில்
சிந்தனை உலர்த்து.
நிரூபி நீயே தாய் போல்...
எதுவரினும் இழப்போம்
தியாகத்தின் முகவரியாய்...
எடு ஊது போர்சங்கு.
தோழ... அதுதான் புரட்சி.
இதை நீ தவிர்ப்பின்
மன்னிக்க...
ஒருபோதும்
புரட்சியாகாது
நாய்ச்சண்டைகள்.