ஒரு வேளை சோறு
அங்காடிகள் நிறைந்த
தெருவின் - வாகன நிறுத்தத்தில்,
நாலுருளி (கார்) - இளைப்பாற ;
சுட்டெரிக்கும் - சூரியக்
கூரையின் கீழ்
கால் பதித்தோம்.
மதிய வெய்யிலின்
அக்னிப் -
பார்வையால் - எம்
தோல் கண்கள்,
வியர்வை நீரை
சிந்த !
அதை - வெப்பக் காற்று
ஆவியாக்கி
வாஞ்சயோடு
கொஞ்ச !
நெரிசலில் கலந்தோம்,
மாதாந்திர -
மளிகை சாமான்கள்
வாங்க.
பேரங்காடிக் கடைக்குள்
இருந்த குளுமை
இதமாய் வருட ;
என் இல்லாள் - தன்
கைக் குறிப்பிலிருந்த
ஒவ்வொரு பெயரையும்
பண்டமாற்ற ;
என் பணப் பையின்
தொப்பை மெலிந்தது.
மீண்டும் - வெம்மையின்
போர்வைக்குள்
நடந்தோம்.
வியர்வை முத்துக்கள்
பூக்க - உடைகள் குளித்தன.
காற்று - வெய்யிலால்
சூடாகி - எம் மேல்
வீச !
கண்கள் -
குளிர்பானக் கடையை
தேட ;
கால்கள் - பார்வையின்
தேடலை நாட ;
நடக்கையில்
நான் - கண்ட காட்சி
என்னை
ஒரு கணம்
நிறுத்தியது !!!
சாலையோர
நடை பாதையில்
கிழிந்த குடை,
அதற்குள் - அவன் ?
முகம் நிறைய முடி ;
அழுக்கால்
வேய்ந்த உடல் ;
நிறைய இடங்களில்
பல் இளித்த - உடை ;
அவனிடமிருந்து
வந்தது - இரவு குடித்த
சரக்கின் - வாடை.
பெருத்த வயிற்றை
தலையணையாக்கி ...
சாய்ந்தபடி - அவன்
ஆறு வயது மகள்.
என்றோ கிடைத்த,
உடைந்த - பொம்மை
கையில் !
கிழிந்த உடையோ - அவள்
மெய்யில் !
அழுக்கு, வெய்யில் ,
வாடை - அவளுக்கு
கட்டியம் கூற - பசி
மட்டும் சற்று
எட்டிப் பார்த்தது !
மகளின்
பார்வை - அவனைத்
திருப்ப !
பாசத்தோடு ...
"பசிக்குதா தாயி"
எனக் கேட்க ;
அவள் உதடுகள் - ஆம்
எனச் சொல்ல ;
சட்டைப் பை - சில்லறை
இங்கும் - பண்ட மாற்றம்.
ஆசையாய்
மகள் கேட்டாள் - அப்பா !
உனக்கு ?
பனித்தது - கண்கள் !
விரல்கள்
எனோ - அவன்
சட்டைப் பையை
எட்டிப் பார்த்து
திரும்பியது - ஏமாற்றத்தோடு .
உதடுகள் - நான்
அப்புறமா ....ம் ....
சரி.
...
என் மனம் - இது
படைப்பின் தவறா ?
அன்றி -
படைத்தவனின் தவறா ?
என - வினவ...?
அவன் சரக்கு போடாம
இருந்திருந்தா -
அவனுக்கும் ...
"ஒரு வேளை சோறு "
கிடைச்சிருக்குமில்ல !
இதுக்குப் போய் - சாமிய
கோவிச்சு என்ன
பலன் ?
நாம போலாம் வாங்க !
நேரமாச்சு - இல்லாளின்
குரல் ....
நடந்தோம் - வாகன
நிறுத்தத்தை - நோக்கி.