தமிழ்த்தாய் -----------தமிழ்த் தெய்வ வணக்கம்

தாய்மொழியான வடமொழி (சமஸ்கிருதம் என்னும் அறைச்செயற்கை மொழி உருவாவதற்கு முன் ஆரியர்களால் பேசப்பட்ட பேச்சுமொழி) உலகவழக்கு அழிந்து, ஒழிந்து சிதைந்துபோனது என்று ஆரியத்தின் அகால மரணத்தை தமிழ் மொழியின் சீரிய இளமையுடன் ஒப்பிட்டு, தமிழ்த்தாய் வாழ்த்தில் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்கள் பாடிய பகுதியை நீக்கிவிட்டு, எஞ்சிய பகுதியையே நாம் இப்போது 'தமிழ்த்தாய்' வாழ்த்தாகப் பாடிவருவதை இத்தலைமுறைத் தமிழர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்;




முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்து (UnEdited Version of TamilThai Vazhthu)







பாயிரம்



கடவுள் வணக்கம்



(நேரிசை வெண்பா)







வேத சிகையும் விரிதலையும் மெய்யன்பர்



போதமும் போய் தீண்டாப் பூரணமே - பேதமற



வந்தெனை நீ கூடுங்கால் வாழ்த்துவர்யார் வாராக்கால்



சிந்தனையான் செய்ம்முறையென் செப்பு.







தமிழ்த் தெய்வ வணக்கம்



(பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா)







நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்



சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்



தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்



தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!



அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற



எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!







பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்



எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்



கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்



உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்



ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்



சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!" - மனோன்மணியம் சுந்தரனார்







நீக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தின் பொருள்: "பலவகையான உயிர்களையும், உலகங்களையும், படைத்து, காத்து, இறுதியில் ஒடுக்கும் எல்லையற்ற பரம்பொருளான இறைவன் எந்த மாறுதலுக்கும் உட்படாமல் முன் இருந்தபடியே இருப்பதுபோல், தமிழ் என்னும் ஒருமொழியிலிருந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என்று பல மொழிகள் பிறந்தபோதும், ஆரியமொழியைப் போல, உலகவழக்கு அழிந்து, ஒழிந்து சிதையாமல், என்றும் மாறாத சீரிய இளமையோடு, நிற்கும் திறத்தை வியந்து, எம் செயல் மறந்து வாழ்த்துகிறோம்" என்கிறார் மனோன்மணியம் சுந்தரனார். என்றும் மாறாத, நிலைப்பேறு உடைய இறைவனைப் போல், எம் தமிழ்த் தாயும் என்றும் மாறாத நிலைப்பேறு கொண்டவள் என்று பெருமிதம் கொள்கின்றார் சுந்தரனார்.



மனோன்மணியம் சுந்தரனார் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து மேலும் சில குறட்பாக்களைக் காண்போம்.





கடல்குடித்த குடமுனி உன் கரைகாணக் குருநாடில்



தொடுகடலை உனக்கு உவமை சொல்லுவதும் புகழாமே. (1)





ஒரு பிழைக்கு அரனார் முன் உரைஇழந்து விழிப்பாரேல்



அரியது உனது இலக்கணம் என்று அறைவதும் அற்புதம் ஆமே. (2)







சதுமறை ஆரியம் வருமுன் சகம் முழுதும் நினது ஆயின்



முதுமொழி நீ அநாதி என மொழிகுவதும் வியப்பாமே. (3)







வேகவதிக்கு எதிர் ஏற விட்டதொரு சிற்றேடு



காலநதி நினைக்கரவாக் காரணத்தின் அறிகுறியே. (4)







கடையூழி வரும் தனிமை கழிக்க அன்றோ அம்பலத்துள்



உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே. (5)







தக்கவழி விரிந்து இலகுஞ் சங்கத்தார் சிறுபலகை



மிக்க நலஞ் சிறந்த உந்தன் மெய்ச்சரித வியஞ்சனமே.(6)







வடமொழி தென்மொழி எனவே வந்த இருவிழி அவற்றுள்

கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடு மேற்கு உணராரே.(7)





வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்

கூறு வடமொழி வலமாக் கொள்வர் குண திசை அறியார்.(8)





கலைமகள் தன் பூர்வதிசை காணுங்கால் அவள் விழியுள்

வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார். (9)





பத்துப்பாட்டுஆதி மனம் பற்றினார் பற்றுவரோ

எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணம் இல் கற்பனையே. (10)





வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர்கள்



உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக்கு ஒருநீதி! (11)







மனம் கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்



கனஞ்சடையென்று உருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ. (12)







எனவாங்கு





நின் புகழ்ந்து ஏத்து நின் நெடுந்தகை மைந்தர்

பற்பலர் நின்பெரும் பழம்பணி புதுக்கியும்

பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்

நிற்பவர் நிற்க, நீபெறும் புதல்வரில்

அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்

கொடு மலையாளக் குடியிருப்பு உடையேன்

ஆயினும் நீயே தாய் எனும் தன்மையின்

மேய பேராசை என் மீக்கொள ஓர்வழி

உழைத்தலே தகுதி என்று இழைத்த இந் நாடகம்

வெள்ளியது எனினும் விளங்கு நின் கணைக்காற்கு

ஒள்ளிய சிறுவிரல் அணியாக்

கொள் மதி அன்பே குறியெனக் குறித்தே.





அவையஞ்சின நெஞ்சொடு கிளத்தல்.





(நேரிசை வெண்பா)

அமைய அருளனைத்தும் ஆட்டுமேல் நெஞ்சே

சுமைநீ பொறுப்பதெவன் சொல்வாய் - நமையுமிந்த

நாடகமே செய்ய நயத்தால் அதற்கிசைய

ஆடுவம்வா நாணம் அவம்.





பாயிரம் முற்றிற்று.





(1)ம் குறட்பாவுக்குப் பொருள்: கடலையே உள்ளங்கையில் மொண்டு குடித்த ஆற்றல் வாய்ந்த குடமுனிவர் அகத்தியரே தமிழன்னையாம் உன்னை நன்கு அறிந்துகொள்வதற்காக இறைவனையே குருவாக நாடினார் என்றால், தமிழ்த்தாயே! அலைகடலைத் உனக்கு உவமையாகச் சொல்வது உனக்குப் புகழாகுமா? என்றால் நிச்சயம் புகழாகாது. என்றார் மனோன்மணியம் சுந்தரனார்.





(2)ம் குறட்பாவுக்குப் பொருள்: பாண்டியன் அவைக்களத்தில் தருமிக்காக இறைவனாகிய சிவபெருமான் எழுதிக்கொடுத்த ”கொங்குதேர் வாழ்க்கை” எனத்தொடங்கும் பாடலில் சங்கத்தமிழ்ப் புலவராகிய நக்கீரர் பிழை சுட்டி, இறைவனிடம் வினவ, அதற்கு தகுந்த பதிலளிக்க இயலாது இறைவனே விழித்தாரென்றால் தமிழ்த்தாயே! உனது இலக்கணத்தின் சிறப்பையும் அதன் அற்புதத்தையும் எப்படிப் புகழ்வது.





(3)ம் குறட்பாவுக்குப் பொருள்: வேதங்களும் வேதமொழியான வடமொழியும் தோன்றுவதற்கு முன்பே, உலகம் முழுவதும் ஆதிக்கம் பெற்றுக் கோலோச்சிய ஒரே மொழியாகத் தாயே! தமிழே! நீயே விளங்கினாய் என்பது உன் பழைமையின் சிறப்பை விளக்குவதாய் திகழ்கின்றது.





(4)ம் குறட்பாவுக்குப் பொருள்: சைவ சமயக் குரவரான திருஞான சம்பந்தருக்கும் சமணர்களுக்கும் இடையே நிகழ்ந்த புனல்வாதத்தில், சைவத்தமிழ் ஏடும், வடமொழி சமண ஏடும் வையை ஆற்றில் விடப்பட்டது; அதில் சைவத்தமிழ் ஏடு வைகைநதி நீரில் எதிரேறி கரையை அடைந்தது. வடமொழியில் எழுதப்பட்ட சமண ஏடு வைகை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தமிழானது வையை நதியை மட்டும் எதிர்த்து நீந்திக் கரையேறவில்லை; காலம் என்னும் நதியையையும் எதிர்த்து நீந்திப் பன்நெடுங்காலம் கன்னித்தமிழாய் நடைபோடும் என்பதற்கு அறிகுறியாய் இச்சம்பவம் அமைந்துள்ளது என்று விளக்குகிறது இக்குறள்.





(5)ம் குறட்பாவுக்குப் பொருள்: சிவபெருமான் கடையூழிக்காலத்தில் அனைத்தையும் அழித்தபின், சிவபெருமானே பல்வேறு உலகங்களையும் மீண்டும் படைக்கும் முன் அவர் மட்டும் சிலகாலம் தனிமையில் இருப்பார்; அத்தனிமையை இனிமையாகக் கழிப்பதற்காகத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த திருவாசகத்தின் பிரதியை இறைவனே தன் கைப்படப் எழுதிப் படியெடுத்துக் கொண்டான் என்றால், தமிழ்த்தாயே! உன் சிறப்பை என்னவென்று புகழ்வது என்று வியக்கின்றார் மனோன்மணியம் சுந்தரனார்.





(6)ம் குறட்பாவுக்குப் பொருள்: சங்ககாலத்தில், புலவர்கள் கூடும் அவையில் வைக்கப்பட்டிருந்த சங்கச்சிறுபலகையானது தன்மீது வைக்கப்படுவது தகுதியுடைய தமிழ் நூலாயின் விரிந்து இடம்கொடுத்தது, தகுதியற்றதாயின் சுருங்கி புறம்தள்ளியது எனக்கூறப்படும் செய்தி தகுதியுடையதை மட்டுமே தமிழ் கொண்டுள்ளது என்பதை சிறப்புற விளக்கி நிற்கின்றது.





(11)ம் குறட்பாவுக்குப் பொருள்: " 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்" என, அனைத்து உயிர்களும் பிறப்பால் சமம் என்று அனைத்து உயிர்களுக்கும் சமநீதி உரைத்த வள்ளுவர் அருளிய திருக்குறளை பிழையில்லாமல் நன்கு உணர்ந்தவர்கள், பிறப்பால் , ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுநீதியை மனதால்கூட நினைத்தும் பார்க்க மாட்டார்கள்" என்று சநாதன நால்வருண மனுநீதி சொல்லும் கயவர்களைக் கண்டிக்கிறது மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து.





(12)ம் குறட்பாவுக்குப் பொருள்: ஊனை உருக்கி, மனம் கரைத்து, நம்மைப் பிடித்த அழுக்குகள், தீமைகள் அனைத்தையும் நீக்கவல்ல திருவாசகம் என்னும் இறைத் தமிழில் கரைந்துபோகும் தமிழர்கள், கண்களை மூடிக்கொண்டு, பொருளற்ற வடமொழி மந்திரங்களை ஒருபோதும் ஓதிக் கதற மாட்டார்கள் என்று தமிழன்னையிடம் உறுதிபடத் கூறுகின்றார் இக்குறட்பாடலில் சுந்தரனார்.





இறைமைக் கல்வி கைவரப்பெறாது என்பதால், இறைவனையே குருவாகக் கொண்ட மாணிக்கவாசகர், "கற்றாரை யான் வேண்டேன்! கற்பனவும் (இறைவன் அருளால்) இனி அமையும்; குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே" என்று திருப்புலம்பல் பதிகத்தில் பாடியுள்ளார். ஸ்மார்த்த மதகுருக்கள், சிவபெருமானை வழிபடுவதுபோல் சிவச்சின்னங்களை அணிந்தும், சைவநீதிக்கு எதிரான கொள்கைகளைக் கைக்கொண்டு, ஸ்மார்த்தர்களைப் பிடித்த தீண்டாமைத் தொற்றுநோயை சைவர்களிடையே பரப்பி, சிவபெருமானுக்கு உவப்பில்லாத தீண்டாமையைக் கடைப்பிடிக்கச் செய்வார்கள் என்று மணிவாசகர் இனம் கண்டுகொண்டாரோ என்னவோ, அச்சப்பத்துப் பதிகத்தில்


புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்! பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்!


கற்றைவார் சடைஎம்அண்ணல் கண்நுதல் பாதம் நண்ணி


மற்றுஓர் தெய்வம் தன்னை உண்டுஎன நினைந்து எம் பெம்மாற்கு


அற்றில்லாதவரைக் கண்டால் அம்ம! நான் அஞ்சுமாறே! - திருவாசகம் அச்சப்பத்து:1


என்று பாடினார் போலும்! "புற்றுக்குள்ளே என்ன பாம்பு இருக்குமோ தெரியாது, அதற்கு எனக்கு அச்சமில்லை! இறைவன் தன் திருவடி காணாத பொய்யர்களின் உருவத்தைக் கண்டும் எனக்கு அச்சமில்லை! ஆனால், கற்றை வார்சடை கொண்ட எம் அண்ணல் முக்கண் அப்பன் சிவபெருமானின் திருவடிகளை வழிபடுபவர்போலச் சிவவேடம் புனைந்து, சிவன் அல்லாது மற்றும் ஓர் இறைவன் உண்டு என்னும் சிந்தனையை நம்முள் விதைக்க வரும், போலிச் சைவர்களைக் கண்டு, அம்மம்மா! எனக்கு மிகவும் அச்சமாக இருக்கின்றது" என்று பாடினார் மணிவாசகப் பெருமான். ஸ்மார்த்த குரு சங்கராச்சாரிகள் நம்மிடையே விதைக்க நினைக்கும் சிந்தனை 'தீண்டாமை, தமிழ் மொழி வெறுப்பு, சிவபெருமான் அல்லாத பரப்பிரமம் என்று ஒன்று உண்டு, நீயே அப்பரப்பிரம்மம்' என்பவையே என்று புரிந்து கொள்க.





தீண்டாமையைக் கைக்கொண்டால், சிவபெருமான் நம்மிடமிருந்து நிலையாக விலகிவிடுவான். தமிழ் மொழியால் பாடாவிட்டால், சிவபெருமானுக்கே மிகவும் விருப்பமான, அழகிய சிற்றம்பல உடையானே பெருவிருப்போடு தம் கைப்படவே எழுதி எடுத்துக்கொண்ட திருவாசகம் உங்களுக்கு வசப்படாது; சிவபெருமானும் உங்களுக்கு வசப்படமாட்டான். ஸ்மார்த்தம் கூறும் பரப்பிரம்மம் நீங்கள் பல உலகங்களையும் கடந்து தேடிச்சென்று அடையவேண்டிய பொருள்! உண்மைப் பரம்பொருளான எம்புண்ணியன் சிவபெருமானோ, நாம் இருக்கும் இடத்தைத் தேடி (இங்கு, நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி, செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை -திருவெம்பாவை:17) இம்மண்ணுக்கு வந்து, நம் நிலைக்குத் தன்னையே இழிவுபடுத்திக்கொண்டு, நமக்கு பேரறிவு ஊட்டி, அருள்தந்து, தானே ஆதிப்பிரமம் என்று நமக்கு வெளிப்படுத்தி அருளும் அருளாளன் என்னும் மணிவாசகரின் திருவாசகத்தைக் காண்போம்!

மாது இவர் பாகன்; மறை பயின்ற வாசகன்; மாமலர் மேயசோதி!


கோது இல் பரங் கருணை, அடியார் குலாவும் நீதி குணமாக நல்கும்


போது அலர் சோலைப் பெருந்துறை எம்புண்ணியன், மண்ணிடை வந்து இழிந்து


ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் எம்பிரான் ஆவாரே! - திருவாசகம்:திருவார்த்தை-1


தமிழுக்கு முதன்மை கொடுத்த வைணவம்


பெருமாள் கோவில்களில் பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்களே முதலில் பாடப்படும். வேதங்களுக்கு இரண்டாம் இடம்தான். வைணவம் உடையவர் இராமானுசர் தலைமைக்காலம் தொட்டுத் தீண்டாமையையும், சாதியையும் ஓரளவு வெற்றி கொண்டது என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்தணரல்லாத நம்மாழ்வார் வைணவத்தின் தலைமை ஆழ்வாராக உணர்வுபூர்வமாக அனைத்து வைணவர்களாலும் கொண்டாடப்படும் உன்னதம், வைணவத்தின் 'ஓர் குலம்' வெற்றியைப் பறைசாற்றும்.


நாயன்மார்களின் பக்தி இயக்கம்


நாயன்மாரின் பக்தி இயக்கமே பெரும்பான்மைத் தமிழரகளையும், தமிழையும் ஆரிய, சமண, சாக்கிய களப்பிரர்களின் அடிமைத் தளையிலிருந்து மீட்டது. சைவ சமயக்குரவர்களின் சாதி, வருணம் கடந்த அன்புவழியும், தொண்டும் மக்களை நல்வழிப் படுத்தின. பன்னிரு திருமுறைகளும் சைவர்களுக்குத் தமிழ் மறைநூல்கள் ஆயின. சாதிச் சழக்குகளைச் சமயக் குரவர்கள் சாடியே மக்களை நல்வழிப்படுத்தினர். தேவாரப் பாடல்கள் தமிழ்மொழியை நன்கு வளர்த்தன. சைவசமயச் சாத்திர நூலாகவும், தோத்திர நூலாகவும் திருமூலரின் திருமந்திரம் ஒளிவீசியது.


(பேராசிரியர் ந. கிருஷ்ணன்

எழுதியவர் : (24-Mar-18, 3:07 am)
பார்வை : 14615

மேலே