குடும்பம் ஒரு கதம்பம்

உறவுகள் பலவாய் நிறைந்திருக்கும் –ஒரு
உன்னத உலகம் அங்கிருக்கும்
பறவையாய் மனமும் பறப்பதனால் –நல்
பற்றும் பாசமும் நிறைந்திருக்கும்.

ஒருவருக் கொருவர் உறுதுணையாம் –தினம்
ஒட்டும் துயரம் அங்கிலையாம்
வருவதை பகிர்ந்து மகிழ்ந்திடலாம் –ஒரு
வறுமை என்பதும் தெரியலையாம் !

அண்ணன் தம்பி உறவிருக்கும் –அந்த
அன்பினில் ஒருவித தெம்பிருக்கும்
உண்மை உணர்வுகள் பெருகிடவே –வரும்
ஊறுகள் எல்லாம் ஒதுங்கிருக்கும் !

அத்தை மாமா பாசங்களும் –ஒரு
ஆசையாய் மனதில் நின்றிருக்கும்
நித்தமும் மகிழ்வு அலையடிக்கும்-பெரும்
நிம்மதி அங்கே நிலைத்திருக்கும்.

தாத்தா பாட்டி கதைசொல்ல –பல
தத்துவம் நெஞ்சில் ஊறிவரும்
மூத்தோர் வீட்டில் இருந்தாலே –மனம்
மலராய் மலர்ந்து மணம்வீசும் !

கூட்டமாய் உறவுகள் இருப்பதனால் –வரும்
குறைகள் எல்லாம் தொலைந்துவிடும்
கூட்டுக் குடும்பம் கொண்டாட்டம் –அந்தக்
கொள்கையில் இல்லை திண்டாட்டம் !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (26-Mar-18, 9:21 pm)
பார்வை : 736

மேலே