தாயவள் பூமனம் பெறலாம்

தாயவள் பூமனம் பெறலாம்
=============================
கன்னலின் சாற்றினை கற்கண்டாய் ஆக்கிட
காலங்கள் சென்றேனும் இனிக்கு மே!
இன்னலும் வாட்டிவ தைக்கவே வாழ்வினில்
ஏதேனும் தேனென இனிக்கு மோ!

மின்னலின் வேகத்தில் மேகங்கள் மாறிடின்
மேதினி மீதினில் மாரியுண் டோ!
மின்மினிப் பூச்சிகள் மேலுள பூவொளி
மண்மேனி காரிருள் நீக்கிடு மோ!

சன்னலை எப்போதும் சாத்தியே வைப்பதால்
சாத்தியப் படாத காற்றினைப் போல்
சின்னதாய் நெஞ்சிலே சீண்டிய மோதல்கள்
சீரழித் திடுமே வாழ்வினை யே!

புன்னகை வீசிடும் பூக்களின் வாசனை
போலொரு நேசத்தை பொழிந்தா லே!
தன்னல மற்றதோர் தென்றலாய் கோதிய
தாயவள் பூமனம் பெறலா மே!
*
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (30-Mar-18, 3:11 am)
பார்வை : 97

மேலே