எதிர்பாரா எதிர்பார்ப்புகள்

ஆதவனின் கதிர்கள் ஜன்னல் வழியே அவள் மேனியில் பட, மெல்ல கண் விழித்தாள் ராகவி. சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு இயற்பியல் படித்துக் கொண்டிருந்தாள். கண் விழித்தவுடன், அன்று நடக்கவிருக்கும் கல்லூரி விழாவே அவள் நினைவிற்கு வந்தது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் பொறுப்பு அவளுக்கு வழங்கப்பட்டிருக்க, அன்று முன்கூட்டியே கல்லூரிக்குச் செல்ல நினைத்தாள்.

செல்லும் வேளையில் அவள் மனக்கண் முன் பிம்பமாய் அவனது உருவம் தெரிந்தது. கல்லூரி விழாவிற்குப் பின் செமஸ்டர் பரிட்சைகள் நடக்கவிருப்பதால், மனதால் காதலித்துக் கொண்டிருக்கும் அவனை இனி வாழ்க்கையில் பார்க்கவே இயலாது என்று நினைத்து வருந்தினாள். அவன் மூன்றாம் ஆண்டு இயற்பியல் படித்துக் கொண்டிருந்தான். கல்லூரியின் இறுதி வருடம் என்பதால் இனி அவனை சந்திக்க வாய்ப்பில்லை என்ற கசப்பான உண்மையை நினைத்துப் பார்த்தாள்.

கல்லூரி வாசலில் உள்ளே நுழையும் வேளையில், தனக்காய் காத்திருந்தவன் போல், ராகவ் தன் நண்பனுக்காய் கல்லூரி வாசலில் காத்திருந்தான். இரண்டு வருடங்களாய் இந்த உணர்விற்குப் பெயர் 'காதல்' என்று அறியாமலேயே அவனை காதலித்துக் கொண்டிருந்தாள்.

கல்லூரி விழா இனிதே தொடங்கியது. அவள் நிகழ்ச்சியை தொகுக்கத் துவங்கியதில் இருந்து நிகழ்ச்சி நிறைவடையும் வரை, அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தது போல் ஒரு பிரமிப்பு! ஆயிரக் கணக்கானோர் அமர்ந்துள்ள அரங்கில் அவன் மட்டுமே இருப்பதாய் ஒரு உணர்வு! விழாவும் மகிழ்ச்சிகரமாய் நிறைவடைந்தது. அனைவரும் இவள் நிகழ்ச்சியை தொகுத்த விதத்தை பாராட்ட, அவள் மனமோ ஒருவனது பாராட்டிற்காக ஏங்கியது.

கல்லூரி விழா முடிவடைந்தவுடன் மாணவர்களுக்கு 'ஹால் டிக்கெட்' தருவது அக்கல்லூரியின் வழக்கம். அவ்வாறு 'ஹால் டிக்கெட்' - ஐ பெற்றுக் கொண்டு அவன் வெளியேற முற்படும் வேளையில், யாரையோ பார்க்கும் நோக்கில் ராகவ் திரும்ப, ராகவியோ அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த ஒரு நொடி கண் சந்திப்பில் அவளுக்கு புரிந்தது, அது 'காதல்' என்று!

காதல் என்று அவள் அறிந்து கொண்டாலும், காதலை வெளிப்படுத்த அவளுக்கு தைரியம் வரவில்லை. ஒரு ஜீவன் தன்னை காதலிப்பதை அறியாத ராகவ், கல்லூரி வாழ்க்கையைப் பிரியும் நேரத்தல் தன் கல்லூரியை ஒருமுறை பார்ப்பதற்குத் திரும்பினான். பார்த்துவிட்டு அவன் கல்லூரி வாசலைக் கடந்து செல்வதைக் கண்டு, செய்வதறியாது திகைத்து நின்றாள், ராகவி.


பழைய நினைவுகள் அவளுள் எட்டிப் பார்த்தன. அவனை சந்தித்த முதல் நாளுக்கு மனம் அசை போட்டது. இரண்டு வருடங்கள் பின்னோக்கி நினைத்துப் பார்த்தாள். கல்லூரியின் கலை விழாவிற்காக அவன் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். தன் பேராசிரியரைத் தேடிக் கொண்டு ராகவி அந்த அரங்கைக் கடந்து செல்ல, தண்ணீர் பருகிக் கொண்டிருந்தவனை தற்செயலாய் நோக்கினாள். அவனும் தற்செயலாய் இவளைப் பார்க்க, இவளுக்குள் ஏதோ ஒரு மாற்றம். காதல் என்ற வார்த்தையைக் கூட வெறுத்தவள், காதலிக்க வேண்டாம் என்று காதலிப்பவர்களுக்கு அறிவுரை கூறியவள், ராகவி. அவள் மனதில் அவன் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டதை அறியாமல் அந்த நினைவை ஒதுக்கிவிட்டு கடந்து சென்றாள்.


மறுநாள் "போடு ஆட்டம் போடு நம்ம கேக்க எவனும் இல்ல" என்ற பாடலுக்கு அவன் நடனப் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். பெயர் தெரியா அவன் பெயரை தன் பெயரோடு இணைத்துக் கொள்ள அவள் மனம் நினைத்ததைக் கண்டு வியந்தாள்.


கல்லூரியின் கலை விழா ஏற்பாடுகள் ஒரு புறம் இருக்க, விளையாட்டு தினத்திற்கான போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சோழர் குழுவில் உள்ள ராகவி மற்றும் அவளது தோழிகள், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வெல்ல, அவர்கள் குழு ஒட்டுமொத்த சுழல் கோப்பையை வெல்ல மற்றொரும் ஒரு வெற்றி தேவைப்பட்டது. ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டம் மட்டுமே எஞ்சியிருக்கும் வேளையில், அனைவரும் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். சோழர் குழுவில் இருந்து, 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்க வந்த நால்வரில் அவனும் நின்றிருக்க, ராகவி திகைத்தாள். இறுதியில் அவர்களும் வெள்ளிப் பதக்கம் வெல்ல, சோழர் குழு ஒட்டுமொத்த சுழல் கோப்பையை தட்டிச் சென்றது. ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெற்றி வெற்றவர்களின் பெயர்களை ஒரு பேராசிரியர் வாசித்துக் கொண்டிருந்தார். ராகவ் என்ற பெயரைக் கேட்டவுடன், அது தன் பெயரின் பாதியாய் இருக்க, யாரென்று தெரிந்து கொள்ள ஒரு ஆர்வத்துடன் மேடையை எட்டிப் பார்த்தாள். அப்பொழுது மேலும் ஆச்சரியமடைந்தாள். யாரை மனதினில் நினைத்துக் கொண்டிருந்தாளோ, அவனது பெயர் ராகவ் என்று அறிந்தவுடன் மகிழச்சியடைந்தாள். மனதினுள் பலமுறை அவன் பெயரை உச்சரித்துப் பார்த்தாள்.


இரண்டு நாட்களுக்குப் பின் கல்லூரியின் கலை விழா நடைபெற, அவனுடைய நடனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். பத்து நிமிடம் அவன் ஆடியது, பத்து நொடிகளில் கடந்தது போல் உணர்ந்து வருந்தினாள்.


நாட்கள் கடந்தன. தெளிந்த நீரோடை போல் அவளது வாழ்க்கை சென்று கொண்டிருந்தாலும், மற்றொரு சம்பவம் அவள் எதிர்பாராமல் நடந்தது. ராகவியின் "அறிவியல் உண்மைகள்" என்ற புத்தகத்தை அவளுடைய பேராசிரியர் தொலைத்து விட, சென்ற வருடம் படித்து முடித்தவர்களிடம் அந்த புத்தகத்தைப் பெற்றுத் தருவதாய் கூறினார். இரண்டு நாட்கள் கழித்து, ஒரு புத்தகத்தை அவளிடம் கொடுத்து விட்டுச் சென்றார். புத்தகத்தின் முதல் பக்கத்தைப் புரட்டியவள், அதில் "ராகவ்" என்ற பெயர் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு திகைத்தாள். அவன் எழுதியிருக்கும் சின்ன சின்ன குறிப்புகளையும், விளையாட்டாய் அவன் கிறுக்கியிருக்கும் கிறுக்கல்களையும் மனப்பாடம் செய்யதாள். பல நேரங்களில், அவனைப் பார்ப்பதற்காகவே அவன் இருக்கும் வகுப்பறையைக் கடந்து சென்றாள். இவ்வாறு இந்த இரண்டு வருடங்களில் நடந்த சம்பவங்களை நினைத்துப் பார்த்தாள்.


இரண்டு வருடங்களாய் தன் காதலை வெளிப்படுத்தவில்லை. இனி அவனிடம் தன் காதலைக் கூற இயலாது என்பதை அறிந்தாள். அவனது நினைவுகளின் மூலம் தன் வாழ்க்கையை வாழ்ந்துவிட எண்ணினாள். இவ்வாறு அவள் நினைக்க, விதியோ வேறு நினைத்தது.

பல நாட்களாய் அவனது நினைவுகள் இவள் மனதை விட்டு நீங்கவில்லை. ஒரு நாள் அவள் முக நூலில் செய்திகளை படித்துக்கொண்டிருந்தபோது, 'கெளதம்' என்ற புனைப்பெயருடன் அவனது முகநூல் கணக்கைப் பார்த்தாள். மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.

நட்புக்கான அழைப்பை விடுத்தாள். இரண்டு நாட்களுக்குப் பிறகு முகநூலில் அழைப்பு வந்தது, "கெளதம் உங்கள் நட்புக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டார்" என்று. அவனிடம் பேச வாய்ப்புக் கிடைத்ததென்று மிகுந்த சந்தோஷத்தில் இருந்தாள். அவனுடைய தேர்வு முடிவில் ராகவ் தங்கப் பதக்கம் வென்றிருக்க, அதைப் பாராட்டும் நோக்கில் தன் பேச்சைத் துவங்கினாள். "தங்கப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துக்கள்" என்று அவள் குறுஞ்செய்தி அனுப்ப, அவனோ, "நன்றி தோழியே" என்று அனுப்பினான். அவனின் முதல் வார்த்தையே தன் இதயத் துடிப்பை நிறுத்தி விட்டது போல் உணர்ந்தாள்.

காலை வணக்கம், இரவு வணக்கம் போன்ற குறுஞ்செய்திகளை பகிரத்தொடங்கினர். சென்னையில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில் ராகவிற்கு வேலை கிடைக்க, ராகவியோ தன் மூன்றாம் வருட படிப்பைத் தொடந்து கொண்டிருந்தாள். படிப்பில் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள். அவனும் இவளை நன்கு உற்சாகப் படுத்தினான். அண்ணன் தங்கைக்குக் காட்டும் அக்கறையை அவன் காட்ட, இவளோ வேறு விதத்தில் எண்ணினாள். காதல் கவிதைகளை எழுதத் துவங்கினாள். அக்கவிதைகள் தனக்காக எழுதப்பட்டது என்று அறியாமல் பாராட்டினான்.

ராகவி கல்லூரிக்குச் செல்லும் வேளையில் ஒருவன் இவளை பின் தொடர, ராகவிடம் அதைத் தெரிவித்தாள். அவனோ ஒரு அண்ணனாய் அதில் ஈடுபட்டு, அந்த பிரச்சினையை முடிவிற்குக் கொண்டு வந்தான். அவன் தன்னை தங்கையாய் பார்ப்பதை அறியாத ராகவி, ஒரு நாள் அவனிடம் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டாள்.

பல மணி நேரமாய் பதில் வரவில்லை. இவள் மீண்டும் குறுஞ்செய்தி அனுப்ப, அவனோ, காதலைப் பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று பதில் அனுப்பினான். காதலை வெறுப்பதாய்க் கூறினான். இவள் வற்புறுத்திக் கேட்க, தன் வாழ்வில் நடந்ததைக் கூறினான். பள்ளிப் படிப்பின் போது அவன் தன்னுடன் பயின்ற, காயத்ரி என்ற பெண்ணை காதலித்ததாகவும், கல்லூரிப் படிப்பை தொடங்கிய பின்பும் அவர்கள் காதலித்ததாகவும் கூறினான். ஆனால், ஒரு வருடத்திற்கு முன்பு சில கருத்து வேறுபாட்டில் இவனை பிரிந்து சென்றாள் என்பதையும் கூறினான். மனதில் இடி இறங்கியதைப் போல் உணர்ந்தாலும் காயத்ரி என்ற பெயர் இவளுடைய தோழியின் பெயராய் இருக்கிறதே என்று யோசித்தாள்.

இவளது யோசனையை புரிந்தவன் போல் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான். "உன் தோழி காயத்ரி தான் அவள். எங்கள் வகுப்பறையை நீங்கள் கடந்து செல்லும் வேளையில் உன்னை பார்த்திருக்கிறேன். அவள் உன்னிடம் என்னைப் பற்றி கூறியிருப்பாள் என்று எண்ணினேன். அவள் என்னை விட்டு பிரிந்து சென்றாலும் இன்றும் என் மனதினில் அவள் மட்டும் தான்" என்ற குறுஞ்செய்தியைப் பார்த்ததும் அவள் புரிந்து கொண்டாள். எங்கே அழைத்தாலும் தன்னுடன் வராத காயத்ரி, அவனது வகுப்பறையைக் கடந்து செல்லும் நேரங்களில் மட்டும் தன்னுடன் அவள் ஏன் வந்தாள் என்பதை புரிந்து கொண்டாள்.

ராகவி எந்த பதிலும் அனுப்பாமல் இருக்க, அவனோ, "காதலைப் பற்றி உன் அபிப்ராயம் என்ன தங்கையே? நீ யாரையேனும் காதலிக்கிறாயா?" என்று கேட்டு மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.

"எதிர்பாராமல் வரும் எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றம் தருவது தான் காதல். ஆம். நான் காதலிக்கிறேன். என்னை விட்டு அவர் பிரிந்து சென்றாலும் என்றும் என் மனதில் அவர் மட்டுமே" என்று பதில் அனுப்பினாள்.


அதன் பிறகு முகநூல் கணக்கை அவள் செயல் இழக்கச் செய்து விட்டாள். அவனுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்த்தாள். இவ்வாறு, மூன்று வருடங்கள் கடந்தது.

அன்று ராகவின் பிறந்தநாள். புத்தகப் பிரியரான அவனுக்குப் பிறந்தநாள் பரிசாக ஒரு புத்தகத்தைப் பரிசாகத் தந்து வாழ்த்து கூறி விட்டுச் சென்றனர். அன்று இரவே அந்த புத்தகத்தை படிக்கத் தொடங்கினான். 'ரா' என்ற புனைப்பெயருடன் 'எங்கிருக்கிறாய் என்னவனே' என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்தது. முதல் பக்கத்திலேயே அக்கதை தனக்காக எழுதப்பட்டிருப்பதை உணர்ந்தான். 'ரா' என்ற புனைப்பெயர் ராகவி தான் என்பதை உணர்ந்தான். (இதுவரை நீங்கள் கடந்து வந்த கதையை ராகவி அந்த புத்தகத்தில் எழுதியிருந்தாள். உனக்காய் காத்திருக்கும் நான்...என்று அந்த புத்தகத்தின் கடைசி இருந்தது.)

புத்தகத்தை படித்ததும் ராகவியை காதலித்துவிடுவோமோ என்று பயந்தான். ஒரு வாரம் கழித்து அவன் ஒரு முடிவிற்கு வந்தான். 'நாம் காதலிப்பவர்களை விட, நம்மை காதலிப்பவர்களை ஏற்பது நல்லது' என்று நினைத்து, தன் பெற்றோரிடம் ராகவியைப் பற்றி சொல்ல எண்ணினான். அப்பொழுது அவன் தந்தை அவனை அணுகி, அவனுக்கு திருமணம் நிச்சியக்க அடுத்த நாள் பெண் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறினார். தனக்கு அதிஷ்டம் இல்லை என்று நினைத்துக் கொண்டு மெளனமாய் இருந்து விட்டான்.

பெண் வீட்டில் உள்ளே நுழையும் வேளையில், காயத்ரி வாசலில் நின்றுகொண்டிருக்க ராகவ் அதிர்ச்சி அடைந்தான். ஆனால், அவளோ தன் கணவனை இவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்து, உள்ளே அழைத்தாள். வீட்டின் மேஜையில் 'ரா' என்ற புனைப்பெயருடன் அந்த புத்தகத்தையே முதலில் கவனித்தான். அந்த புத்தகத்தை இவன் பார்ப்பதை உணர்ந்த அங்கிருந்த ஒருவர், அது நீங்கள் பார்க்க இருக்கும் பெண் எழுதியது தான் என்று கூற, மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தான்.

இதை அறியாத ராகவி, கடமைக்காக அங்கே வந்து தலை நிமிறாமல் நின்றுகொண்டிருந்தாள். ஏதோ ஒரு உணர்வு தோன்ற, தலை நிமிர்ந்து அவள் பார்க்க, ராகவ் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தாள். தன்னுடைய பார்வையிலேயே தன் காதலை அவன் உணர்த்தி விட்டதாய் உணர்ந்தாள். 'உனக்குள் தான் இருக்கிறேன் என்னவளே...' என்று அவன் கூறுவது போல் இருந்தது. இனி அங்கே மகிழ்ச்சி அலைகள் மட்டுமே...!

எழுதியவர் : ரம்யா கலைவாணி (1-Apr-18, 11:29 am)
பார்வை : 499

மேலே