மை டியர் குட்டிச்சாத்தான்

என் தொழுவத்தில்
எனக்கு தென்படும்
என் மரணம்.
பார்க்கையில் சிரிப்பான்.
இனிமையாக பேசுவான்.
அற்புதமான தோழன்.
சொல்வது எல்லாம்
மாறாப்புன்முறுவலில்
கேட்டுக்கொள்வான்.
எப்போது நீ வருவாய்
என கேட்டால்
தோள்பற்றி சிரிப்பான்.
உறுத்தி பற்றுகையில்.....
உதிரும் ஒவ்வொன்றாய்.
ஒன்றிலிருந்து ஒன்று
பிரிந்து உதிரவும் பிரியும்.
நிறங்களில் ஸ்வரங்களும்
மின்னலில் தூறலும்
உதிரும் ஒவ்வொவொன்றாக,
ஆர்வத்தில் ஆவலும்
ஆவலில் காமமும்
கனவில் நினைவும்
நினைவில் கவனமும்
ஒவ்வொவொன்றாக பிரியும்.
உன்னில் நானும்
என்னில் அதுவும்
அதனில் எதுவும்
உதிர்ந்து பிரியும் அணுவென.
கொந்தளித்து அடங்கும்
நீ சாட்டிய காட்சியில்
நீ காட்டிய சாட்சிகளும்.
உன்னை நீயே
விழுங்கும் சடங்கில்
புகையும் உன் பெருமைகளும்.
சுட்டிக்காட்டும்...
வெளியெங்கும் நீ
பொறுக்கிச்சேர்த்த
ஞானக்குப்பையில்
உன் கூர் அறிவு
நொறுங்கி துகளும் கடுவொலி.
என் விழி துடைத்து
விரல் நீட்டி காட்டும்...
உன் பரிவில்
வால் திரிக்கும் திமிரை.
கூர்ந்து நோக்கினால்
உன் அசலில் நரகமும்
நகலில் உன்மத்தமும்.
இன்னும் கூட
காட்டியது அன்பு மரணம்...
உலகமே கொண்டாடும்
உன் இறையுணர்வில்
நாணிக்கவிழும் கடவுளை.

எழுதியவர் : ஸ்பரிசன் (4-Apr-18, 7:14 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 73

மேலே