நெருப்பின் தாகம்

நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு:: 17-03-2018

நன்றி:: கூகிள் இமேஜ்

“தீ என்று சொன்னாலே சுட்டுவிடுமா” என்று விளையாட்டாகச் சொல்வதுண்டு, ஆனால் இன்றைக்கு தீ என்று சொன்னாலே பயப்படுமளவுக்கு தீயினால் நடந்த கொடுமைகளை நாம் என்றைக்கும் மறக்க முடியாது.

சமீபத்தில் நடந்த குரங்கணி காட்டுத் தீயில் கருகி இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மடிந்தனர். கும்பகோணம் நர்சரிப் பள்ளித் தீவிபத்தை நினைத்தாலே மனம் வெந்து விடுகிறது. மனநோய்க் காப்பகத்தில் நடந்த தீவிபத்து முதல் மேலும் பலவற்றை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்..

தினமணி கவிதைமணியில் வெளியான “நெருப்பின் தாகம்” என்கிற கவிதையை வருத்தமுடன் வாசிப்போம் வாரீர்..

=================
நெருப்பின் தாகம்..!
=================

நெருப்பின் துணையின்றி உலகம்தான் இயங்குமா?
..........நீரும் நெருப்புமின்றி நீடித்துயிர்வாழ முடியுமா.?
இருட்டறையில் சூழ்ந்துள்ள இருள்தான் விலகுமா?
..........உருப்படியான காரிய மெதற்குமதன் ஆசிதேவை.!
உருவபொம்மை எரிக்கவும் உயிர் போனபின்னால்
..........உடலைச் சாம்பலாக்க அக்கினி அவசியம்தான்.!
பருவத்தில் தோன்றும் தாகத்தைக் காதல்தீர்க்கும்
..........பசிநெருப்பின் தாகமோ பாருலகையே யழிக்கும்.!



எண்ணை வளமிகுந்த சிரியாவோர் அரபுநாடாம்
..........எல்லோருக்கும் இதன் மேல் பொறாமையுண்டு.!
பண்ணைக் கால்நடை வளர்ப்பில் முன்னோடியது
..........பகலிரவாய் மதயினக் கலவரத்தால் எரியுதின்று.!
பிண்டம் தேடும் வல்லூறுகளிதை வட்டமிடுகிறது
..........பற்றியெரியும் நெருப்பின் தாகமடங்கும் வரை.!
கண்ணை மூடிக்கொள்ள வைக்கும் கொடுமைக்
..........கலவரத்தால் “சிரியா” சிறிய நரகமாகிவிட்டதா.?



அரசனின் மாளிகை..அவனாண்ட நாட்டையுமே
..........எரித்து சாம்பலாக்கியது கண்ணகியின் சாபம்.!
கரத்தாலொடுக்க முடியாக் காட்டுத்தீயில் சிக்கி
..........காளையர் கன்னியர் குரங்கணித் தீக்கிரையானர்.!
அரவணைத்து முத்தம் தந்தனுப்பிய பிஞ்சுகளை
..........அரும்பை...பள்ளியிலே எரித்ததன் தாகம்தானே.!
பரவிய நெருப்பின் தாகத்தைத் தணிக்க முடியாது
..........பல்லுயிரும் எரிந்து மடியுதிங்கே காரணமின்றி.!

================================================

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (5-Apr-18, 6:57 pm)
பார்வை : 277

மேலே