என் தெரு வாடுகிறது
அனுதினமும் அழைந்த தெருவில்
ஆதரவற்று நின்றேன்
இரவு வேகம் கொண்டு
என் உடைமைகளை உருவியபோது.
சில வீடுகளும் இருந்தும்
அதில் மாந்தர்களும் வசித்தும்
யாருக்கு யாரும் நண்பரில்லை.
பேசிப்பழகி கண்டதில்லை.
தெரு வாடியது..
என் அண்டை மனிதர்கள்
சுவாசமின்றி!
கண்களில் நீர் தழும்பியது.
என் தாயின் நினைவான
தங்கச் சங்கிளி.
எனது அன்றைய பிறந்த நாளுக்கு
மொபைல்.
அன்னை இல்லாத எனக்கு
அன்னையாய் உருவெடுத்த
அப்பாவின் அன்றைய அன்பு பரிசு.
என் அப்பாவிற்காக
நான் ஆசையாய் வாங்கிய கேக்.
என் காதலன் பரிசளித்த
மோதிரம்.
தன் காதலைக் கூறிய
என் உயிருக்கும் மேலான
என்னவனின் காகிதம்.
மீட்க முயன்றேன்
கால்களுக்கு வலு கொடுத்து.
தாக்க முயன்றேன்
கைகளுக்கு வெறி கொடுத்து.
இரவை எட்டிப் பிடித்தேன்.
தெரு வாடிக்கொண்டே இருந்தது.
என் அண்டை மனிதர்கள்
சுவாசமின்றி!
இரவு என் மூச்சை
நிறுத்த நினைக்கும் முன்
மோகம் கொண்டது போல.
என்னையும் உடைமையாக்கியது.
வலித்தது எனக்கு.
அலறினேன்.
தெருவின் செவிக்கு எட்டியது.
நன்றாக எட்டியது.
எட்டியது.
தெரு வாடிக் கொண்டேதான் இருந்தது.
அண்டை மனிதர்கள் சுவாசமின்றி.
அழுதேன்.
சோர்ந்தேன்.
மானமிழந்தேன்
புளுவாய்த் துடித்தேன்.
இரவின் கைகள்
நான் மூச்சு விட வழி மறுத்தது.
கத்த வழியில்லை.
அதைக் கேட்க பிறர் செவியுமில்லை.
என் உயிர் மெல்ல பறக்கும்போது
தெரு மௌனமாக அழுதது.
என் பினம் நாதியின்றிக் கிடந்தது.
பல காலங்களும் கடந்தது.
இன்னும் தெரு
வாடுக்கொண்டுதான் இருக்கிறது.
என் அண்டை மனிதர்கள்
சுவாசமின்றி.
அதை நான் விண்ணிலிருந்து பார்க்கிறேன்.