அது ஒரு கனாக்காலம்
குறும்பு இரத்தம்
கொப்பளிக்கும்
அரும்புமீசைப் பருவத்தில்
எனது
பழைய ஹெர்குலிஸ்
ஏறி
அவளின்தெருவழியே
பவனிவருவதுண்டு.....
கொலுசு அணிந்த
அவளின்
கெண்டைக்கால் தெரிய
தாவணியையும் பாவாடையையும்
வழித்துச்சுருட்டி
முழங்காலில் இடுக்கியபடி
அமர்ந்து
எட்டுப்புள்ளி நேர்ப்புள்ளி
இடுக்குப்புள்ளியெல்லாம்
வைத்து
தெருவடைத்துக் கோலமிடுவாள்.......
நெற்றியில் விழும்
கொத்துமுடியை
ஒதுக்கும் சாக்கில்
படமெடுத்தபடி
தலைஉயர்த்தும்
நல்லபாம்புகணக்காய்
ஊடுருவும் அவளது
பார்வையில்
புகைப்படலத்தினூடே தெரியும்
கோட்டோவியங்களாய்
நண்பர்கள்புடைசூழ நிற்கும்
நான் மட்டுமே
பட்டவர்த்தனமாய்-
தெரிவேன்.........!
கர்ப்பக்கிரகத்து சாமியைக்
கரம்உயர்த்திச் சேவிக்கக்
காத்திருக்கும்
அற்ப பக்தர்களாய் நிற்கும்
எங்களை நோக்கி
தொடப்பக்கட்டையின்
அடிப்பாகத்தை
உள்ளங்கையில் குத்திக்காட்டி
ஓங்கரித்து
அடிவயிறு எக்கி உமிழ்ந்துவிட்டு
ரௌத்திரக்காளியாய் -
அருள்பாலிப்பாள்.........
கரைத்த சாணிச்சட்டியைக்
கையில் ஏந்தியபடி......
ஒன்றுமறியாமல்
வயக்காட்டில் உழன்று
உழைத்துக் கொண்டிருக்கும்
எங்களது
தாய்தமக்கைகளையும்
எப்போதோ மறைந்துபோன
எங்கள்
மூன்று தலைமுறை அப்பத்தாக்களையும்
அம்மத்தாக்களையும்.. ...
எங்களுக்கே மறந்துபோன
ஒன்றுவிட்ட இரண்டு விட்ட
பூர்வாங்கக் குலகோத்திரச்
சொந்தங்களையும்
சந்திக்கு இழுத்து வந்து
கழுவி ஊற்றிக் கொண்டிருப்பாள்
அவளது -
பாட்டி...........
தெருமுக்கிலிருக்கும்
பிரித்தியங்கராதேவிக்கு
நெய்விளக்கேற்ற
வாரமொருதடவை
வந்துபோகும் அவளுக்கு
பாடிகார்டாக
கடோத்கஜ அண்ணனையும்
பழிகாரப்பாட்டியையும்
அழைத்துவந்து
எலும்பும்தோலுமான எங்களின்
ஈரக்குலை -
நடுங்கவைப்பாள்.....!
எங்களின்
கவன ஈர்ப்பு தீர்மானங்களை
அவள்
கண்டுகொள்ளாமல்
கடந்துபோவதற்கு
அலாவுதீன் பூதம்போன்ற
அண்ணனும்
மூக்குசிந்தும் கைக்குட்டைகளாய்
பாவித்து எங்களை
அசூயையுடன் நோக்கும்
அவளின் பாட்டியுந்தான்
காரணகர்த்தாக்களென்பதைக்
கட்டக்கடைசியில் தான்-
கண்டுபிடித்தோம்........
பேசரிமின்ன
லோலாக்கு குலுங்க
நெற்றிச்சுட்டியும்
ஒட்டியாணமும் அணிந்து
முழங்காலைக் கட்டிக்கொண்டு
கூண்டுவண்டியேறி
அவள் எங்களைக்
கடந்துபோன
கடைசிநொடியில்தான்
கவனித்தேன்
உறைந்த விழிகளிலிருந்து
வழிந்து
கன்னத்தில் இறங்கிக்கொண்டிருந்த
அந்தக் கண்ணீர்
என் மீதான
காதலாகவும் -
இருந்திருக்கக்கூடும்........!
அழ. இரஜினிகாந்தன்