எந்தத் திசையில் இந்தப் பயணம்

அவனை நான் வெறுக்கின்றேன்
ஆகையினால் ஒதுங்கி நிற்பேன்
எது வந்த போதினிலும்
அவன் வாசல் நான் மிதியேன்.

அவனை நான் வெறுக்கின்றேன்
ஆகையினால் அழித்திடுவேன்
எது வந்த போதினிலும்
அவன் வாழ அனுமதியேன்.

அவன் வீட்டில் ஓர் இழப்பு
ஓடிச் சென்று உதவிடுவேன்.
அவன் மன ஆறுதல் பெறவே
அவனுடனே நின்றிடுவேன்.

அவன் வீட்டில் ஓர் இழப்பு
பின்னொருநாள் கேட்டிடுவேன்
அவன் மன ஆறுதல் பெறவே
அதை நானும் செய்திடுவேன்.

குடும்பத்தினர் அனைவருமாய்
கூடி நாளும் உண்டிடுவோம்
கூடலிலே இன்பம் உண்டு
குறிப்பறிந்து வாழ்ந்திடுவோம்.

குடும்பத்தினர் அனைவருமாய்
கண்டு பழக நேரமில்லை
கூடலிலே இன்பம் உண்டு
என்பதெல்லாம் பழையகதை.

அண்டை வீடு அயல் வீடு
உறவு தேவை வாழ இங்கு
ஆபத்தில் உதவி செய்ய
அவர் ஓடி வருவர் கண்டு.

அண்டை வீடு அயல் வீடு
யாரெனவும் தெரியாது
ஆபத்தில் உதவி செய்ய
ஒருவருமே கிடையாது.

பாரதத்தின் பண்பாடு
பாரினிற்கே வழிகாட்டும்
அதையொற்றி வாழ்ந்திடவே
நாளும் நல்லின்பம் தரும்.

பாரதத்தின் பண்பாடு
மேலை நாட்டிற்கீடாமோ
அதையொற்றி வாழ்ந்திடவே
என் விருப்பம் தடுக்காதே.

பெரியோர்கள் சொற்களையும்
மதித்தே நாம் நடந்திடுவோம்.
இறைவன் உண்மை என்பதனை
ஏற்று வாழ்வில் உய்ந்திடுவோம்.

பெரியோர்கள் சொற்களையும்
எதிர் கேள்வி கேட்டிடுவோம்
இறைவன் உண்மை என்பதனைக்
கேலி பேசித் திரிந்திடுவோம்.

ஆக்கம்.............................பாபு

18/04/2018...................புதன்.
காலை.07.45...............எண்.322.

எழுதியவர் : பாபு. ச (19-Apr-18, 8:02 am)
சேர்த்தது : BABU
பார்வை : 140

மேலே