காடு
வெள்ளையனிடம் சுதந்திரம்
அடைந்துவிட்டது நாடு
இன்னும் கொள்ளையரிடம்
சுதந்திரம் அடையவில்லை காடு
தரங்கனிகள் நிறைந்த காடு
குரங்கனிகளாய் மாறிவிட்டது
பூப் பற்றி ஏரியவேண்டிய காடு
தீப்பற்றி எரிகின்றது
அணைக்க நீரின்றி விவசாயி வயிற்றைப்போல்
பச்சை எடுக்கவேண்டிய காடுகள்
பிச்சை எடுக்கின்றன
பயிர்களைக் கொடுத்த காடுகள்
உயிர்களை எடுக்கின்றன
மரங்கள் வளராமல் காட்டில்
நமக்கெப்படி கிட்டும் கட்டில்
வீரப்பன் கண்ணி வைத்தான்
எந்தக் கன்னி மீதும் கண் வைத்ததில்லை
அவன் இருந்தால் கன்னடம்
ஒக்கேனக்கல் வேண்டுமென்று பிடிக்குமா அடம்
மீறி பிடித்தால் அவன் பிடித்துச் சென்றுவிடுவான்
காடுகளின் மடியில் வீடுகள்
அமர்ந்துவிட்டதால்
வீடுகளின் மாடியில் காடுகள்
அன்று
காடு விளைந்தால்
கையும் காலும் மிச்சமிருந்தது
இன்றோ கயிறும் பாலும் தான் மிச்சம்
விவசாயிக்கு
கிளியோடு வளர்ந்த காடுகள்
இன்று கிலியோடு வலியோடு வளர்கின்றன
மரங்கள் மழையினை
மண்ணுக்கு அழைக்கும் அழைப்பிதழ்கள்
அழைப்பிதழைக் கிழித்துவிட்டு
காவிரியை அழைக்காதீர்
காடுகள்
இயற்கை அன்னையின் இருக்கைகள்
மரங்களும் மாக்களும் இயற்கையின் இரு கைகள்
இருகைகளையும் வெட்டிவிட்டால்
இயற்கை அமர ஏது இருக்கை ?
நாம் அருந்த ஏது பருக்கை ?
மனிதா எப்போது உணர்வாய் உன் செருக்கை ?
ஏ மனிதா
காடுகள் விலங்குகள் வாழும் கூடு
இதை என்றுதான் விளங்கப்போகின்றது உன் கூடு