வாழ்வுக்கும் தொழிலுக்கும் வகையாயொரு யோசனை

வாழ்வுக்கும் தொழிலுக்கும்
வகையாயொரு யோசனை..!
=========================


உப்புநீரில் மீன்பிடிக்க ஓராயிரம் வழியுண்டு
..........ஓரளவு தேர்ச்சிபெற்றால் மட்டுமே சாத்தியம் *
கப்பலிலே சென்று மீன்பிடிக்கும் வகையால்
..........கரைசேராமல் தவிக்கும் அபாயம் அதிலுண்டு *
தப்பாமல் கரைதிரும்பி வந்து விடுவாரெனத்
..........தகுந்த பதிலொன்றும் சொல்வ தற்கில்லையே *
அப்பாவை எதிர்பார்த்து அவர் குழந்தைகள்
..........அலைகடலை நோக்கி நாளும் காத்திருக்கும் *



வெப்பம்மழை சூறாவளி சுழலும் பேரலையிவ்
..........விதுவெலாம் இவர்களுக் கொரு பொருட்டல்ல *
சிப்பாய்கள் சீருடையில் சிட்டாகப் பறந்துவந்து
..........சிறை யெடுப்பார்!தானியங்கித் துப்பாக்கியுடன் *
முப்போதும் விழித்து மீன்பிடிக்கும் தொழிலில்
..........முதலில் கரைசேருவதுதன் அதிலே முக்கியம் *
இப்போதும் கரைதிரும்பாத எண்ணற்ற பலர்
..........இருந்தும்..யாரும் கண்டுகொள்ளா நிலைதான் *



ஒப்பாரி வைத்தழுதால்கூட இங்கு ஒருவருமே
..........உதவிக்கு வரமாட்டார் ஒதுங்கியே நிற்பாரவர் *
எப்போதுமிருக்கும் ஆபத்தைப் புரிந்து கொண்டு
..........இதற்கொரு வழியும் மீன்வளமும் தேடவேணும் *
இப்பவும் நாம் பார்க்கின்றோம்...கிராமத்தில்
..........இருகையால் வலைவீசி மீன்பிடிப்பதை!அதிலும்*
துப்பட்டாவை விரித்து மீன்பிடிக்கும் சிறுவர்
..........செயலே சிறந்ததுபோல் சிலசமயம் தோன்றும் *

==================================================
வல்லமை படக்கவிதைப் போட்டிக்குச் சமர்ப்பிவிக்கப்பட்டது

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (23-Apr-18, 3:32 pm)
பார்வை : 135

மேலே