கண்ணீர் குடித்து தாகம் தீர்த்துக்கொள்

வந்துவந்து சென்றேன் மனிதா
உன்னிடத்தில் மழையாக
வாழ நினைத்தேன் மனிதா
நானும் ஓரிடத்தில் நிலையாக
வான்மேகம் என்னை கைவிட்டதேனோ?
வழிநெடுக வழிந்தொழுகி ஓடவிட்டதேனோ?
வயல்சேர்க்காமல் என்னைநீ வற்றவிட்டதேனோ?
வணிகமென்ற பெயரில் விற்றுவிட்டதேனோ?
அணையேதும் நீ கட்டவில்லை
ஒரு குளம் கூட வெட்டவில்லை
சிறு குட்டையிலும் சேர்க்கவில்லை
ஏன் விழுந்தேனோ? மண்ணில் மழையென நான்..
என்செய்வேன்? மனிதா இனிநான்..
காட்டிலே மரங்களில்லை கண்ணீராய் ஓடினேன்
ஆற்றிலே மணலுமில்லை அகதியாய் ஓடினேன்
எரிகளே எங்குமில்லை ஏக்கத்துடன் ஓடினேன்
ஓடையிலும் ஓடினேன் கோடையிலும் ஓடினேன்
குளிர் வாடையிலும் ஓடினேன்-ஓடினேன் ஓடினேன்
ஓலக்கடலில் நான்கலந்து ஓயும்வரை ஓடினேன்
உன்னை வளமாக்க வந்தவன் நான்
என்னை வழிமாற்றி விட்டவன் நீ
வருணனும் இப்போது வறண்டு போனான்-மனிதா
உன்செய்கை கண்டே அவன் மிரண்டு போனான்
வருங்காலம் வறட்சிக்கு எதிர்காலம்
வறுமைக்கு இனிதான் பொற்காலம்???
இனி கண்ணீர் குடித்து தாகம் தீர்த்துக்கொள்....
------------------------------ அருணன் கண்ணன் ------------

எழுதியவர் : அருணன் கண்ணன் (26-Apr-18, 3:43 pm)
சேர்த்தது : அருணன் கண்ணன்
பார்வை : 170

மேலே