மீண்டும் உயிரூட்டு

மீண்டும் உயிரூட்டு

என் சொல் கூட்டத்துக்கன்று
வாக்கிய அந்தஸ்து தந்தாய்!
பேசாமல் பிறகு போய்விட்ட
எனது தமிழ் ஆழமே. அழகே!
இன்று தமிழின் கரையில்
தவிக்கும் மீனாகிவிட்டேனே!
என் காதுக்குத் தேனொலி
அறிமுகப் படுத்திவிட்டு இன்று
உன் விபரீத மௌனத்தால்
அபசுரங்களுக்கு என்னைத்
தத்துக் கொடுத்த சங்கீதமே!
உன் பிராயச்சித்தங்களாலே
என்னைப் பாவங்களின் பலன்
எதுவும் அண்டாமல் காத்தாய்.
எங்கு போனாய் புண்ணியமே!
என் பாவங்களால் தனியாக
இங்கேயே நரகம் அமைந்தது!
இல்லாத ஏதோ தினம் இயற்றி
என் புகழை எங்கும் சொல்லி
பீடத்தில் விட்டுப் போய்விட்ட
பழமையற்ற காவியமே! நான்
இறங்கத் தெரியாமல் விழுந்து
உடைந்து கிடக்கிறேன் இங்கே.
சுவாசக் காற்றிலிருந்து சரியாக
ஆக்ஸிஜன் பிரிக்கத் தெரியாத
எனக்கு எல்லாம் சொல்லிப் பின்
காணாமல் போன கல்லூரியே!
என் மூளைக் கணினியில் நீயே
மென் பொருள் இட்டு வைத்தாய்!
இன்று வைரஸ் அட்டகாசம்.
பொருள் மீண்டும் பொதித்து
அர்த்தமுறச் செய்ய நீ எங்கே?!
சீட்டுக் கட்டு ராஜாவான என்னை
அரசாள அமர்த்திவிட்டு நீ
எங்கே போனாய் அரியணையே!
என் நாட்டுக்குள்ளேயே நான்
நாடுகடத்தப்பட்ட நாடோடியா?
என் செங்கோலாய் மீண்டுவா.
என் சொல்லாய், கவிதையாய்,
அறிவாய் சடுதியில் வருவாய்!
என் உலர்ந்த உதட்டுக்கு நீ
ஈரம் தா இனியாவது தினம்.
மென்பொருள் வன்பொருளில்
மெதுவாய் ஊட்டி உயிரூட்டு!!!

எழுதியவர் : திருத்தக்கன் (8-May-18, 10:52 am)
சேர்த்தது : திருத்தக்கன்
Tanglish : meendum uyiroottu
பார்வை : 182

மேலே