பிறந்த நாள்

ஒவ்வொரு பிறந்த நாளுக்கும்
என் அம்மாவின் வாழ்த்துக்கு காத்திருந்தாலும்
எனக்கு, நானே முதலில் வாழ்த்து
சொல்லிக் கொள்பவள்

வார்த்தைகளாய் இருந்த வாழ்த்துக்களை
இன்று முதல் முறையாய்
எழுத்துகளில் வடிக்க ஆசை கொண்டேன்

பழையன கழிதலும்
புதியன புகுதலும் தான் வாழ்க்கை
ஆனாலும்
மறக்க முடியாத சில...
நினைவுகளாய் ஆழ் மனதில்
சிறிது தேங்கியுள்ளது

சிறு புள்ளியாய் அம்மாவின் கருவறையில்
தொடங்கியது என் வாழ்க்கைப் பயணம்

எங்கும் இருள் சூழ்ந்திருந்தது
ஆனால் எனக்குப் பயமில்லை

நீர் சூழ்ந்திருந்தது
ஆனால் நான் மூழ்கிப் போகவில்லை

தனிமையில் தான் இருந்தேன்
அம்மாவின் குரல் மட்டும்
எனக்குத் துணையாய் இருந்தது

இடம் போதவில்லை தான்
ஆனாலும் வசதிக்குக் குறைவில்லை

என் அம்மா மரண வலி கொண்டு
எனக்கு உலகைக் காட்டினாள்

பெற்றோரின் சாயல் கலந்து
எனக்குப் புது உருவம் தந்தான் இறைவன்

என் முகம் கண்டு
மரண வலி மறந்து
கண்களில் கண்ணீருடன்
புன்னகை பூத்தாள்

வழியை மறந்த அந்த
புன்னகையால் தான்
என் பிறந்த நாளை நானும்
ஆனந்தமாய் கொண்டாடுகிறேன்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உயிர் கொடுத்த இறைவனையும்
உயிர் சுமந்த பெற்றோரையும்
என்றும் மறக்காதே
என்னுடைய வாழ்த்து
என் பிறந்த நாளுக்கு

எழுதியவர் : கீர்த்தி (10-May-18, 10:56 am)
சேர்த்தது : கீர்த்தி
Tanglish : pirantha naal
பார்வை : 61

மேலே