பட்டியல் திருத்தம்

பட்டியல் திருத்தம்

இந்த உலகில் எனக்குப் பிடித்த
இன்ப சாகசங்கள் எத்தனையோ!
கோடையிலே மழையை நினைவூட்டி
மழையிலே குடையை நினைவூட்டும்
அவள் கூந்தலில் தொடங்க வேண்டும்.
அளவாலே கடலை நினைவூட்டிக்
கனிவாலே கடவுளை நினைவூட்டும்
அவள் காவியக் கண்களில் தொடர்வேன்.
எண்ணத்தில் வந்து மூச்சை நினைவூட்டி
மூச்சு அவளது மணம் நினைவூட்டும்
அவள் நாசி பற்றிப் பேசவேண்டும்.
செல்வத்துள் செல்வம் நினைவூட்டிக்
கவிதை செய்ய எனக்கு நினைவூட்டும்
அவள் செவிபற்றிச் சொல்ல வேண்டும்.
தமிழின் பெருமையை நினைவூட்டி
தமிழுக்கே இனிப்பை நினைவூட்டும்
அவள் இதழிரண்டால் பட்டியல் வளரும்.
இத்தனை கொடுத்த நினைவால்
அத்தனையும் நினைவூட்டி
அந்த நினைவினால் எனக்கு உயிரூட்டிக்
கனவிலே எனக்கு வாழ்வுண்டு.
அந்தக் கனவு வாழ்வு பட்டியலில்.
பிடிக்காதது என்னவென்று நான்
விழித்த இன்று சிந்தித்தேன்.
நிஜம் மட்டுந்தானென நெஞ்சம் சொன்னது.
நிமிர்ந்தமர்ந்துவிட்டேன்.
பழைய பட்டியல் கையில்!

எழுதியவர் : திருத்தக்கன் (11-May-18, 3:26 pm)
சேர்த்தது : திருத்தக்கன்
பார்வை : 59

மேலே